இறக்குமதி பதிலீட்டுக் கொள்கை எமது நாட்டுக்கு சாத்தியப்படுமா?

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல் துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

Kicking Away the Ladder (ஏறிச் சென்ற) ஏணியை உதைத்துத் தள்ளிவிடல் என்பது Hajoon என்ற பிரபலமான தென் கொரியப் பொருளியலாளர் 1990களில் வெளியிட்டு பரவலாக வாசிக்கப்பட்ட பிரசித்தமான ஒரு நூலாகும்.

உலகவங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியன அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டுமாயின் தமது பொருளாதாரங்களைத் திறந்து விடவேண்டும் நிருவாகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் போட்டித்தன்மை வாய்ந்த உலக சந்தையை இலக்காகக் கொண்டு உற்பத்தி செய்ய வேண்டும் வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் நவதாராண்மைவாத (Neoliberal) பொருளாதார சிந்தனையின் அடிப்படையில் 1980களில் ஆரம்பித்த கட்டமைப்புச் சீராக்கக் கொள்கைகளை (Structural Adjustment Policies) விமர்சிப்பதே இந்த நூலின் நோக்கமாக இருந்தது.

பிரிட்டன் வூட்ஸ் இரட்டைச் சகோதரிகள் (Bretton Woods Twin Sisters) என அழைக்கப்படும் மேற்படி இரு சர்வதேச நிறுவனங்களும் தென்கிழக்காசியாவைச் சேர்ந்த வேங்கை நாடுகள் (East Asian Tigers) என அழைக்கப்படும் சில நாடுகளில் ஏற்பட்ட அதிசயிக்கத்தக்க பொருளாதார வளர்ச்சிக்கு நவதாராண்மைவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்தியமையே காரணம் என நம்பின. உலக வங்கியானது 1993 இல் கிழக்காசிய அற்புதம் (The East Asian Miracle) என்ற நூலை வெளியிட்டு கிழக்காசிய நாடுகளின் துரித பொருளாதாரப் பாய்ச்சலுக்கான காரணங்களை ஆராய்ந்தது.

மேற்படி கிழக்காசிய வட்டகை தென்கொரியாவைச் சேர்ந்த பேராசிரியர் ஹாஜூன் தென்கொரியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கு ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட நவதாராண்மைவாதக் கொள்கைகள் உதவவில்லை எனவும் மாறாக இறக்குமதிப் பதிலீட்டுக் கொள்கைகளே அதற்குக் காரணமாக அமைந்தன எனவும் வாதிடுகிறார். அத்தோடு மட்டும் நிற்காமல் இன்றைய அபிவிருத்தியடைந்த நிலையிலுள்ள கைத்தொழில் மய நாடுகள் தீர்வைத் தடைகள் உள்ளிட்ட தீவிரமான இறக்குமதிப் பதிலீட்டுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதன் ஊடாகவே பொருளாதார ரீதியில் வலிமையான இடத்திற்கு வந்தன என்றும் இப்போது அவை தாம் ஏறிவந்த ஏணியை உதைத்துத் தட்டிவிட்டு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு ஏற்றுமதி ஊக்குவிப்புக் கொள்கைகள் ஊடாக மட்டுமே அபிவிருத்தி சாத்தியப்படும் என்று வேதம் ஓதுவதாகவும் தமது நூலில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

1990களில் இடம்பெற்ற இச்சம்பவங்கள் பற்றி இப்போது நாம் ஏன் பேசவேண்டும் என வாசகர்கள் புருவங்களை உயர்த்தலாம். அதற்கான ஒரு காரணம் உண்டு. அண்மையில் இலங்கை மத்திய வங்கி தனது 71ஆவது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் முகமாக ஒரு சிறப்புச் சொற்பொழிவை காணொளித் தொழில் நுட்பத்தின் ஊடாக ஏற்பாடு செய்திருந்தது.

இலங்கை மத்திய வங்கியின் அழைப்பை ஏற்று மேற்படி சிறப்பு சொற்பொழிவை மேற்கொண்டவர் வேறு யாருமல்ல. பேராசிரியர் ஹாஜூன் அவர்களே. மத்திய வங்கி ஆளுநர் தகைசார் பேராசிரியர் டப்ளியூ டீ லக்ஷமனின் கல்விசார் நண்பர் என்ற வகையிலும் அவர் மேற்படி அழைப்பை ஏற்றிருக்கக் கூடும். எதிர்பார்த்தது போலவே 1950 களிலும் 1960களிலும் இலங்கையின் பொருளாதரரத்தை தென்கொரியப் பொருளாதாரத்துடன் ஒப்பிட்டு இலங்கைப் பொருளாதாரம் எல்லா வகையிலும் தென்கொரியவைவிட அக்காலப் பகுதியில் முன்னணியில் இருந்ததாகவும் இப்போது இலங்கை நிமிர்ந்து பார்க்கும் அளவுக்கு தென்கொரியா முன்னேறி விட்டதாகவும் அப்பொருளாதார முன்னேற்றமானது கடுமையான இறக்குமதிப் பதிலீட்டுக் கொள்கைகள் ஊடாகவே சாத்தியப்பட்டதாகவும் நாடு கைத்தொழிலில் போதிய வளர்ச்சியை எய்திய பின்னரே ஏற்றுமதி நோக்கிய கொள்கைக்கு மாறியதாகவும் அவர் தொடர்ச்சியாக நிறுவ முனைந்தார்.

அச்சொற்பொழிவின் உள்ளடக்கம் சாதாரண பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் புரிந்ததா, இல்லையா என்பது ஒருபுறமிருக்க இலங்கையின் தற்போதைய பொருளாதார சிந்தனைப்போக்கு எவ்வழியில் செல்கிறது என்பது பற்றிப் புரிந்து கொள்ளப் போதுமானதாக இருந்தது.

2005 ஆம் ஆண்டிலிருந்தே இலங்கையின் பொருளாதாரம் திறந்த பொருளாதாரம் என்ற நிலையில் இருந்து படிப்படியாக விலகி பாதுகாப்புக் கொள்கைகளுடன் கூடிய ஒரு மூடப்பட்ட பொருளாதாரமாக மாற்றமடைந்து வந்துள்ளது.

தேசியப் பொருளாதாரம் (National Economy) சமூக சந்தைப் பொருளாதாரம் (Social Market Economy) என்று பல்வேறு இனிப்புத் தடவிய சொற்றொடர்களால் அது அழைக்கப்பட்டாலும் அடிப்படையில் அது இறக்குமதிப் பதிலீட்டுப் பொருளாதாரக் கொள்கையாகும். இறக்குமதிகளைக் கட்டுப்படுத்தி உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். ஆனால் இக்கொள்கையின் காரணமாக உள்நாட்டுப் பொருளாதார விரிவாக்கம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

1970 – _1977 காலப்பகுதியில் கடைப்பிடிக்கப்பட்ட இறுக்கமாக மூடப்பட்ட இறக்குமதிப் பதிலீட்டுக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்ட காலப்பகுதியிலும் உள்நாட்டுப் பொருளாதாரத்தில் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார விரிவாக்கம் ஏற்படவில்லை. அதே போலவே 1977இல் அறிமுகப்படுத்தப்பட்ட ஏற்றுமதி ஊக்குவிப்புடன் கூடிய திறந்த பொருளாதாரக் கொள்கை நிலவிய காலப்பகுதியிலும் தற்காலிகமாக ஓரிரண்டு ஆண்டுகள் பொருளாதார வளர்ச்சி அதிகரித்ததேயன்றி கிழக்காசிய நாடுகளைப்போல குறிப்பிட்டுச் சொல்லத்தக்களவு பொருளாதார வளர்ச்சியை இலங்கைப் பொருளாதாரத்தால் அடைய முடியவில்லை.

2009இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பாதையமைப்பு, துறைமுகம், விமான நிலையம் போன்ற உட்கட்டமைப்பு கட்டுமானங்களின் விரிவாக்கம் காரணமாகவும் உல்லாசப் பயண சேவைத்துறையின் விரிவாக்கம் காரணமாகவும் தகவல் தொழில் நுட்பத்துறையின் விரிவாக்கம் காரணமாகவும் 2015 ஆம் ஆண்டு வரையிலும் இலங்கைப் பொருளாதாரம் சார்பளவில் உயர்ந்த பொருளாதார வளர்ச்சி வேகத்தைப் பதிவு செய்தது. ஆனால் மேலே சொல்லப்பட்ட உட்கட்டுமானத் திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் 2015 இலிருந்து நாடு தொடர்ச்சியாக மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியைப் பதிவுசெய்து வந்திருக்கிறது. 2020 இன் 3.6 சதவீத பொருளாதார வீழ்ச்சி சடுதியாக ஏற்பட்ட ஒன்றல்ல. ஏற்கெனவே மந்த கதியிலிருந்த பொருளாதாரம் கொரோனா அடைப்புடன் எதிர்க்கணிய வளர்ச்சியைப் பதிவுசெய்ய நேர்ந்தது என்பதே உண்மை.

இன்றைய சூழ்நிலையில் மிகக்கடுமையான இறக்குமதிக் கட்டுப்பாட்டு நடைமுறையொன்றினுள் நாடு தள்ளப்பட்டு விட்டது. வழமையான இறக்குமதித் தீர்வைக் கட்டுப்பாட்டு நடைமுறைகளுக்கு அப்பால் சென்று தீவிரமான நாணய மாற்றுக் கட்டுப்பாடுகள் மூலம் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் துரிதமாக முடுக்கி விடப்பட்டுள்ளன.

நாட்டின் நாணய மாற்றுவீதம் டொலருடன் இணைக்கப்பட்டுள்ளது கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமுலுக்கு வந்த நடைமுறையின் கீழ் அத்தியாவசியமற்றதாக அரசாங்கம் கருதுகின்ற அறுநூறுக்கும் மேற்பட்ட பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டுமானால் இறக்குமதியாளர்கள் இறக்குமதியின் டொலர் பெறுமதி முழுவதையும் வங்கியில் வைப்புச் செய்திருந்தால் மாத்திரமே அவற்றை இறக்குமதி செய்யமுடியும்.

அதாவது பொருள் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட முன்பே அதற்குரிய விலையை இறக்குமதியாளர் டொலரில் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வழமையான நடைமுறை நியமங்களின் கீழ் இறக்குமதிகளுக்குரிய செலுத்தல்களை மேற்கொள்ள 180 நாட்கள் வரை கால அவகாசம் உண்டு. முன்னோக்கிய ஒப்பந்தங்கள் (Forward contracts) ஊடாக செலுத்தல்களை மேற்கொள்ள முடியும். தற்போது இவை எதுவும் சாத்தியமில்லை.

இந்த நடைமுறைகள் காரணமாக இறக்குமதிச் செலவுகளை அதிகரிப்பதோடு உள்நாட்டில் பொருள் தட்டுப்பாடு ஏற்படவும் வழிவகுக்கும். அதன் மூலம் மேற்படி பொருள்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமா என்று பார்த்தால் சிலவற்றின் உற்பத்தி சாத்தியப்படும் அவற்றில் பல உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட முடியாதனவாகும்.

பேராசிரியர் ஹாஜூன் கொரியாவின் இறக்குமதிப் பதிலீட்டுக் கொள்கை பற்றிக் கூறுகையில் அந்நாடு வெளிநாட்டுக் கார்களின் இறக்குமதியைத் தடைசெய்து ஹூண்டே (Hyundai) நிறுவனத்தின் கார் உற்பத்தியை அதிகரித்ததாக உதாரணங் காட்டுகிறார். இலங்கை அதுபோல எப்பொருளை உற்பத்தி செய்யத் திட்டமிட்டிருக்கிறது என்பது பற்றிய தகவல்கள் ஏதும் இருப்பதாக பொதுவெளியில் தெரியவில்லை.

விவசாய விளைபொருள்களைப் பொறுத்தமட்டில் இலங்கையால் அவற்றைச் சிறப்பாக உற்பத்தி செய்ய முடியும். ஆனால் அதனை வெங்காய இறக்குமதிக்கு 40 ரூபா வரி விதித்தது போன்றோ மஞ்சள் இறக்குமதியைத் தடை செய்ததைப் போன்றோ இங்கொன்றும் இங்கொன்றுமான (ad hoc) நடவடிக்கைகள் மூலம் செய்யமுடியாது.

மாறாக முறையான சந்தை ஆய்வுகள் மூலம் நாட்டின் உணவுத்தேவையை இனங்கண்டு விவசாய அமைச்சின் ஊடாக விவசாயிகளுக்கு உரிய தகவல்களையும் அறிவுறுத்தல்களையும் விதையினங்கள் வளமாக்கி உற்பட ஏனைய உள்ளீடுகளின் கிடைப்பனவையும் உறுதிப்படுத்தி அறுவடையின் பின்னரான களஞ்சியப்படுத்தல் போக்குவரத்து போன்றவற்றின் போதான வீண் விரயங்களை கட்டுப்படுத்தும் நுட்பங்களை வழங்கி உணவில் தன்னிறைவடைய முயற்சிக்கலாம்.

கைத்தொழில் உற்பத்திகள் தொடர்பான தகவல்கள் ஏற்கெனவே கைத்தொழில் அமைச்சிடம் உண்டு. இவற்றிலே இலங்கையில் உற்பத்தி செய்யத்தகுந்தனவற்றை இனங்கண்டு ஊக்குவிக்கலாம்.

அத்தகைய ஊக்குவிப்புகள் நிறுவனங்களின் செயலாற்றத்துடன் பிணைக்கப்பட்டதாக இருக்க வேண்டும். உற்பத்தி இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு அவற்றை உற்பத்தி செய்தால் மட்டுமே சலுகைகள் வழங்கப்படவேண்டும்.

அத்தகைய உற்பத்திகள் சந்தைக்கு வரும் சந்தர்ப்பத்தில் அவற்றின் இறக்குமதிகளைத் தடை செய்யலாம். அதைவிடுத்து இறக்குமதிகளைத் தடைசெய்தால் மந்திரத்தால் மாங்காய் விழுவது போல அபிவிருத்தி ஏற்படும் என எதிர்பார்ப்பது தவறு.

அது மட்டுமன்றி கடந்தகாலத்தில் நாடுகள் ஒரு முழுமையான பொருளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்ததைப் போலன்றி தற்போது ஒரு கைத்தொழிற் பொருளின் பல்வேறு பாகங்களை பல்வேறு நாடுகள் உற்பத்தி செய்கின்றன.

எனவே உதிரிப்பாகங்கள் மற்றும் இடைநிலைப் பொருள்களின் ஏற்றுமதியும் இறக்குமதியும் அதன் மூலம் நாடுகளின் உற்பத்திகள் ஒன்றிலொன்று தங்கியிருக்கும் தன்மையும் அதிகரித்துள்ளன.

எனவே ஒரு நாடு இறக்குமதிப்பதிலீட்டு கொள்கையை கைக்கொள்வது நடைமுறையில் சாத்தியப்படாது. அது மட்டுமன்றி தென்கொரியா மோட்டார் வாகன உற்பத்தித்துறையில் நுழைந்ததைப் போல இலங்கையால் அதில் நுழைய முடியாது சர்வதேசப் போட்டி உச்சத்தில் உள்ளது. இலங்கையில் வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டதற்காக முன்னணி வாகன உற்பத்தியாளர் எவரும் இலங்கைச் சந்தையைக் கருத்திற்கொண்டு இங்கு வந்து முதலீடு செய்யப்போவதில்லை.

ஆனால் 1977 இல் பதவியிலிருந்த அரசாங்கம் தேர்தலில் படுதோல்வியடைந்து எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் ஆறில் ஐந்து பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இறக்குமதிப் பதிலீட்டுக் கொள்கையும் அதனால் ஏற்பட்ட பொருள் தட்டுப்பாடுமே பிரதான காரணியாக அமைந்தன என்பதை பேராசிரியர் ஹாஜூன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: