முஸ்லிம் பெண்களுக்கு சம அந்தஸ்து வழங்க வேண்டும் – அலிசப்ரி

கே: அமைச்சரவைப் பத்திரம் தயாரித்து முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தை மாற்றியமைக்கப் போவதாக சொல்லியிருந்தீர்கள். இவ்விடயம் பற்றி முஸ்லிம்கள் மத்தியில் எதிர்ப்புகளும் பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் பல மாற்றங்கள் கொண்டு வருதல் வேண்டும் என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. இவ்விடயம் எங்களது சமுகத்தில் இருந்தே நீண்ட காலமாக சொல்லப்பட்டு வருகிறது. அதன் பின்னர் நீதியமைச்சர் பதவி வகித்த பலரால் காலத்துக்கு காலம் இத் துறை சார்ந்தவர்களை குழுவாக அமைத்து பல அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. 1956 இல் இருந்தே முஸ்லிம் விவாகம் மற்றும் விவகரத்து சட்டத்தில் மாற்றம் பற்றி கனகரத்தினம் கியூ.சி, கலாநிதி பாருக் குழு, கலாநிதி சகாப்தீன் குழு, உயர்நீதிமன்ற நீதியரசர் கலாநிதி சலீம் மஹ்சுப் குழு என்றெல்லாம் பல்வேறு சட்ட அறிஞர்களது அறிக்கைகள் கடந்த 70 வருட காலமாக நீதி அமைச்சில் சமர்ப்பிக்கப்பட்டு வந்துள்ளன. இறுதியாக ஓய்வு பெற்ற நீதியரசர் சலிம் மர்சூப் அவர்களின் அறிக்கையும் நீதியமைச்சில் உள்ளது.

தற்காலத்தில் சவூதி அரேபியாவில் கூட 18 வயதுக்கு குறைந்த வயதில் திருமணம் முடிக்க முடியாது. வங்கி ஒன்றில் கூட நடைமுறைக் கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டுமென்றால் 18 வயது கட்டாயமாகும். ஒரு சொத்துரிமையை உறுதிப்படுத்தி அதனை மாற்றுவதற்கும் நீதிமன்றம் சென்று அனுமதி பெறப்பட வேண்டும். இதனால்தான் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டத்திலும் பல மாற்றங்களை செய்ய வேண்டுமென்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. எமது நாட்டில் உள்ள காதி நீதிமன்றங்களின் வழக்கப்படி எமது சமூகத்தில் உள்ள பெண்களுக்கு கூடிய கல்வித் தகைமைகள் இருந்தாலும் அவர்கள் ஒருபோதும் காதி நீதிபதியாக வர முடியாது. ஆனால் வேறு பல நாடுகளின் முஸ்லிம் பெண்கள் இப்பதவிகளை வகிக்கின்றனர். முஸ்லிம் சமூகத்தில் நுாற்றுக்கு 65 வீதமான முஸ்லிம் பெண்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாக உள்ளனர். அப்படியான பெண்களாலும் தனது வாழ்வில் ஒரேயொரு முறை நடைபெறுகின்ற விவாகச் சான்றிதழில் கூட கையெழுத்திட்டு தனது திருமணத்தை உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது. பெண்கள் ஏன் காதி நிதிபதியாக வர முடியாது? எனக் கேட்கின்றேன்.

காதி நீதிபதியினால் விவாகரத்து பெற்ற ஒரு பெண் தனது பிள்ளைகளுக்கு கணவரால் பராமரிப்புச் செலவு கிடைக்காது விட்டால் காதி நீதிபதியின் கடிதம் எடுத்துக் கொண்டு சிவில் நீதிமன்றத்துக்குப் போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பிள்ளைச் செலவு கட்டண விடயத்தில் காதி நீதிபதியினால் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியாமல் உள்ளது. ஆகவேதான் முஸ்லிம் விவாகம், விவாகரத்துச் சட்டம் தொடர்பான காதி நீதிமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வருதல் வேண்டும். நான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமைச்சரவைப் பத்திரமொன்றை அமைச்சரவைக்குச் சமர்ப்பித்தேன். அதில் திருமண வயது 18 வயதாக இருத்தல் வேண்டும் என்பதை எல்லோரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். முஸ்லிம் பெண்களும் காதி நீதிபதியாக வர வேண்டும். ஒருவர் வேறு ஒரு திருமணம் முடிப்பது என்றால் ஏற்கனவே திருமணம் முடித்த பெண்ணுக்கு எவ்வித கொடுப்பனவையும் கொடுக்காமல் விவாகரத்துப் பெற்று இலகுவில் இன்னொரு திருமணம் முடிப்பதை தடுத்தல் அவசியம். அதற்காக ஒரு சரியான சட்டத்தை ஏற்படுத்தல் வேண்டும். இது நியாயம் இல்லையா? இதில் நீதியில்லையா? இந்தப் பெண்கள் கடந்த காலங்களில் கஷ்டப்படுவது நமது கண்களுக்குத் தெரியவில்லையா ? இதிலேயே நான் மாற்றம் கொண்டுவருவதற்காக முனைகின்றேன். அதற்காக காதி நீதிமன்றத்திலும் சில மாற்றங்கள் கொண்டுவருதல் வேண்டும். நான் ஒருபோதும் காதி நீதிமன்ற முறைமையை ஒழிக்க வேண்டும் என்று கூறவில்லை. பலர் பல மாதிரியாகப் என்னைப் பற்றி பேசுகின்றார்கள்.

திருமணம் முடிக்கும் விடயத்தைப் பொறுத்த வரை துருக்கி, ஆஜர்பைஜான், ஹிசேனியா போன்ற பல நாடுகளில் இரண்டு பேருக்கு மேல் திருமணம் முடிக்க முடியாது. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் கூட முதலாவது பெண்ணின் அனுமதி பெறப்படல் வேண்டும். முதலாவது பெண் அனுமதி வழங்காவிட்டால் ஒரு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து உரிய நியாயங்களை காட்டி நீதிமன்றத்தினால் அனுமதி பெறப்பட்ட பின்பே அவர் இரண்டாவது திருமணம் முடிக்க முடியும். இரண்டு பெண்களையும் சமமாக நிர்வகித்தல், அவரது பொருளாதார நிலைமை, உடல் வலிமை என பாகுபாடின்றி ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படல் வேண்டும். முதல் பெண்ணின் அனுமதியின்றி பலதார திருமணங்கள் செய்ய முடியாது.

ஆனால் எமது சமூகத்தில் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பெண்களுக்கு உரிய கௌரவம் வழங்கப்படல் வேண்டும். ஆகவேதான் கடந்த மார்ச் மாதம் அமைச்சரவையில் எனது அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவைக்கு வந்த பிறகு அதில் சில மாற்றங்கள் செய்வதற்கு அமைச்சரவை சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. விமர்சனம் தெரிவிப்போர் என்ன சொன்னாலும் முஸ்லிம் விவாகரத்து விவாக சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவதில் நான் பின்வாங்கப் போவதில்லை. நான் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தில் கண்டிப்பாக கூறியது, இச்சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வருதல் வேண்டும் என்பதாகும்.

சில நிவர்த்தி செய்யக் கூடிய பிள்ளைப் பராமரிப்புச் செலவு, பெண்களது தாபரிப்பு போன்ற பிரச்சினைகளான சில அதிகாரங்களை மாவட்ட நீதிமன்றதுக்கு வழங்குங்கள் எனக் கூறினார்கள். நான் இதற்கு முன்வந்திருக்காவிட்டால் இந்த அரசு ஆட்சிக்கு வந்ததுமே இதனை இலகுவாக இந்தச் சட்டத்தினை மாற்றி பொதுச் சட்டத்திற்குள் கொண்டு வந்திருப்பார்கள். நான் அதனைத் தடுத்து முஸ்லிம் சட்டம் பற்றிய ஆலோசனைக் குழுவொன்றை நியமித்தேன். அதில் காதிமார்களை அழைத்து அவர்களுக்கு உள்ள பிரச்சினைகளை ஆலோசித்து அப்பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கே முயற்சிக்கின்றேன்.

சிறிய பிள்ளைகளது பராமரிப்பு பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் முயற்சியிலும், எமது சட்டத்தைக் காப்பாற்றுவதற்காகவும் நான் போராடி வருகின்றேன். ஆனால் எம்மவர்கள் சிலர்என்னைப் பற்றி ஒரு பிழையான கோணத்தில் சித்திரிக்கின்றனர். இதற்கு ஒருபோதும் நான் பயப்படப் போவதில்லை. நான் மீண்டும் இதனை அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பிறகு அமைச்சரவை என்ன சொல்கின்றதோ அதையே செய்ய முடியும். முப்பது பேர் கொண்ட அமைச்சரவையில் நான் மட்டுமே முஸ்லிமாக உள்ளேன். எம்மில் சிலர் இதை அரசியல்மயமாக்கிப் பார்க்கின்றார்கள். எங்களுக்குத் தெரியும் இதற்குப் பின்னால் யார் உள்ளனர் என்று. சிலர் நல்ல எண்ணத்துடன் பேசுகின்றார்கள். அவர்களிடம் நாம் பேச முடியும்.

எனக்கு ஏசுபவர்கள் என்ன செய்தார்கள்? கடந்த கால அரசாங்கத்தில் 23 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தார்கள். அவர்கள் என்ன செய்தார்கள் ? இவர்களால் இலகுவாக அன்று செய்திருக்க முடியாமல் போய் விட்டதா? இதனைப் பற்றி பேசுகின்ற முஸ்லிம் பெண் ஒருவரின் நெருங்கிய உறவினர் அமைச்சராக இருந்தார். அவர் என்ன செய்தார்? சமூகத்திற்கு செய்தது ஒன்றுமே இல்லை. நடைமுறையில் உள்ள சட்டம் பற்றிய பிரச்சினைகள் இவர்களுக்கு விளங்குவதுமில்லை.

இதைப் பற்றி அறிந்து கொண்டு வரைபொன்றினை தயாரிப்பதற்கு குழுவொன்றினை முஸ்லிம் சமய திணைக்களத்தின் கீழ் உள்ள வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்றி தலைமையில், முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் அஷ்ரப், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை கலாநிதி ஹக்கீம் உட்பட சில உறுப்பினர்களை நியமித்தேன். அவர்களுடன் இணைந்து இந்த நாட்டில் கஷ்டப்படும் எமது பெண்கள், சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எதிர்காலத்தில் எவ்வாறு பாதுகாக்க முடியுமென ஆராய்ந்தோம். எம்மத்தியிலும் மாற்றங்கள் வர வேண்டும். அதற்கான காலம் நம்மிடம் வந்துள்ளது. உலகத்தில் எவ்வளவோ மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. எமது முஸ்லிம் பெண்களுக்கு உரிய அந்தஸ்தினை நாம் வழங்குதல் வேண்டும். எமது சமூகத்தில் விவாகரத்து பெற்ற பெண்கள் தமது குழந்தைகள் சிறுபிள்ளைகளோடு எவ்வளவோ கஷ்டப்படுகின்றார்கள். ஆண்கள் இலகுவாக விவாகரத்துப் பெற்று பலதார திருமணம் முடிக்கின்றனர். அந்தப் பிள்ளைகளுக்காக சிறு தொகையே செலுத்துகின்றனர். முன்பு இருந்த இந்த நாட்டில் நீதியமைச்சர்களாக இருந்தவர்கள் தங்களது காலத்தில் இவ்விடயத்தினை மிக இலேசாக செய்திருக்க முடியும். இவ்விடயத்தில் அவர்கள் தங்களது பெயரை காப்பாற்றிக் கொண்டு ‘சமூகத்திற்கும் எமது பெண்களுக்கும் என்ன நடந்தாலும் பரவாயில்லை’ என்று இன்னொருவரின் தலையில் இவ்விடயத்தினை விட்டு விட்டு நல்ல பிள்ளையாக சமுதாயத்தில் உள்ளார்கள். அதனையே என்னாலும் செய்ய முடியும். இந்த விடயம் அமைச்சரவையில் நான் மட்டும் எடுக்கும் தீர்மானம் இல்லை. ஏனைய முழு அமைச்சர்களும் இணைந்து எடுக்கும் முடிவை நாம் ஏற்கத்தான் வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: