தீவிரவாத தாக்குல் தொடர்பான ஞானசார தேரரின் அறிக்கை குறித்து முழு விசாரணை அவசியம் – ACJU

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் போன்றதொரு தீவிரவாத தாக்குதல் அண்மையில் இடம்பெறப்போவதாக ஞானசார தேரர் தெரிவித்திருக்கும் கருத்து மக்கள் மத்தியில் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு இந்நாட்டின் பாதுகாப்பையும், இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும் அரசாங்கம் உறுதிப்படுத்தவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை கோரியுள்ளது.

இதுதொடர்பாக இன்று (17) ஒன்லைன் மூலம், அதன் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம். அர்கம் நூராமித் மேலும் தெரிவிக்கையில்,

ஞானசார தேரரிடம் தாக்குதல் தொடர்பான தகவல் இருந்தால் உரியவர்களிடம் முறையிடலாம் வீணாக நல்லிணக்கத்தை குழப்ப கூடாது என்று தெரிவித்த அவர், முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் நல்லவர்கள் மற்றவர்கள் கெட்டவர்கள் என்று பிரித்து காட்ட முயல்கிறார் என்றும் தெரிவித்தார்.

உலமா சபை மாநாட்டில் பேசப்பட்டதாக பொய்யான தகவல்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. மத்ரஸாக்கள் குறித்தும் எதிர்கால திட்டங்கள் குறித்துமே நாம் பேசியிருந்தோம்.

எம்மிடம் தவறு இருந்தால் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம். மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று ஞானசார தேரரிடம் கோரிக்கை விடுத்த அவர், தற்பொழுதுள்ள கொவிட் பிரச்சினையில் இருந்து மீள சகலரும் ஒன்றுபட வேண்டுமெனவும் கோரினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் போன்றதொரு தீவிரவாத தாக்குதல் நம் நாட்டில் அண்மையில் நடைபெறப் போவதாக ஞானசார தேரர் செப்டெம்பர் 13ஆம் திகதி நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இதனை அடிப்படையாக வைத்து பத்திரிகைகளும் செய்திகளை வெளியிட்டுள்ளன.

ஞானசார தேரரின் இக்கூற்றானது பொது மக்கள் மத்தியில் பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும் அதனைத் தொடர்ந்து இந்நாட்டில் வாழும் மக்கள் முகம் கொடுத்த பிரச்சினைகளையும் சவால்களையும் நாம் நன்கு அறிந்திருக்கின்றோம்.

எனவே, உரிய அதிகாரிகள் தேரரின் கூற்று தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு, இந்நாட்டின் பாதுகாப்பையும், இனங்களுக்கு மத்தியில் ஒற்றுமையையும் உறுதிப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவதுடன், இதன் உண்மைத் தன்மையை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் எனவும் வேண்டிக் கொள்கின்றோம்.

அத்துடன் ஞானசார தேரர் இஸ்லாம் பற்றி முன்வைத்திருக்கும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கான பதில்களை வெகு விரைவில் நாம் வழங்குவோம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

(ஷம்ஸ் பாஹிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: