போலித் தமிழ் தேசியம் பேசியபடி இனியும் வாழ முடியாது – சந்திரகாந்தன் எம்.பி

கே: பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டது வரை உங்கள் அரசியல் பயணத்தைப் பற்றிக் கூறமுடியுமா?

பதில்: பதினாறு வயதிலேயே மக்களுக்கு விடுதலை வேண்டும் என்பதற்காக போராட்டக் குழுவில் இணைந்திருந்தேன். பின்னர் அதில் ஏற்பட்ட பிணக்குகள் காரணமாக அங்கிருந்து வெளியேறி, ஆயுதப் போராட்டத்தினால் பெரிதாக எதனையும் அடைந்து விட முடியாது என உணர்ந்து மக்களுக்கு ஏதாவது செய்து அவர்களின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிக்க வேண்டும் எனக் கருதி 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டேன். அப்போது புதிதாக பதிவு செய்யப்பட்ட எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அப்போதைய அரசாங்கத்துடன் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதன் அடிப்படையில் நான் கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் பின்னர் நல்லாட்சி எனக் கூறிக் கொண்டு வந்தவர்களால் நான் பழிவாங்கப்பட்டு ஐந்து வருடங்களாக சிறையில் இருந்தேன்.

2020ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் நான் சிறை ச்சாலையிலிருந்தே போட்டியிட வேண்டி ஏற்பட்டது. வடக்கு, கிழக்கில் போட்டியிட்ட தமிழ் உறுப்பினர்களை விட அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நான் தெரிவு செய்யப்பட்டேன். தற்பொழுது காணப்படும் கொவிட் சூழலிலும் எம்மால் முடிந்த வரை மக்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றோம்.

கே: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் பதவியும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் ஊடாக அப்பகுதி மக்களுக்கு எவ்வாறான பணிகளைச் செய்துள்ளீர்கள்?

பதில்: ஒரு வருட காலத்துக்குள் ‘சுபீட்சத்தின் நோக்கு’ வேலைத்திட்டத்தின் ஊடாக ஒரு இலட்சம் வேலைவாய்ப்புகளில் மட்டக்களப்பிலும் முதற் கட்டமாக கணிசமான வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாம், மூன்றாம் கட்டங்கள் விரைவில் வழங்கப்படவுள்ளன.

2021 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் எமது மாவட்டத்துக்கு 13 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளது. அதற்கும் அப்பால் வெளிநாட்டுக் கடன்கள் ஊடாகவும் நிதி கிடைத்துள்ளது. கொவிட் தொற்று காரணமாக ஒப்பந்தங்களை முன்னெடுக்க முடியாத சில சிக்கல்கள் காணப்படுகின்றன. இருந்த போதும் தனி அரசியல் கட்சி என்ற ரீதியில் கிராமிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் எமது கொள்கையும்,

ஜனாதிபதியின் கொள்கையும் ஒன்றாக உள்ளதால் கணிசமான முன்னேற்றத்தைக் காணக் கூடியதாக உள்ளது. 2025ஆம் ஆண்டாகும் போது சிறந்த முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியும். குறிப்பாக விவாசாயத் துறையில் அபிவிருத்தியைக் கொண்டு வர எதிர்பார்க்கின்றோம். மக்களுக்கு நிலையான வருமானத்தை ஏற்படுத்தக் கூடிய துறைகளை முன்னேற்றுவதற்கே எதிர்பார்க்கின்றோம்.

கே: மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மூன்று இனங்களும் வாழும் இடமாக உள்ளது. இதனைக் கட்டியெழுப்புவதில் உங்களிடம் வேறேனும் திட்டங்கள் உள்ளனவா?

பதில்: கடந்த கால யுத்தம் காரணமாக பல கிராமங்களில் இன்னமும் வறுமை காணப்படுகிறது. கடந்த அரசியல்வாதிகளின் நிலைப்பாடுகள் தற்போதைய நிலைமைகளுடன் ஒத்துப் போகாது. வெறுமனே தேசியம் பேசி மக்களின் வாக்குகளைப் பெற்று எதிரணியிலிருந்து கதிரைகளைச் சூடாக்கியதால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பல தமிழ்க் கிராமங்கள் பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. இவற்றைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது. இதற்கான வேலைத் திட்டங்கள் எம்மிடம் உள்ளன. மாகாண சபையின் ஊடாக தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடைத்தது. அதிகாரத்தை அதிகம் பகிர்வோம் எனக் கூறிய நல்லாட்சி காலத்தில் இருந்த அரசியல்வாதிகள், இருந்த மாகாண சபையையும் இல்லாமல் ஆக்கி விட்டுச் சென்றுள்ளனர்.

இன்று மாகாண சபை இயங்காத காரணத்தினால் பல நிர்வாகப் பிரச்சினைகள் மக்களுக்கு ஏற்பட்டுள்ளன. என்னைப் பொறுத்தவரையில் இப்பொழுது இருக்கும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசாங்கத்துடன் இணைந்து எமது கட்சி மாகாணசபையின் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் செயற்படுகின்றோம்.

கே: தற்பொழுது இருக்கும் சூழ்நிலையில் உரிமை அரசியல் அவசியமா அல்லது அபிவிருத்தி அரசியல் அவசியமா அல்லது இரண்டும் கலந்த அரசியல் அவசியமா? நீங்கள் எதனை முன்னெடுக்க விரும்புகின்றீர்கள்?

பதில்: தமிழ்த் தேசியவாதிகள் எனத் தங்களை அடையாளப்படுத்தும் பாணியைத்தான் நாம் கடந்த நூற்றாண்டிலிருந்து கண்டு வருகின்றோம்.

அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதுதான் இதற்கான தீ மூட்டப்பட்டிருந்தது. அவருடைய காலத்திலேயே தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப்பட்டு 18 உறுப்பினர்களாக இருந்த எண்ணிக்கை பின்னர் 22 ஆக உயர்ந்து தற்பொழுது 10 ஆகியுள்ளது.

இந்த நூற்றாண்டில் சுமார் மூன்று தலைமுறைகள் நேரடியாக அடிபட்டு அழிந்து போயிருக்கும் சூழ்நிலையில் அடுத்து வருகின்ற தலைமுறையின் சிந்தனையும், தேவைப்பாடும் தமிழ் தேசியம் என்ற போலி முகத்தைக் காட்டி பாராளுமன்றம் செல்ல முயல்பவர்களை நிச்சயமாகத் தடுத்து நிறுத்தும் என நினைக்கின்றேன்.

குறிப்பாக அடுத்த தேர்தலில் அவர்களின் எண்ணிக்கை இன்னமும் குறையும். என்னைப் பொறுத்த வரையில் போலித் தேசியத்தில் தமிழ் மக்கள் வாழ முடியாது. மக்களுக்கு இருக்கின்ற மாகாண அதிகாரத்தைப் பலப்படுத்தி அதன் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் சில கூட்டங்களில் நாம் பேசியிருக்கின்றோம்.

மாகாண சபையினுடைய அதிகாரத்தை இன்னும் பலப்படுத்த வேண்டும் என்ற கருத்தாடலிலே இப்பொழுது அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையிலும் எமது கருத்தை முன்வைத்துள்ளோம்.

நிச்சயமாக மாகாணசபையின் ஊடாக இருக்கின்ற அதிகாரங்களைப் பலப்படுத்திக் கொண்டு உண்மையிலேயே கிராமங்களில் வாழ்கின்ற மக்களின் கல்வித் தேவைகள், குடி நீர்த் தேவைகள், அவர்களின் விவசாயத் தேவைகள், காணிகளில் இரண்டு போகம் செய்வதற்குத் தேவையான நீர்ப்பாசனத் திட்டங்கள், அவர்களுக்கான மின்சார வசதிகள் போன்றவற்றுடன் தமிழன் என்கிறசுயகௌரவத்துடன், தான் இருக்கும் நிலத்தில் கௌரவமாகத் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழக் கூடிய வாழ்க்கைதான் தமிழ் தேசியமாக இருக்க முடியுமே தவிர, இங்கு இருக்கின்ற தமிழர்கள் வாழ முடியாது என்ற நம்பிக்கையை இழந்து அவர்கள் வேறு நாட்டுக்கு ஓடுகின்ற சூழலை நான் தமிழ்த் தேசியம் என்று சொல்ல மாட்டேன்.

இவர்களின் பேச்சுகளை நம்பி தமிழ்த் தேசியத்தைப் பெற முடியும் எனப் போராடி அதிலிருந்து அலுத்து வெளியேறியுள்ளோம்.

எங்கள் மாகாணத்தில் வாழ்கின்ற தமிழர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கான அரசியலைச் செய்ய வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும். தினகரன்

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: