வவுனியா பல்க​லைக்கழகத்தில் நாட்டின் அபிவிருத்திக்கு பொருத்தமான பீடங்களை ஆரம்பிப்பதே திட்டம்

நேர்கண்டவர்:
பாலநாதன் சதீஸ்

வவுனியா  பல்கக்கான கல்வியை மென்மேலும்  மேம்படுத்துவதுடன் இங்கே  அனைத்து மதத்தவர்கள்  இனத்தவர்கள்  இருப்பதனால்  பல கலாச்சாரம் உள்ள பல்கலைக்கழகமாகவும்  அனைத்து  இனங்களையும்  கௌரவிக்கும் பல்கலைக்கழகமாகத்தான்  திகழும் என துணைவேந்தர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

ஜனாதிபதி  கோட்டபாய  ராஜபக்‌ஷவினால்  வவுனியா  பல்கலைக்கழகத்திற்கு முதலாவது  துணைவேந்தராக  நியமிக்கப்பட்டுள்ள  கலாநிதி ரி.மங்களேஸ்வரன்  தினகரன்  பத்திரிகைக்கு  வழங்கிய  விஷேட  செவ்வியின் போதே  இவ்வாறு தெரிவித்துள்ளார்.  புதிதாக  தரமுயர்தப்பட்ட  வவுனியா   பல்கலைக்கழகத்தை  இலங்கை மக்களுக்கு அறிமுகம்  செய்து வைக்கும்  நோக்குடனே  இந்நேர்காணல் இடம்பெறுகின்றது. நேர்காணலின்  முழுமையான  வடிவம்

கேள்வி : யாழ் பல்கலைக்கழகத்தின் ஒரு பகுதியான வவுனியா வளாகத்தின் முதல்வராக நீண்ட காலம் பணியாற்றியிருக்கிறீர்கள். உங்கள் தொழில்துறை அனுபவம் பற்றி கூறமுடியுமா?

பதில் : எனது தொழில் துறை அனுபவம் பற்றி கூறுகையில்  நான்  முதன் முதல் 1997ஆம் ஆண்டு  தென்கிழக்கு  பல்கலைக்கழகத்தில்  தற்காலிக விரிவுரையாளராக  இணைந்து இரண்டு வருடங்கள் பணியாற்றியிருந்தேன். வவுனியா வளாகத்தில் 1999ஆம் ஆண்டு  ஒரு தகுதிகாண் நிலை விரிவுரையாளராக இணைந்து கொண்டேன்.

அதன் பின்பு பேராதனை பல்கலைக்கழகத்தில் முதுநிலை நிர்வாகமாணி  என்ற கற்கை  நெறியை 2004 ஆம் ஆண்டு முடித்தவுடன் பொதுநலவாய   நாடுகளினுடைய  புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் சென்னை பல்கலைக்கழகத்திற்கு சென்று மனிதவள முகாமைத்துவத்தில் கலாநிதிப்பட்டம்  பெற்றேன்.

பின்னர் மீண்டும் நாடு திரும்பி  2007ஆம் ஆண்டு  எனது  துறையின்  தலைவராக பொறுப்பேற்று மூன்று வருட  காலப்பகுதியில்  விரிவுரையாளர் என்ற ரீதியில் விரிவுரைகளை மேற்கொண்டு என்னுடைய துறைக்கு  பாரிய பங்களிப்பை வழங்கி கொண்டிருந்தேன்.

நான் கல்வியியலாளர் என்ற ரீதியில் 2007ஆம் ஆண்டு எனது கலாநிதி பட்டத்தை முடித்தவுடன் இந்தியா நாட்டில் கல்வி தொடர்பான கற்ற அனுபவங்களை வைத்துக்கொண்டு முதன்முறையாக வவுனியா வளாகத்தில் ஒரு ஆய்வு மாநாட்டை 2008 ஆம் ஆண்டு எனது தலைமையில் நடத்தியிருந்தேன். அதன் பின்பு 2010ஆம் ஆண்டு வியாபார கற்கைகள் பீட பீடாதிபதிபதியாக நான் நியமிக்கப்பட்ட பின் வவுனியா  நகரத்திலிருந்த வியாபார கற்கைகள் பீடத்தினை 2011ஆம் ஆண்டு  ஓகஸ்ட் முதலாம் திகதி  பம்பை மடுவிலுள்ள எமது நிரந்தரமான  இடத்திற்கு மாற்றம் செய்தேன்.

அந்த இடமாற்றத்திற்கு பின்னர் நிறைய  சவால்களுக்கு  மத்தியில்  பல்கலைக்கழகத்தினுடைய  வியாபார கற்கைகள்  பீடத்தினை  நடத்துவதற்கு  முழுமையாக  செயற்பட்டேன்.  2015 ஆம் ஆண்டு  வவுனியா  வளாக  முதல்வராக  நியமிக்கப்பட்டேன். அந்த காலப்பகுதியில் இருந்து வவுனியா  வளாகத்தை  பல்கலைக்கழகமாக தரம் உயர்த்துவதற்கான சகல ஏற்பாடுகளையும்  மேற்கொண்டு  கிட்டத்தட்ட  ஐந்து வருடங்களாக  வவுனியா  பல்லைகலைக்கழக  வளாக  சமூகத்தினரதும்  பொதுமக்கள் அரசியல்வாதிகள்  ஊடகத்துறையினர்  போன்றவர்களின்  பங்களிப்புடன்  இந்த பல்கலைக்கழகத்தினை   2021 ஆம் ஆண்டு யூன் மாதம் எட்டாம் திகதி அரச வர்த்தகமானி  ஊடாக  பல்கலைக்கழகமாக  அறிவிக்கப்பட்டு  இன்று  ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து  தரம் உயர்த்தப்படுவதற்கு முயற்சி செய்திருந்தேன்.

நான்  வவுனியா  வளாகத்தில்  இணைந்து  இந்த 21 வருட காலத்தில் வவுனியா பல்கலைக்கழகத்தில்  எனது  சேவையை முடித்திருக்கின்றேன்.  இந்த காலப்பகுதியில் கல்வி தொடர்பாக வவுனியா பிரதேசத்துக்கும்  வன்னி பிரதேசத்துக்கும்  பல்வேறுபட்ட  வகையில் பாரிய பங்களிப்பை செய்திருக்கின்றேன்.  2009ஆம் ஆண்டுக்கு  பின்பு வன்னி பிரதேசத்தில் அதிகமான  ஆய்வுகளை  மேற்கொண்டு  வன்னிப்  பிரதேச மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள்  சவால்களை அடையாளப்படுத்தி  இந்த வளாகத்தை பல்கலைக்கழகமாக  தரம் உயர்த்துவதன்  ஊடாக இந்த மக்களின் வாழ்வாதாரம் பொருளாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்தலாம் என்ற எண்ணத்துடன்  பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதில் ஏற்பட்ட சவால்கள் அனைத்தையும் ஏற்று அந்த சவால்களை வெற்றி கொண்டு வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த முயற்சித்தோம். பல்கலைக்கழகமாக தரம் உயர்த்துவதன்  ஊடாக  நான் எதிர்பார்ப்பது இந்த பல்கலைக்கழகம் மென்மேலும் வளர்வதுடன் இந்த பிராந்தியத்திற்கும்  நாட்டின் அபிவிருத்திக்கும்  பாரிய   பங்களிப்பினை  வழங்கும் என்பதாகும்.

கேள்வி : உங்கள்  நம்பிக்கைகள்  சமய கலாசாரங்கள்  சிந்தனைகள் பற்றி கூறமுடியுமா?

பதில் : செய்யும் தொழிலில் முதலில் விசுவாசமாக  இருக்க வேண்டும். இலகுவாக  கூறினால் செய்யும் தொழிலே தெய்வம் என்று  தொழிலை சரியாக செய்யாமல் ஏனைய விடயங்களில் முக்கியம் கொடுப்பதென்பது  என்னைப் பொறுத்தமட்டில்  ஏற்றுக்கொள்ள முடியாதது. தனிப்பட்ட ஒருவர் தொழில் செய்பவர் என்றால் அந்த தொழிலில் தொழில் செய்யும் நிறுவனத்தில் பற்று இருக்க வேண்டும்.

எனக்கு நிறுவனத்தில் அக்கறை இருக்கிறதாலும் அந்த தொழிலில் மென்மேலும் வளர வேண்டும் என்பதாலும் எனக்கு அதில் ஒரு நம்பிக்கை அல்லது ஒரு ஆழமான ஈடுபாடு இருக்கிறது.  நான் மற்றவர்களுக்கு கூறுவது  என்னவென்றால்  நாங்கள் செய்யும் தொழிலில் முதலில் விசுவாசமாக இருக்க வேண்டும். அதுதான் எங்களை  வாழ வைக்கும். என்னை பொறுத்தளவில் மதரீதியாக பார்த்தால் அனைத்து மதங்களும் நல்ல விடயங்களைத்தான் கூறுகின்றன. நாங்கள் ஒவ்வொரு மதத்திலும் உள்ள நல்ல விடயங்களையும் ஒவ்வொரு மதத்தையும்  மதத்தில் உள்ளவர்களையும் மதிக்க வேண்டும். நாங்கள்  ஒரு  இடத்துக்கு செல்வதாயின்  பல வழிகள் இருக்கும். அதே போல்மதங்கள் என்பது  பல வழிகள் தான்  என்பது எனது கருத்து.

கேள்வி : நீண்ட கால சவாலுக்கு மத்தியில்  யாழ்  பல்கலைகழகத்தின்  வவுனியாவளாகம்  பல்கலைக்கழகமாக  தரமுயர்த்தப்பட்டுள்ளது. இதனை தரமுயர்த்துவதற்கு எப்படி உங்களால் சாதகமாக பயணிக்க முடிந்தது.?

பதில் : அது மிகவும் கடினமான கற்கள் முட்கள் உள்ள பாதை மாதிரி தான் இருந்தது. எனக்கு ஒரு தூர நோக்கு  இருந்தது. வவுனியா  வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும்  என்று. 2015ஆம் ஆண்டு முதல்வர் பதவியை  ஏற்றுக்கொண்டேன். வவுனியா வளாகத்தினை முன்னேற்ற வேண்டும் என ஒரு கடப்பாடு  இருந்ததனால் அதற்கு ஒத்துக்கொண்டேன்.

வவுனியா  வளாகத்தை  தரம் உயர்த்துவதில் எல்லோரும் பங்களிப்பு செய்தார்கள். அரசியல் அல்லது அரசியலில் உள்ளவர்கள் அதில் அக்கறை காட்டியிருக்கிறார்கள்.

அரசியலில்  உள்ளவர்களுக்கு அந்தளவிற்கு சாதிப்பதற்கான சாதகமான  சூழ்நிலை இருந்ததாக தெரியவில்லை.  2015ஆம் ஆண்டு நான் முதல்வராக பொறுப்பேற்றதில் இருந்து 2021ஆம் ஆண்டு  காலப்பகுதியில்  ஆறாவது வருடத்தை நான் அண்மித்து கொண்டிருக்கின்ற  வேளை  கூடுதலான நேரம் மற்றும்  உழைப்பினை   வவுனியா வளாகத்தை ஒரு பல்கலைக்கழகமாக உயர்த்த வேண்டும் என்பதிலேதான் செலவழித்தேன்.

கேள்வி : தற்போது  வவுனியா பல்கலைக்கழக  துணைவேந்தராக பதவியேற்றுள்ளீர்கள். எனவே உங்களது சேவைக்காலத்தில் எவ்வாறான பணிகளை முன்னெடுக்க இருக்கின்றீர்கள்?

பதில் :  எதிர்வரும் மூன்று வருட கால பகுதியில் எனது முதலாது இலக்காக இருப்பது இந்த வவுனியா பல்கலைக்கழகத்தின் அடிப்படை வசதிகளை மென்மேலும் அதிகரிப்பதே. அடுத்த திட்டமாக புதிய பீடங்களை ஆரம்பிப்பதற்குமான திட்டம் இருக்கின்றது.  இந்த பிரதேசத்துக்கும் பிரதேச அபிவிருத்திக்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் பொருத்தமான பீடங்களை ஆரம்பிப்பதே இந்த மூன்று வருட காலத்திலும் எனது திட்டமாக இருக்கின்றது. அதில் கூடுதலாக மருத்துவ  துறை சார்ந்த கற்கைகள்  கடல்சார் கற்கைநெறிகள்  விலங்குகள்சார் கற்கைநெறிகள் மொழிகள் கற்கைநெறிகள் போன்றன  புதிய பீடங்களாக இருக்கின்றன. கடல்சார் கற்கைகளை மன்னார்  முல்லைத்தீவு மாவட்டங்களில் ஆரம்பிக்க  இருக்கின்றோம். மக்களின் பொருளாதாரம்  கல்வி  வாழ்வாதாரம்  சமூகஅபிவிருத்தி  மனிதவள அபிவிருத்தியை மேம்படுத்தல் போன்றவற்றையும்  அபிவிருத்தி செய்வதற்கான வேலை திட்டங்களை மேற்கொள்வதற்கும்  இந்த பல்கலைக்கழகமானது சமூகத்துடன் இணைந்து தான் பயணிக்கும். அதாவது  மக்களுடைய தேவைகளை ஆய்வுகளாக மேற்கொண்டு  அதற்கான பொருத்தமான தீர்வுகளை   வழங்குவது இந்த கால பகுதிக்கான நோக்காக உள்ளது. ஏனென்றால்  தொழில் சார்பான நிறுவனங்கள்  அரச தனியார் சமூக அமைப்புக்களுடன் இணைந்து  வேலை செய்வோம்.

கேள்வி : வளாகமாக இருந்து பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றது. ஆகவே ஏற்கனவே  இருந்த கல்விக் கொள்கைகளே பின்பற்றப்படுமா?  அல்லது நடவடிக்கைகளில் ஏதாவது மாற்றம் கொண்டு வருவீர்களா?  எவ்வாறான  மாற்றங்களாக இருக்கும்?

பதில் : ஏற்கனவே  இருக்கின்ற கல்விக் கொள்கைகள் தொடர்வதுடன் எமது பிரதேசத்திற்கும்  நாட்டிற்கும்  பொருத்தமான கல்விக்கொள்கைகள் பின்பற்றப்படுவதுடன்  நல்ல குடிமகன்களை   உருவாக்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களை பெறக்கூடியதான கல்விக்கொள்கைகளாக மாற்றங்கள் கொண்டுவரப்படும்.

கேள்வி : வவுனியா பல்கலைக்கழகத்தில் எத்தனை கற்கைகள் பீடங்கள் இருக்கின்றது? கல்வி ரீதியான முக்கியமான பிரச்சினைகள் ஏதாவது இருக்கின்றனவா?

பதில் : வவுனியா பல்கலைக்கழகத்தில் மூன்று கற்கைகள் பீடங்கள் இருக்கின்றன. பிரயோக விஞ்ஞான கற்கை பீடம் வியாபார கற்கை பீடம் தொழில்நுட்ப கற்கை பீடம் என்பன இருக்கின்றன. கல்வி ரீதியான முக்கியமான பிரச்சினைகள் எதுவும் இல்லை. ஒழுங்குபடுத்தப்பட்ட  கல்வி முறைமையே இங்கு இருக்கின்றது.

கேள்வி : இப் பல்கலைக்கழகத்தில் வெளிமாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி நின்று கல்வி கற்பதற்கான மாணவர் விடுதி வசதிகள் இருக்கின்றனவா? அது எவ்வாறான நிலையில் காணப்படுகின்றது.?

பதில் : இங்கு கல்வி கற்கின்ற 80 வீதமான  மாணவர்கள்  வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்களுடைய விடுதி  வசதிகள் வரையறுக்கப்பட்டே காணப்படுகின்றன. அதிகளவான மாணவர்கள் வாடகை விடுதிகளில் தங்கிக் கற்கிறார்கள். தற்போதைய நிலையில் இரண்டாயிரம் மாணவர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஆயிரம் மாணவர்களுக்கான விடுதி வசதிகள் தான் காணப்படுகின்றன. அதனால் மாணவர்கள் தங்குமிட வசதி வாய்ப்புக்களை  அதிகரிப்போம். மாணவர்களுக்கான விடுதி வசதிகளுக்கான கோரிக்கைகளை அரசாங்கத்திடம்  மேற்கொண்டிருக்கின்றோம்.  தனியார் பொது கூட்டு என்ற கருத்தினூடாக தனிப்பட்ட முதலீட்டாளர்கள் வந்து பல்கலைக்கழகத்தில் விடுதி வசதிகளைசெய்து கொடுப்பதற்கு முதலீடுகளை வழங்குவதற்கு வாய்ப்பிருக்கின்றது.

கேள்வி : வவுனியா வளாகம்’ பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டதன் பின்னர் என்ன என்ன அபிவிருத்திகள் ஏற்பட்டிருக்கின்றது?

பதில் : பல்கலைக்கழகமாக  01.08.2021 இன்றிலிருந்துதான்  சட்ட ரீதியாக நாங்கள் தரம் உயர்த்தப்படுகின்றோம். அதற்கிடையில் தரம்உயர்த்துவதற்கான முதற்கட்ட வேலைகளாக ஆரம்ப விழாவுக்கான ஏற்பாடுகளை  மேற்கொண்டு வருகின்றோம்.  தரம் உயர்த்தப்பட்ட பின்னர் நாங்கள் ஒரு தனி பல்கலைக்கழகம் என்ற ரீதியில் அதற்கான இலட்சினையை வடிவமைத்திருக்கின்றோம் அடுத்து பல்கலைக்கழகத்துக்கான கொடி ஒன்றை நாங்கள் திட்டமிட்டு வடிவமைத்திருக்கின்றோம்.  பல்கலைக்கழகத்திற்கான நிறமாக எந்த நிறமிருக்கப்போகிறது என்ற அடிப்படையில் அதனை தீர்மானித்திருக்கின்றோம்.  மேலும் பல்கலைக்கழகத்துக்கான கீதம் ஒன்றை நாங்கள் தற்போது தயாரித்து கொண்டிருக்கின்றோம்.

இவற்றில் நேரடியாக எமது பல்கலைக்கழக ஊழியர்களும்  பொதுமக்களும்  பாரிய பங்களிப்பை ஆர்வத்துடன் வகித்திருக்கிறார்கள். இந்த சின்னத்தை உத்தியோக பூர்வமாக எமது ஆரம்ப விழாவின் போது  வெளியிடுவதாக தீர்மானித்திருக்கின்றோம். மேலும் உடனடியாக நிர்வாக கட்டிட தொகுதி ஊழியர் விடுதிக்கான கட்டிட தொகுதி வியாபார கற்கைகள் பீடத்திற்கான கட்டிடத்தொகுதி போன்றவற்றை ஆரம்பிப்பதற்கு அரசாங்கமும் உலகவங்கியும் இணைந்து நிதியளிப்பதற்கான பரிசீலனையை மேற்கொண்டிருக்கின்றது

கேள்வி : பல்கலைக்கழகமாக எப்போது உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட இருக்கின்றது?

பதில் : வர்த்தகமானியின் பிரகாரம் ஓகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து பல்கலைக்கழகநடவடிக்கைகளை ஆரம்பிக்க உத்தேசித்துள்ளோம். அதே வேளையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச  எதிர்வரும் 11.08.2021 அன்று நேரடியாக வருகை தந்து பல்கலைக்கழகத்தின் ஆரம்ப விழாவில்  கலந்து கொள்ள இருக்கின்றார்.

கேள்வி : இலங்கையில் சிறந்த ஒரு பல்கலைக்கழகமாக முதல் நிலைக்கு கொண்டு வர என்ன வழிவகைகளை வைத்துள்ளீர்கள்?

பதில் : இதுவரை காலமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்ததால் எங்களுக்கு ஒரு பெயர் அல்லது எங்களுக்கு ஒரு கௌரவம் இருந்தது. அது பழைய பல்கலைக்கழகம் அதற்கென்று ஒரு சிறந்த பெயர் இருக்கின்றது. அதன் கீழ் இருக்கின்றதால்   எங்களுக்கு பெயரை பெற்றுக் கொள்வதில் கடினம் எதுவுமே இருக்கவில்லை.

கேள்வி : பல்கலைக்கழகத்தை மையமாக கொண்டு பேருந்து சேவையை மேற்கொள்ள என்ன திட்டங்கள் இருக்கிறது?

பதில்: வவுனியா பல்கலைக்கழகமானது  நகரத்திலிருந்து பத்து கிலோமீட்டருக்கு  அப்பால் இருக்கின்றது. எங்களிடம் இருக்கின்ற போக்குவரத்து வசதிகளை கொண்டு மாணவர்களுக்கோ   ஊழியர்களுக்கோ முழுமையாக வழங்க முடியாது. பல்கலைக்கழகமாகியதால் நாங்கள் அரசாங்கத்திடம் இந்த விஷேடமான பேருந்து சேவையை வழங்குவதற்கான  கோரிக்கையை வைப்பதற்கு  இருக்கின்றோம். தற்போது மாணவர்கள் இல்லை. அவர்களுக்கு நாங்கள் காணொளியாக அல்லது இணைய செயலி ஊடாக கற்பிப்பதனால் பிரச்சினை இல்லை. வெகு விரைவில் மாணவர்களை இங்கு அழைக்கின்ற வேளையில் அதற்காக பேருந்து வசதிகளை மேற்கொள்வதற்காக இலங்கை போக்குவரத்து சபையிடமும்  தனியார் போக்குவரத்து சேவை வழங்குபவரிடம் அணுகி ஒரு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்குவதன்  ஊடாக அனைவரும் மாணவர்களோ அல்லது இந்த பல்கலைக்கழகத்தின் நலன்களை பெற்றுக் கொள்ள விரும்புபவர்களே   இந்த பல்கலைக்கழகத்திற்கு இலகுவாக வந்து போகக்கூடியதற்கான ஒரு கோரிக்கைகளை முன்வைக்க தீர்மானித்திருக்கிறோம்.

 

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: