நாட்டில் பாரிய நிதி நெருக்கடி – எதிர் கட்சியின் உதவியை தேடும் பஸில்

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்

இவ்வாண்டு நாம் எதிர்பார்த்ததை விடவும் 1500-1600 பில்லியன் ரூபா குறைவான வருமானமே கிடைத்துள்ளது. நாட்டின் வருமானத்தை விடவும் செலவுகள் அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

இவ்வாறான கடினமான நேரத்தில் தனியாக அரசாங்கத்தினால்  பிரச்சினைகளை தீர்க்க முடியாது. எனவே எதிர்க்கட்சிகளினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாவும் அவர் கூறினார்.

நேற்று (07.09.2021) 61ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் கீழான கட்டளை, இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழு சட்டமூலம், உற்பத்தி வரி (விசே ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான கட்டளைகள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாடு) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

முழு உலகமும் எதிர்கொண்டுள்ள கொவிட் நெருக்கடிகளுக்கு நாமும் முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. நாடு பாரிய சர்வதேச வருமான  நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றது.

அதேபோல் தேசிய நிதி விடயங்களிலும், திறைசேரி மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார ரீதியிலும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இவற்றிக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ளும் வேளையில் முழு அரசாங்கம் மட்டுமல்லாது பொறுப்புள்ள சகலரும், எதிர்கட்சிகளின் ஒத்துழைப்புடனும் நாம் செயற்பட வேண்டும். இவ்வாறான கடினமான நேரத்தில் தனியாக பிரச்சினைகளை தீர்க்க முடியாது, அது முடியாத காரியம் என்பது எமக்கு தெரியும்.

கொவிட் தொற்று பரவலினால் ஏற்பட்ட நெருக்கடிகள் மட்டுமல்ல, கடந்த காலங்களில் கையாளப்பட்ட  பொருளாதார செயற்பாடுகள் காரணமாக ஏற்பட்ட விளைவாகும்.

நாட்டின் வருமானத்தை விடவும் செலவுகள் அதிகரித்து சென்றுள்ளது. ஒரு இரு வருடங்களில் இருந்ததல்ல ஒரு இரு தசாப்தங்களுக்கு முன்பிருந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

நாட்டுக்கு கிடைக்கும் வருமானம், அரசுக்கு கிடைக்கும் வருமானம் என்பனவற்றை நாட்டின் செலவுடன் ஒப்பிடுகையில் நாட்டின் வருமானம் மிகக் குறைவாகவே உள்ளது.

ஒரு சில நேரங்களில் அநாவசிய செலவுகள், வீண் விரயம், ஊழல் என்பனவும் உள்ளதென்பது எமக்கு தெரியும். நீண்ட காலமாக இவை இடம்பெற்றவை என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எனவே உண்மையாக இந்த செலவுகளை குறைக்க முடிந்த நடவடிக்கைகளை எடுப்போம்.

மேலும் கொவிட் நிலைமைகள் காரணமாக எமக்குக் கிடைக்கவிருந்த வருமானமும் கிடைக்காது போயுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: