லொஹான் ரத்வத்த சகல அமைச்சு பதவிகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும்  – ருவன் விஜேவர்தன

எம்.மனோசித்ரா

இலங்கையில் அமைச்சு பதவியை வகிக்க முடியாதவாறு ஒழுக்கக் கேடான நடத்தையைக் காண்பித்துள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தற்போது வகிக்கின்ற சகல அமைச்சு பதவிகளிலிருந்தும் நீக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.

துப்பாக்கியை காண்பித்து எந்தவொரு நபரையும் அச்சுறுத்துவது நாட்டின் சட்டத்திற்கமைய பாரதூரமான குற்றமாகும். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் லொஹான் ரத்வத்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.

அமைச்சரோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரோ தனிப்பட்ட ரீதியில் உபயோகிக்கின்ற துப்பாக்கியை தனது பாதுகாப்பிற்காக மாத்திரமே பயன்படுத்த முடியும் என்றும் ருவன் விஜேவர்தன சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களுடன் இன்று வியாழக்கிழமை இணையவழியூடாக நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

லொஹான் ரத்வத்தே மீது அவரது நடத்தை தொடர்பிலும் , செயற்பாடுகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கமைய நாட்டில் எந்தவொரு அமைச்சு பதவியையும் வகிப்பதற்கு அவருக்கு உரிமை இல்லை.

சிறைச்சாலைக்கு மாத்திரமல்ல , ஹோட்டலொன்றுக்குச் சென்றாலும் இவ்வாறு செயற்படும் எந்தவொரு நபரையும் ஜனாதிபதியால் அமைச்சு பதவியில் வைத்திருப்பதற்கு முடியாது.

சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள அவர் , இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து விலகுவதாக இன்னமும் அறிவிக்கவில்லை.

இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் சார்ந்த கைத்தொழில் இராஜாங்க அமைச்சு பதவியிலிருந்து லொஹான் ரத்வத்தே நீக்கப்படுவாரா இல்லையா என்பதை அரசாங்கம் உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்றும் ருவன் விஜேவர்தன மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: