வவுணதீவு இளைஞனை தாக்கிய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – சாணக்கியன்

அண்மையில் வவுணதீவு பிரதேசத்தில் பொலிஸாரினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட இளைஞனின் விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கே பொலிஸாரினால் அலட்சியமான பதில் வழங்கப்பட்டது எனில் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கடந்த 05ம் திகதி வவுணதீவு பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட இளைஞனை இன்று (17.09.2021) பார்வையிடச் சென்று அவரின் விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்ததுடன் அவர் தாக்குதலுள்ளாக்கப்பட்டமை தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் சம்மந்தமாக வவுணதீவுப் பொலிஸ் நிலையத்திற்கும் சென்று வினவியிருந்தார்.

இதன் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் நாகலிங்கம், தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் லோ.தீபாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தாக்குதலுக்குள்ளான தினம் இடம்பெற்ற சம்பவம் குறித்து இளைஞனுடனும் மற்றும் அவர் குடும்பத்தினருடனும் கலந்துரையாடியதோடு அவரது தாக்குதல் தொடர்பில் உரிய நீதி விசாரணை  நடவடிக்கை எடுப்பதற்குத் தயாராகவுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், இவ்விடயம் தொடர்பில் வவுணதீவுப் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியைச் சந்தித்தார். இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

கடந்த 05ம் திகதி வவுணதீவு பிரதேசத்தில் ரூபன் என்ற இளைஞர் பொலிசாரினால் தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் அவர் தொடர்பிலான விசாரணைகள் எவ்விதம் முன்னெடுக்கப்படுகின்ற என்பது தொடர்பில் வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியிடம் கோரிய போது இது தொடர்பில் தன்னால் எவ்விடயங்களும் கூற முடியாது என அவர் தெரிவிதுள்ளார்.

இது தொடர்பில் எந்த தகவல்களும் கூற முடியாது எனவும் மறுத்துவிட்டார். கடந்த 05ம் திகதி நடந்த சம்பவம் தொடர்பில் இன்று 17ம் திகதி வரையிலும் எந்தத் தகவலும் கூற முடியாது என்றால் மக்கள் எவ்வாறு பொலிஸாரை நம்புவது.

இன்று எமது மாவட்டத்தில் பொலிசாரினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட இளைஞனுக்கு நீதி கேட்க முடியாத நிலையில் அரசாங்கத்தைச் சேர்ந்த இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றார்கள்.

அவர்கள் இது தொடர்பில் இதுவரை அறிக்கையில் கூட ஒன்றும் கூறவில்லை. அண்மையில் அநுராதபுரம் சிறைச்சாலையில் அரசியற் கைதிகள் மிரட்டப்பட்ட சம்பவம் தொடர்பிலும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளா மண் மாபியாக்களின் பிரதிநிதிகளா? வவுணதீவப் பொலிஸ் அதிகாரி சொல்கின்றார் தான் இதற்குப் பதில் கூற முடியாது என்று தெரிவித்தார்.

மேலும் நாட்டின் பாராளுமன்றத்தின் பிரதிநிதி ஒருவர் கேட்கும் போதே எவ்வித பதிலும் கூற முடியாது என்கிறார்கள் என்றால் சாதாரண மக்களுக்கு எவ்விதமான பதிலை இவர்கள் சொல்லப் போகின்றார்கள். தெலைபேசியில் கேட்கையில் நேரடியாக வாருங்கள் என்று சொல்லிவிட்டு நேரடியாக வரும் போது தகவல் சொல்ல முடியாது என்று சொல்லுகின்றார்.

தாக்கப்பட்ட நபர் ஒரு பொலிஸ் அதிகாரியின் பெயரைக் குறிப்பிடுகையில் அவரின் பெயரில் எத்தனையோ நபர்கள் இருக்கலாம் என்றும் அது தொடர்பில் எவ்வித முறைப்பாடுகளும் இடம்பெறவில்லை என்றும் அலட்சியமான பதில்களையே சொல்லுகின்றார்கள்.

இது ஏற்றுக் கொள்ளக் கூடிய விடயங்களாக இல்லை. பொலிஸார் மக்களை இவ்வாறாகக் கையாள வெளிக்கிட்டால் இந்த நாட்டில் இதற்கு மேலும் தமிழ் மக்கள் வாழ முடியாத நிலைமையே ஏற்படும். இந்த மாவட்ட மக்களுக்கு ஒன்றைச் கூறவேண்டும்.

நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கையாள்வதற்குரிய முயற்சிகளை எடுத்து வருகின்றேன். அனால் மாவட்டத்திலே அரசுடன் இருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மண் மாபியாக்கு வேலை செய்யாமல் மக்களுக்காக வேலை செய்ய முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். LNN Staff

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: