தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  சாணக்கியன் ராசமாணிக்கம் அவர்கள் லங்கா நெட் நிவ்ஸ் சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணல்

நேர்காணல்: வெலிகம ஹிபிஷி தௌபீக்

கொவிட் தொற்றுக் காலப்பகுதியில் பகுதியில் உங்கள் செயற்பாடு எவ்வாறுள்ளது?

தற்போது ஊரடங்கு காலம் என்பதால் மட்டக்களப்பில் வீட்டோடு பாதுகாப்பாக உள்ளேன். கொரோனா காலத்தில் எமது செயற்பாடுகள் இருக்கக்கூடாது. அரசாங்கமும் வீடுகளை விட்டு வௌியேற வேண்டாம் என்று கூறியுள்ளது.

எனவே பொதுமக்களுக்கு முன்மாதிரியாக பொதுமக்கள் ஒன்றுகூடல், சந்திப்புக்களை ஏற்பாடு செய்யாமல் நாம் முதலில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். அவ்வாறே மக்களும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இந்தியாவுடன் இருக்கும் உறவைப் போன்று சீனாவுடன் ஏன் TNA நெருக்கம் காட்டுவதில்லை?

அவ்வாறு இல்லை. நாம் தமிழ் மக்களின் உரிமை பிரச்சினைக்காக குரல் கொடுக்கிறோம். என்றாலும் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது.

அதாவது புவியல் சார்ந்த நிலத் தொடர்பு, பௌத மதத் தொடர்பு, தமிழ் மக்கள் தொடர்பு என்று பல விடயங்களில் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. அவ்வாறு தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது.

இந்த தொடர்பு இன்று நேற்று உருவாகியதல்ல பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த தொடர்பு இருந்த வண்ணமுள்ளது. தற்போதுதான் சீனா ஆசிய பிராந்தியத்தில் இலங்கையில் செல்வாக்கு செலுத்திய வண்ணமுள்ளது. ஆனால் இந்தியாவுடன் உறவுகள் பழமையானது. அவ்வாறுதான் இதனை அவதானிக்கலாம்.

மாறாக நாம் தனி ஒரு நாட்டுடன் மாத்திரம் நெருங்கிப் பழகுவதற்கு விரும்பவில்லை. தமிழர்களுக்கு அனைத்து நாடுகளும் முக்கியமானது.

தமிழ் பேசும் மக்களின் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக சீனாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளீரா?

தமிழ் மக்களுக்கு ரஷ்யாவாக இருந்தாலும் அமெரிக்காவாக இருந்தாலும் மக்களின் உரிமைகள் விடயத்தில் அக்கறை உள்ள அனைத்து நாடுகளுடன் நாம் இது தொடர்பாக பேசுகிறோம்

2020 முதல் இன்று வரை பிரதான எதிர் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கிராமப்புற செல்வாக்கு மற்றும் தேசிய ரீதியிலான செல்வாக்கு மந்தமாக உள்ளது. இதனை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்?

2018 ஆம் ஆண்டு கிராம மட்டத்தில் பிரதேச சபைத் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சக்தி என்ற கட்சி இருக்கவில்லை. ஐக்கிய மக்கள் சக்தி 2019 ஆம் ஆண்டுக்கு பின்னரே உருவாக்கப்பட்டது. இதனால் பிரதேசசபைகளில் தற்போது உறுப்பினர்கள் இல்லாத ஒரு கட்சியாகும்.

அவ்வாறே பொதுவாக வட கிழக்கு தவிர ஏனைய பிரதேச கிராமங்களில் மக்கள் ஆளுங்கட்சிகளுடனே இணைந்து பணியாற்றுகின்றனர். அந்த அடிப்படையில் பொதுஜன பெரமுனாவின் கிராமிய மட்ட செல்வாக்கு உள்ளது.

அன்று எதிர்கட்சி என்ற அடிப்படையில் மஹிந்த ராஜபக்ஷ காணப்பட்டனர். அவரின் கீழாலே அனைத்தும் இடம்பெற்றது. ஆனால் இன்று எதிர்கட்சியாக மக்களே உள்ளனர்.

இன்று அரசுக்கு எதிராக இலங்கையில் 725 ஆர்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளது. அதில் 200க்கு மேற்பட்ட ஆர்ப்பாட்டங்கள் யார் ஏற்பாடு செய்யப்பட்டது என்பது தெரியவில்லை. அதாவது இம்முறை மக்கள்தான் எதிர்கட்சியாக உள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திதான் எதிர்கட்சியாக இருந்தாலும் மக்கள் எதிர்கட்சியாக அணி திரண்டுள்ளமை புரிகிறது.

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மக்களுக்கு திருப்திகரமாக இல்லை. இதற்குள் அரசியல் தலையீடு இருக்கிறதா? இதன் பின்னணியில் தெற்கின் அரசியல்வாதிகள் தான் இருப்பதாக JVP கூறுகிறது. இது பற்றி உங்கள் விரிவான பார்வை என்ன?

இலங்கையில் ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்று 28 மாதங்களை கடந்துள்ள நிலையில் எமக்கான அதிலும் எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ள 30 இக்கும் அதிகமான மக்களுடன் சேர்த்து பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு வடகிழக்கில் உள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும்,

கடந்த காலத்தில் பேராயர் மல்கம் ஆண்டகை உட்பட தெற்கில் உள்ள கத்தோலிக்க மதகுருக்கள் வடகிழக்கில் நடந்த அநீதிகளுக்கு குரல் கொடுக்கவில்லை.

இருந்தபோதிலும் ஈஸ்ரர் குண்டுத் தாக்குதல் நடைபெற்ற போது அதில் பெருமளவு பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாகும். மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததுடன் அதில் 15 க்கும் மேற்பட்ட சிறுவர்களும் உயிரிழந்திருந்தனர். அந்த தாக்குதலில் இரண்டு கண்களையும் இழந்த சிறுமியொருவர் தனது தாய் தந்தையரையும் இழந்த நிலையில் இன்று உள்ளார். இவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதற்கான விடையை கேட்கவேண்டிய தேவை உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பாக இருக்கட்டும் இலங்கை தமிழ் அரசு கட்சியாக இருக்கட்டும் அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. யாரும் செய்யவில்லை என்பதை பற்றி கதைப்பது அநாவசியமாகும். நாங்கள் நீதி கேட்க வேண்டிய நிலையுள்ளதனால் அதனை கேட்க வேண்டும்.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிரான நீதி 13 ஆண்டுகள் கழிந்தும் கிடைக்கவில்லை. அதற்கு முன்னர் பல மதத்தலைவர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான நீதி கிடைக்கவில்லை.

இவ்வாறான நிலையில் ஈஸ்டர் தாக்குதல் ஏற்பட்டு மூன்று வருடங்களுக்குள் நீதி கிடைக்கும் என்பது நம்பமுடியாத விடயம்தான் என்றாலும் இவ்வாறான விடயங்கள் தொடர்ந்தும் இடம்பெறாமல் நடந்தது என்ன என்பது பற்றி அறிந்திருக்க வேண்டும்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் வவுணதீவில் இரண்டு பொலிஸாரை கொலை செய்தனர். பின்னர் சந்தேகத்தின் பெயரில் முன்னாள் போராளி ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் சுமார் இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

கொலை செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதி வேண்டும். ஒருவேளை குறித்த கொலை செய்தவர்கள் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற விடயம் உறுதி செய்யப்படாவிடின் முன்னாள் போராளி அஜந்தன் தொடர்ந்தும் சிறையில் இருந்திருப்பார். இதற்காக அனைத்து இன மத மக்களும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும்.

கைது செய்யப்பட்டவர்கள் சிறிய மீன்களாகும் பெரிய மீன் கைது செய்யப்பட வேண்டும் என்று மல்கம் ரன்ஞித் ஆண்டகை கூறுகிறார். அவ்வாறு என்றால் ஆண்டகை கூறும் பெரிய மீன்யார்? வௌிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் மல்வத்து பீட மகாநாயகர்களிடம் போய் தமக்கான நீதியை பெற்றுத்தருமாறு கோரும் நிலைக்கு குறித்த விவகாரம் சென்று விட்டது.

முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகளை கூட பேசாத முஸ்லிம் எம்பிகளின் பின்புலத்தை எவ்வாறு நோக்குகின்றீர்?

உண்மையில் முஸ்லிம் அமைச்சர்களின் போக்கை அவதானிக்கையில் முஸ்லிம் சமூகத்தின் நிலமை கவலைக்குரிய விடயமாகவே உள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் ஊடகவியாளர் சந்திப்பில் மக்கள் நலனுக்காக 20 ஆம் திருத்திற்கு ஆதரவளித்தாக குறிப்பிடுகின்றார். பிறிதொரு ஊடகவியாளர் சந்திப்பில் கட்சித் தலைவரின் ஆலோசனையின் பெயரிலேயே 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தாக கூறுகிறார்.

கட்சித்தலைவர் 20 ஆம் திருத்திற்கு எதிராக வாக்களித்தவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கிவிட்டதாக கூறுகின்றார். எனவே இங்கு சந்தேகம் காணப்படுகிறது.

சாதாரண முஸ்லிம் மக்களின் ஜனாஸா எரிக்கப்பட்டமை தொடர்பாக ஒருநாளும் இங்கு நீதி கிடைக்கப்படமாட்டாது. சமூகத்தின் பிரச்சினைகளை தீர்க்க இருபதாம் திருத்தத்திற்கு வாக்களித்தால் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளதா?

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளம் கவிஞர் அஹ்னாப் மற்றும் அரசியல் தலைவர்களான ரிஷாத் பதியுந்தீன், அஸாத் சாலி ஆகியோர் சிறையில் உள்ளனர். மேலும் சுமார் இரண்டு ஆண்டுகளாக ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்று 65க்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.

சமூகப் பிரச்சினையை தீர்க்கவல்ல அவர்களின் பிழைப்புக்காகவே இருபதற்கு வாக்களித்துள்ளனர். முஸ்லிம் சமூகம் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கருணா, பிள்ளையான் விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தார்களோ அவ்வாறு முஸ்லிம் அரசியல்வாதிகளும் சுயநலத்திற்காக முஸ்லிம் சமூகத்தை காட்டிக் கொடுத்து விட்டனர். அவ்வாறு இல்லை என்றால் மொட்டுக் கட்சியில் போய் தேர்தலில் போட்டியிடலாம்.

ஆனால் அவர்கள் மொட்டுக்கு எதிராக தேர்தல் மேடையில் பேசிவிட்டு முனாபிக் தனமாக நடந்து கொண்டனர். முஷரப் முனாபிக் தனமாக நடந்து கொள்ளக்கூடாது என்று பேசி இருந்தார். இறுதியில் அவரும் போய் வாக்களித்தார். அப்படி முஸ்லிம் சமூகம் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

எனவே முஸ்லிம் சமூகம் தமக்குப் பொருத்தமான மக்களுக்காக சிந்திக்ககூடிய தலைவர்களை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளது. நான் ஒருபோதும் முஸ்லிம் மக்களின் வாக்கை திரட்டிக் கொள்வதற்காக செயற்படவில்லை. ஆனால் முஸ்லிம்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் அபிவிருத்தி என்ற பெயரில் கொங்றீட் பாதைகளை இடுவதால் முஸ்லிம் சமூகம் அபிவிருத்தி அடைந்துள்ளதாக கூறினாலும் உண்மையில் முஸ்லிம் சமூகம் அபிவிருத்தியடையவில்லை. கண்ணுக்கு தெரிய அபிவிருத்தி என்று கூறினாலும் நிரந்தரமான அபிவிருத்தி இல்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் – முஸ்லிம் மீனவர்களுடைய கடல்மீன் திருட்டுப் பிரச்சினை காணப்படுகிறது. கடற்படைதான் திருடுகிறது. ஆனால் இதனை தீர்க்க இங்குள்ள முஸ்லிம் எம்பிக்களால் தத்தமது பிரதேச முஸ்லிம் மீனவர்களுடைய பிரச்சினைகளையாவது தீர்க்க முடியவில்லை. மறுபுறம் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் தமிழ் முஸ்லிம் மக்களின் காணி அபகரிப்பு இடம்பெறுகிறது. நாகுகல பாணம எல்லையில் குடியேற்றங்கள் இடம்பெறுகிறது. சஜித் பிரமேதாஸவின் வீட்டுத் திட்டத்தில் ஒரு வீடாவது பூர்த்தி செய்யப்படவில்லை.

ஆனால் அதற்காக பேசவில்லை குறைந்தபட்சம் ஜனாஸா எரிப்பை நிறுத்திவிட்டாவது வாக்களித்திருக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் உள்ளது. இதனை மீட்டெடுக்க உங்கள் ஆலோசனை என்ன?

ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவது என்பது பொருளாதாரத்தை மாத்திரம் கட்டியெழுப்புவது அல்ல. ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதாக இருந்தால், பொருளாதாரம், மனித உரிமைகள், மத வழிபாட்டு உரிமைகள், சர்வதேச அரசியல் கொள்கை என பல விடயங்கள் உள்ளது.

இவர்கள் பொருளாதாரத்தை மாத்திரம் கட்டியெழுப்ப வேண்டும் என்பது நடக்கப்போகும் விடயம் அல்ல.

சீனாவின் கடனை மாத்திரம் நம்பி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. பூகோள அரசியலில் நாம் அனைத்து நாடுகளுடன் அரசியல் ரீதியாக தொடர்புகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். மேற்கு நாடுகளுடன் உறவைப் பலப்படுத்துவது என்றால் மனித உரிமையை மதிக்கின்ற மக்களுடன் நீதியாக நடக்கின்ற ஜனநாயகம் உள்ள நாடுகளுடன்தான் அவர்கள் செயற்படுவார்கள்.

இன்று இலங்கையின் சர்வதேச உறவு ஜனநாயகம் இல்லாத, சர்வாதிகார, இராணுவ ஆட்சிகள் உள்ள நாடுகளுடனே உள்ளது. அந்நாடுகள் இலங்கைக்கு உதவும் நிலையில் இல்லை. அவ்வாறு இருப்தாக இருந்தால் சீனாமாத்திரமே உள்ளது. ஆனால் சீனா கடன் வழங்குவது இலங்கைக்கு உதவுவதற்கு அல்ல இந்து சமூத்திரத்தில் செல்வாக்கு செலுத்துவதற்காகும். சீனா தன் கடன்பிடியில் நாட்டை வைத்துக்கொள்ளவே கடன் வழங்குகிறது.

அரசியலில் விரக்தி அடைந்துள்ள இளைஞர் படையணிக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்?

இலங்கையில் மாத்திரமே பாலர்பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக்கல்வி வழங்கப்படுகிறது. அதன் பின்னர் அரசாங்கமே தொழிலையும் வழங்க வேண்டும் என்பது எனது பார்வையில் தவறாகும். ஆனால் அரசாங்கத்தின் தவறொன்றும் உள்ளது. இவர்களுக்கு மாற்றுத்தீர்வுகளை வழங்காமையாகும்.

நாம் தொழில்நுட்ப பாடத்திட்டங்களுக்கு பத்து – பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே முன்னுரிமை வழங்கியிருந்தால் நாம் இன்று உலகில் முன்னணியில் திகழ்ந்திருப்போம். இவ்வாறு காலத்திற்கும் தொழில் உலகிற்கும் பொருத்தமான கல்வியை வழங்காதது அரசாங்கத்தின் பிழையாகும். அடுத்த விடயம் தனியார் துறையை பலப்படுத்த வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: