கடலுணவுகளில் அநாவசிய அச்சம் கொள்ள வேண்டாம் – கஞ்சன விஜேசேகர

அர்ஜுன்

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் பின்னர் கடல் உணவு நுகர்வு தொடர்பில் மக்கள் அநாவசிய அச்சம் கொள்ளத் தேவையில்லையென ஆரம்ப கட்ட பரிசோதனை அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அலங்கார மீன்கள், நன்னீர் மீன்கள், இறால் வளர்ப்பு, கடற்றொழில் துறைமுகங்கள் அபிவிருத்தி, பல நாள் கடற்றொழில் அலுவல்கள் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

கப்பல் விபத்தின் பின்னர் கடற்றொழிலின் எதிர்காலம் குறித்து தொடர்ச்சியான ஆராய்ச்சிகளும் ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். கடற்றொழிலின் தற்போதைய நிலைமைகள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைக் கூறினார்.

இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:

கே: உங்களின் அமைச்சுக்கு நீண்டதொரு பெயர் காணப்படுகிறது. இதிலிருந்தே எமது கலந்துரையாடலை ஆரம்பிப்போம்.

பதில்: இராஜாங்க அமைச்சுக்களுக்கு தனியான பொறுப்புகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஜனாதிபதியும், பிரதமரும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தனர். ஒரு பக்கத்தில் பார்க்கும் போது எமது பணியை சிறப்புறச் செய்வதற்கு இது வசதியாக அமைந்தது என்று கூறலாம். இதனாலேயே பெயர் பெரிதாக அமைந்துள்ளது. பொதுவாக கடற்றொழில் துறை எனக் கூறும் போது அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் பற்றி விரிவாக எவருக்கும் தெரியாது. எனினும், இராஜாங்க அமைச்சுக்கு என கடற்றொழில் துறையில் உள்ள பல விடயங்களை உள்ளடக்கிய பொறுப்புக்களை வழங்கும் போது அவை குறித்த இலக்குடன் எம்மால் செயற்பட  முடிகிறது.

கே: இலங்கையில் கொவிட் தொற்று நோயின் இரண்டாவது அலை மீன்பிடித்துறையுடன் சம்பந்தப்பட்டதாக இருந்தது. அப்போது இதனைக் கட்டுப்படுத்த அமைச்சு என்ற ரீதியில் நீங்கள் எவ்வாறு தலையிட்டிருந்தீர்கள்?

பதில்: சுனாமி அனர்த்தத்தின் போதே மீன்பிடித்துறை இதுபோன்றதொரு சவாலுக்கு முன்னர் முகங்கொடுத்திருந்தது. இதன் பின்னர் மீன்பிடித்துறை எதிர்கொண்ட பாரியதொரு சவாலே கொவிட் இரண்டாவது அலையாகும். கொவிட் மூன்றாவது அலையின் போது மீன்பிடித்துறை பெருமளவில் பாதிக்கப்படாத போதும் கப்பல் விபத்தின் பின்னர் மீன்பிடித்துறையின் எதிர்காலம் தொடர்பில் கருத்தாடல்கள் உருவாகியுள்ளன. எனினும், இரண்டாவது அலையின் போது குறிப்பாக பேலியகொட மீன்சந்தையில் தொற்று ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் கடல் உணவின் பயன்பாடு தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த எம்மால் கடுமையாக முயற்சிக்க வேண்டியிருந்தது.

விசேடமாக எமது மீன்விற்பனை நிலையத்தை இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக மூடி வைக்க வேண்டி ஏற்பட்டது. அத்துடன், மீன்பிடி துறைமுகங்கள் பல மூடப்பட்டிருந்ததுடன், இத்துறையுடன் தொடர்புபட்டிருந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அமைச்சின் அதிகாரிகள் பலருக்கும் தொற்று ஏற்பட்டது. எனினும், துறைசார் நிபுணர்கள் மற்றும் பேராசிரியர்கள் தாமாக முன்வந்து எமக்கு உதவியிருந்தனர். இதற்கு நாம் நன்றி கூற வேண்டும். இதனால் கொவிட் தொற்றுநோய் சூழலுக்கு மத்தியிலும் மீன்பிடித்துறையை எவ்வித பாதிப்புக்களும் இன்றி தொடர்ச்சியாக முன்கொண்டு செல்வதற்கு வசதியாக இருந்தது. குறிப்பாக மீனவர்களுக்கு அனுமதிப் பத்திரங்களை வழங்குவது போன்ற செயற்பாடுகளில் ஒன்லைன் முறைமையப் பயன்படுத்த முடிந்தது.

எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் மீன்பிடித்துறை மற்றுமொரு சவாலுக்கு முகங் கொடுத்துள்ளது. இந்த விபத்தினால் சமுத்திர சூழலுக்கும், சுற்றாடலுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பு எந்தளவு என்பதை எம்மால் இன்னமும் கணிக்க முடியாதுள்ளது. கடற்றொழிலின் எதிர்காலத்துக்கு இது எந்தளவு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பது பற்றி நாம் தொடர்ச்சியாக ஆய்வுகளை நடத்த வேண்டியிருக்கும். எனினும், கடல் உணவுகளை நுகர்வதில் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லையென இதுவரை எமக்கு கிடைத்துள்ள சகல அறிக்கைகளின்படி சுட்டிக்காட்டப்படுகிறது.

கே: கப்பல் விபத்தின் பின்னர் கடல் உணவுகளை நுகர்வது  தொடர்பில் சுகாதாரப் பிரிவினரால்  வழிகாட்டல்கள் ஏதாவது  வழங்கப்பட்டுள்ளதா?

பதில்: கொவிட் இரண்டாவது அலையின் போதும் கடல் உணவு நுகர்வு தொடர்பில் தேவையற்ற அச்சம் உருவாக்கப்பட்டது. கடல் உணவை நுகர்வதன் ஊடாக கொவிட் பரவும் என தேவையற்ற அச்சம் ஏற்படுத்தப்பட்டது.

எனினும், அவ்வாறு எதுவும் இடம்பெறாது என விஞ்ஞான ரீதியில் மக்களுக்குத் தெளிவுபடுத்த எம்மால் கடும் பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது. இன்று வரை எமக்கு கிடைத்துள்ள அறிக்கைகளுக்கு அமைய குறிப்பாக நாரா நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆரம்ப கட்ட அறிக்கையின் பிரகாரம் கடல் உணவுகளை நுகர்வது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனெனில், இந்து சமுத்திர வலயத்தில் இது போன்ற பல விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

விபத்துக்களைத் தாங்கக் கூடிய சக்தி சமுத்திரத்துக்கு உள்ளது. இருந்த போதும் பாதிப்பைத் தடுப்பதற்கு நாம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். குறிப்பாக கப்பலில் தீவிபத்து ஏற்பட்ட தினத்திலிருந்து இதுவரை பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையான கடற் பகுதியில் மீன்பிடிப்பதற்குத் தடை விதித்துள்ளோம். அதற்கும் அப்பால்தான் மீன்பிடி செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. எமக்கு கிடைக்கும் மீன்களில் பெரும் பகுதி ஆழ்கடல் மீன்பிடியிலிருந்தே பெறப்படுகின்றது.

இக்காலப் பகுதியில் நிலவிய காலநிலை காரணமாக பெரும்பாலான படகுகள் மீன்பிடிக்குச் சென்றிருக்கவில்லை. இவ்வாறான நிலையில் நாம் தடை செய்யப்பட்ட வலயத்துக்கு அப்பால் உள்ள பகுதிகளிலிருந்து பிடிக்கப்பட்ட மீன்களே நாட்டில் காணப்படுகின்றன. கொண்டு வரப்படும் மீன்களை நாம் தொடர்ச்சியாக பரிசோதனை செய்ததில் அவற்றில் பார உலோகங்கள் எதுவும் காணப்படவில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கே: கப்பல் விபத்தின் பின்னர் கடல் ஆமை போன்ற கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியதைப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. இதன் உண்மைத் தன்மை என்ன?

பதில்: உண்மையில் இது தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்படுவதால் இறுதி அறிக்கை கிடைக்கும் வரை கடல் உயிரினங்கள் இறந்தமைக்கான காரணத்தை சரியாகக் கூற முடியாது. இருந்த போதும் எமது அனுபவத்தில் வழங்கக் கூடிய பதில் என்னவெனில், பொதுவாக கடற்கரையை அண்மித்த வலயத்தில் நாளாந்தம் இதுபோன்ற இறந்த கடல் உயிரினங்கள் கரைக்கு அடித்து வரப்படுவது வழமையாகும். இதுவரை பெருந்தொகையான இறந்த கடல் உயிரினங்களை நாம் எங்கும் காணவில்லை.

எனினும், சமூக ஊடகங்களில் பெருந்தொகையான உயிரினங்கள் இறந்ததாக செய்திகள் வெளியாகியிருந்த போதும், நாம் அதுகுறித்து ஆராய்ந்து பார்த்தோம். அவ்வாறு எங்கும் அறிக்கையிடப்படவில்லை. ஓரிரு இடங்களில் அவ்வப்போது சில சம்பவங்கள் குறித்து அறிக்கையிடப்பட்டுள்ளன.

மீன்பிடியில் ஈடுபடும் போது நுகர்வுக்குப் பொருத்தம் இல்லாத கடல்வாழ் உயிரினங்கள் வலைகளில் சிக்கியிருந்தால் அவை மீண்டும் கடலுக்குள் விடப்படும். அவ்வாறு விடப்பட்ட உயிரினங்கள் உயிரிழந்திருந்தால் கரைக்கு அடித்து வரப்படுவதும் பொதுவான நிகழ்வாகும்.

அதே போல, ஆமைகளை எடுத்துக் கொண்டால் மே மாதங்களில் கடல் ஆமைகள் இவ்வாறு இறந்த நிலையில் கரையொதுங்குவது அறிக்கையிடப்பட்டுள்ளது. அந்தக் காலங்களில் மக்களின் கவனம் இவற்றின் மேல் இருக்கவில்லை.

கப்பல் விபத்து இடம்பெற்றுள்ள சூழ்நிலையில் இவை தற்பொழுது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

கப்பல் விபத்தைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் குறித்து மக்கள் அவதானமாக இருப்பது நல்லதொரு விடயமாகும். இவ்வாறான நிலையில் ஆமைகள் உயிரிழந்திருப்பது கடந்த காலங்களைப் போன்றதொரு சாதாரண நிகழ்வா அல்லது கப்பல் விபத்தின் பின்னர் இடம்பெற்ற நிகழ்வா என்பதை இப்போது எம்மால் கூற முடியாது. நடத்தப்பட்டுவரும் ஆய்வுகளின் முடிவுகள் கிடைத்ததும் அது பற்றி உறுதியாகக் கூறமுடியும்.

கே: தற்போதைய சூழ்நிலையில்  பல்வேறு காரணங்களால் கடற்றொழிலுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலைமையை சீர்செய்ய எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன?

பதில்: கொவிட் சூழலால் பயணத் தடை அமுல்படுத்தப்பட்ட போதும் கடற்றொழிலுக்கு எந்தவித தடையையும் ஏற்படுத்த வேண்டாம் என ஜனாதிபதியும் பிரதமரும் தெளிவாக அறிவுறுத்தியிருந்தனர். இதற்கமைய கடற்றொழிலுக்குச் செல்ல எந்தவித தடையும் ஏற்படவில்லை.

எனினும், முழு இலங்கையிலும் பாணந்துறை முதல் நீர்கொழும்பு வரையில் கரையோர மீன்பிடியை நம்பியுள்ள சிறிய தொகுதி மீனவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் வேறு இடங்களுக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபடவோ அல்லது ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லவோ எந்தவித தடையும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: