2022 பட்ஜெட்டில் அரச மொத்த செலவு 2505.3 பில்லியன்

லோரன்ஸ் செல்வநாயகம்

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் ஒதுக்கீட்டு சட்டமூலம் இந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அதன் பிரகாரம் அடுத்த வருடத்துக்கான ஒதுக்கீடு சட்டமூலத்துக்கமைய அரசாங்கத்தின் மொத்த செலவு 2505.3 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் 1776 பில்லியனுக்கும் அதிகம் புனர்நிர்மாண செலவாகும்.

இந்த வருடத்துக்கான செலவான 2538 பில்லியனுக்கு நிகராக அடுத்த வருடத்தில் அரசாங்கத்தின் செலவு 33 பில்லியன் ரூபாவாக குறைந்திருக்கின்றது. மேலும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கும் ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் அடிப்படையில் பொதுச் சேவைகளுக்காக மொத்தமாக 12.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருப்பதாக பதிவாகி இருக்கின்றது.

அதில் ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், அமைச்சரவை அலுவலகம், நீதிமன்றம், பாராளுமன்றம், ஆணைக்குழுகள் உட்பட நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன.

அத்துடன் அடுத்த வருட வரவு செலவு திட்டத்தில் அதிககூடிய ஒதுக்கீடாக பாதுகாப்பு செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அது இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், 18பில்லியன் ரூபாவால் அதிகரித்திருக்கின்றது.

இந்த வருடத்தில் பாதுகாப்பு செலவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது 355பில்லியன் ரூபா வாகும். அடுத்த வருடத்துக்கு 373 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புக்கு அடுத்தபடியாக அதிகம் ஒதுக்கப்பட்டிருப்பது அரச சேவை உள்ளூராட்சி மற்றும் மாகாணசபை அமைச்சுக்காகும்.

அது 286.7 பில்லியனாகும். அதில் 286 பில்லியன் புனர்நிர்மாண செலவாகும். கல்வி அமைச்சுக்கு இந்த வருட செலவு தலைப்பில் 126.5பில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தபோதும் அடுத்த வருடத்துக்கு 127.6 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சுக்கு 153.5 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

அது இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 6 பில்லியன் வரை குறைவாகும். நிதி அமைச்சுக்காக 185.9 பில்லியன் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அது இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 28 பில்லியன் ரூபா அதிகமாகும்.

அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்ட அறிக்கை நிதி அமைச்சரால் எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கின்றது.வரவு செலவு திட்டத்துக்கான இறுதி வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி மாலை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: