நியாயமான விலையில் அத்தியாவசியப் பொருட்களை அவசரகால விதிகளின் கீழ்தான் வழங்க வேண்டுமா?

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல் துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

கடந்த வாரம் சர்வதேச ஊடகங்களில் இலங்கையில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு நெருக்கடியான ஒரு சூழலில் மக்களின் உணவுப் பாதுகாப்பு கேள்விக்குரியதாக மாறியுள்ளதாக தலைப்புச் செய்திகள் வெளிவந்தன.

இலங்கை அரசாங்கம் இலங்கையில் உணவுப்பற்றாக்குறை எதுவும் ஏற்படவில்லை என உடனடியாக மறுத்தது. இவ்வாறு சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளிவரக்காரணமாக அமைந்தது இலங்கை உணவுப்பொருள் விநியோகம் தொடர்பாக அவசரகால விதிகளின் கீழ் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்களாகும்.

அவசரகால விதிமுறைகள், சமாளிக்க முடியாத நெருக்கடி நிலைமைகளின் போதே பிரகடனப்படுத்தப்படுவது வழமையான நடைமுறையாகும்.

திடீரென அவசரகால விதிமுறைகளைப் பயன்படுத்தி அரிசி, நெல் சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும் உணவு விநியோகத்ததை சீர்படுத்தவும் முனைந்தமை சர்வதேசத்தால் ஒரு நெருக்கடி நிலைமையாக அடையாளம் காணப்பட்டமையே இதற்கு காரணமாகும். இலங்கையில் அத்தியாவசிய உணவுப்பொருள்கள் உள்ளிட்ட எல்லாப்பொருள்களின் விலைகளும் சடுதியாக அதிகரித்து வருகின்றமை இரகசியமானதொரு விடயமல்ல.

பால்மா போன்ற சில பொருள்கள் சந்தையில் கிடைப்பதில்லை கள்ளச்சந்தையில் அவை அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. உதாரணமாக சில இடங்களில் 400 கிராம் நிறையுள்ள பால்மாப்பொதி 600 ரூபாவுக்கு விற்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. அரிசிவிலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளன. 90 தொடக்கம் 120 ரூபா வரையில் விற்கப்பட்ட சம்பா அரிசி இப்போது 200 ரூபாவிற்கு மேல் விற்பனையாகிறது. 90 தொடக்கம் 130 ரூபா வரையில் விற்கப்பட்ட சீனி இப்போது 235 ரூபா வரையில் விற்கப்படுகிறது.

இவ்வாறு குறுகிய காலத்தில் உணவுப்பொருள்களின் விலைகள் அதிகரித்தமைக்கு கொவிட் நிலைமையினை முழுமையான காரணமாகச் சொல்ல முடியாது. இலங்கையில் கடந்த போகங்களில் நெல் அறுவடை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்ததாக தகவல்கள் ஏதும் இல்லை.

மறுபுறம் அரிசியை இறக்குமதி செய்யவும் அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது. எனவே சந்தையில் அரிசிவிலை சடுதியாக அதிகரிப்பதற்கு காரணமில்லை. அத்தோடு நாட்டிற்கு தேவையான சீனி மிகப்பெரும் தொகையில் ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 50 ரூபாவாக இருந்த சீனி இறக்குமதி மீதான தீர்வையை இருபத்தைந்து சதமாகக் குறைத்த காலப்பகுதியில் சீனி இறக்குமதியாளர்கள் அதிர்ஷ்ட இலாபச்சீட்டு விழுந்தது போன்றதொரு இலாபத்தைப் பெற்றிருந்தார்கள்.

எனவே சீனிக்குத் தட்டுப்பாடு ஏற்படவோ அதன் விலை இவ்வளவு சடுதியாக அதிகரிக்கவோ நியாயமில்லை. மாறாக பெருந்தொகையில் இறக்குமதி செய்யப்பட்ட சீனியை இன்றைய சூழலைப் பயன்படுத்தி அதிக விலைக்கு விற்று காசு பார்க்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபபட்டிருப்பது இன்றைய விலையதிகரிப்பிற்கு பிரதான காரணமாக பார்க்கப்படுகிறது.

மறுபுறம் உண்மையாகவே சர்வதேச சந்தையில் பொருள்களின் விலைகளில் ஒரு அதிகரிப்பு ஏற்பட்டு வருகின்றமையையும் அவதானிக்க முடிகிறது இரும்பு எரிபொருள் உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. உணவுப்பொருள்களின் விலைகளிலும் படிப்படியாக அதிகரிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே எதிர்காலத்தில் உள்நாட்டில் அவற்றின் விலை அதிகரிக்கச் சாத்தியம் உள்ளது. ஆனால் உலக சந்தையில் ஏற்பட்டுள்ள இத்தகைய விலை அதிகரிப்பு இப்போது இலங்கையில் ஏற்பட்டுள்ளதைப்போல சடுதியான ஒரு அதிகரிப்பு அல்ல. அதேவேளை இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலை இதற்கொரு காரணமாக அமையலாம். சந்தைச் சக்திகளின் அடிப்படையில் நாணயமாற்றுச் சந்தையில் இலங்கை ரூபாவின் பெறுமதி தீர்மானிக்கப்பட்டு மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் மிக அண்மையிலிருந்து ஏனைய நாடுகளின் நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதியை அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடத் தொடங்கியுள்ளது. வேறு வகையில் கூறுவதாயின் நிலையான ஒரு நாணயமாற்றுவீத முறையை நடைமுறையில் கடைப்பிடிக்க ஆரம்பித்திருப்பதாகத் கூறலாம்.

இந்நிலையில் 202 ரூபாவாகத் தீர்மானிக்கப்பட்டுள்ள அமெரிக்க டொலரின் பெறுமதி உத்தியோகபூர்வக் கொடுக்கல் வாங்கல்களின் போது பயன்படுத்தப்படல் வேண்டும். இந்த விகிதத்தில் டொலரை மத்தியவங்கி விற்பனை செய்ய வேண்டும். ஆனால் இப்பணியைச் செய்ய மத்திய வங்கியிடம் போதிய செலாவணிக் கையிருப்புகள் இல்லை. எனவே வணிக வங்கிகள் தமது வாடிக்கையாளர்கள் கேட்கும் தொகையினை வழங்க முடியாத நிலைக்கு தள்ளப்படும். அது நடைமுறையில் சந்தையில் பரிமாறப்படும் டொலரின் விலையை அதிகரிக்கும். அரசு அறிவித்த விலையில் டொலரைக்கொள்வனவு செய்ய போதியளவு டொலரை மத்தியவங்கி வழங்கினால் மட்டுமே 202 ரூபா விலையில் டொலரின் பெறுமதியை வைத்திருக்க முடியும்.

கடுமையான இறக்குமதிக் கட்டுப்பாடுகளைப் பேணிய போதிலும் நடைமுறையில் டொலரின் பெறுமதி சந்தையில் அதிகரித்துச் செல்கிறது. இலங்கை அத்தியாவசியப்பொருள்களையும் மூலப்பொருள்களையும் மூலதனப்பொருள்களையும் தற்போது கொவிற்தொற்று நோயைச் சமாளிக்க மருந்துப்பொருள்களையும் மருத்துவ உபகரணங்களையும் அதிகளவில் இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள மேற்படி நடைமுறைச் சிக்கல்கள் காரணமாகவும் இறக்குமதிப்பொருள்களின் விலைகள் அதிகரிக்கின்றன.

இவ்வாறாக உள்நாட்டில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப் பல்வேறு காரணிகள் இருந்தபோதிலும் இப்போது ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு செயற்கையாக வேண்டுமென்றே அரசாங்கத்தை சங்கடத்தில் தள்ளிவிடும் நோக்கில் இடம்பெற்றதாக நம்பப்படுவதாகத் தோன்றுகிறது.

எனவே தான் அரசாங்கம் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ள குடோன்களையும் களஞ்சியங்களையும் முற்றுகையிட்டு பொருள்களைக் சந்தைக்குக் கொண்டுவர முயற்சித்து வருகிறது. அதேவேளை அத்தியாவசியப்பொருள்களுக்கு நிர்ணய விலைகளையும் அறிவித்துள்ளது.

உணவுப்பொருள்கள் தவிர இந்த கொவிட் நெருக்கடியைப் பயன்படுத்தி கொள்ளை இலாபம் உழைக்க முனையும் ஒரு குழுவும் முனைப்பாக இயங்கிவருகிறது.

எனவே மருந்துப்பொருள்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பாகவும் உச்ச விலை நிர்ணயத்தை மேற்கொள்ள அரசாங்கம் முனைகிறது. இன்றைய நெருக்கடிமிக்க சூழ்நிலையில் சாதாரண பொதுமக்கள் நியாயமான விலையில் உணவுப்பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களையும் மருத்துவ சேவைகளையும் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்துவது அத்தியாவசியமாகிறது.

இது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவை வழங்கும் அதேவேளை இந்த நடவடிக்கைகளை அவசரகால விதிகளின் கீழ்தான் மேற்கொள்ள வேண்டுமா என்ற கேள்வியையும் நோக்கர்கள் எழுப்புகின்றனர்.

ஏனெனில் அது சர்வதேச சமூகத்திற்கு பிழையான சமிக்ஞையினையே வழங்கும். அவ்வாறு சர்வதேசத்திற்கு பிழையான சமிக்ஞை வழங்கப்பட்டதனால் தான் சர்வதேச ஊடகங்கள் இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டன.

மறுபுறம் இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்கள் அனைவரும் தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கருத முடியாது. இப்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் நேர்மையாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் வர்த்தக சமூகத்தின் மத்தியில் விரக்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தலாம். பலர் வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து விலகலாம். அது ஒரு நாட்டுக்கு நல்லதல்ல. அதுமட்டுமன்றி உச்சவிலைக் கட்டுப்பாடுகளையும் இடையறாத விநியோகத்தையும் உறுதிப்படுத்த வேண்டுமாயின் உச்சவிலைக் கட்டுப்பாட்டினால் உருவாகும் பற்றாக்குறையினை அரசாங்கம் சந்தைக்கு வழங்க வேண்டும். விலைக்கட்டுப்பாட்டு விதிமுறைகள் முறையாகப் பேணப்படுகிறதா மீறப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஆளணியினரும் வளங்களும் ஒதுக்கப்பட வேண்டும்.

இவை அரசாங்கத்திற்கு செலவு குறைந்தவையாக இருக்கப்போவதில்லை. மறுபுறம் தட்டுப்பாடு ஏற்படும் போது நீண்ட வரிசைகளில் நின்று பொருள்களை வாங்கும் இருண்ட யுகத்திற்கு மீண்டும் திரும்ப வேண்டிய கட்டாயம் உருவாகும். எனவே இப்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை ஒரு தற்காலிகத் தீர்வாக மட்டுமே இருக்க முடியுமேயன்றி நீண்டகாலத்தீர்வாக அமைய முடியாது. இதனோடு தொடர்புடைய நிறுவன ரீதியான கட்டமைப்புகளை வலுப்படுத்துவதன் மூலமும் சட்டத்தின் முன் யாவரும் சமன் என்ற நிலையினை ஏற்படுத்துவதன் மூலமும். தத்தமது சகபாடிகளுக்கும் நெருங்கியவர்களுக்கும் நன்மை பயக்கும் விதத்தில் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றியமைக்காமல் வெளிப்படைத்தன்மையைப் பேணுவதன் மூலமும். உள்நாட்டில் அத்தியாவசிய உணவுப்பொருள் உற்பத்தியை ஊக்குவிப்பதற்குரிய விஞ்ஞான பூர்வமான ஆலோசனைகளையும் நாட்டின் தேவை மற்றும் சந்தைத் தகவல்களை முறையாக வழங்குவதன் மூலமும் உற்பத்தியின் பின்னரான உணவுப்பொருள் வீணாதலைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் உணவுப்பொருள் விலைகள் சடுதியாக அதிகரிப்தைத் தவிர்க்கலாம்.

நாட்டின் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்யலாம். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கு அப்பால் அது நடைபெற ஏதுவான காரணிகளைக் கண்டுபிடித்து அவற்றுக்குத் தீர்வுகாண முனைவதே நீண்டகாலப் பரிகாரமாக இருக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: