உள்ளூராட்சி தேர்தலின் தலைவிதி எங்குள்ளது?

சுஐப் எம்.காசிம்

அரசியல் கட்சிகளின் மக்கள் செல்வாக்குகளை அளவீடு செய்கின்ற அடித்தளமாகப் பார்க்கப்படுவது உள்ளூராட்சி தேர்தல். எம்.பிக்களாக இருந்தவர்களும், இதில் போட்டியிடுவது இதற்காகத்தான். இந்தச் சபைகளின் தலைவர்களாக இருந்த பலர் எம்.பிக்களாக, அமைச்சர்களாக, ஏன் நாட்டின் தலைவர்களாக (பிரேமதாஸ) உயர்வதற்கு அடித்தளமாக அமைவதும் இதன் அதிகாரங்கள்தான்.

1987 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தேர்தல் முறை, கடந்த நல்லாட்சி அரசில் மாற்றம் செய்யப்பட்டு வட்டாரம், விகிதாசாரம் கலந்த கலப்பு முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. அதுவரைக்கும் விகிதாசார அடிப்படையிலே இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது. சிறிய, புதிய கட்சிகளைப் பலப்படுத்தல், பெண்களின் பிரதிநிதித்துவங்களை உள்வாங்கல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக மாற்றஞ் செய்யப்பட்ட இந்த கலப்பு முறையில், நடைமுறைச் சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. இதனால்தான், மாகாண சபைத் தேர்தல்களையும் இன்னும் நடாத்த முடியாமல் இருக்கின்றது.

சிறிய, புதிய கட்சிகளைப் பலப்படுத்துவது என்ற கருத்தியலில், பலமுள்ள கட்சிகளைப் பலவீனப்படுத்தல் என்ற பொருளும் உள்ளதுதான். இந்த, யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள, கலப்பு முறையின் முதலாவது தேர்தலே உதவியிருந்தது. 2018 பெப்ரவரியில் நடத்தப்பட்ட உள்ளூராட்சி தேர்தலில், உருவாகி மூன்றே மூன்று மாதங்களான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சி, மொத்தமாக உள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 241 சபைகளைக் கைப்பற்றியது. புதிய கட்சிகளைப் பலப்படுத்தல் என்ற ரணிலின் கலப்பு முறைத் தேர்தலை இது உண்மைப்படுத்தியதுடன், பெரிய கட்சிகளைப் பலவீனப்படுத்தியதையும் பார்க்க முடிந்தது.

நல்லாட்சி அரசின் பிரதான பங்காளிக் கட்சிகளிகளாக இருந்த ஐக்கிய தேசிய கட்சி 34, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 02, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 07 சபைகளையுமே கைப்பற்றின. இப்பொழுது, இந்தச் சபைகளின் ஆட்சிக்காலங்கள் ஆயுளை நெருங்கிக்கொண்டிருக்கின்றன. 2022 பெப்ரவரியில் இவை கலைக்கப்பட வேண்டும். கலைக்கப்பட்டால், உடன் தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதும் இல்லை. சபைகளை, உள்ளூராட்சி ஆணையாளர்களிடம் ஒப்படைத்து, தேவையான நேரத்தில் நடத்தவும் முடியும். மறுபக்கம், உடன் கலைக்காது ஒரு வருடத்துக்கு சபைகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும் சட்டத்தில் இடமிருக்கிறது. இந்த, அரசாங்கம் எதைச் செய்யும் என்ற ஆரூடங்கள்தான் அதிகரித்து வருகின்றன.

எதிர்நோக்கப்படும் உச்சக்கட்ட நிதி நெருக்கடி, கொரோனாத் தொற்றுக்களில் தேர்தலை நடத்த முடியுமா? அல்லது சபைகளை ஒரு வருடம் நீட்டிவிட்டு, சுமார் எட்டாயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்குவது சுலபமானதா? அதிக சபைகளைக் கைப்பற்றியுள்ள இந்த அரசு, சபைகளைக் கலைக்க விரும்புமா? வந்துபோன இந்திய வெளியுறவு செயலரின் அழுத்தத்தால் மாகாண சபைத் தேர்தலை நடத்த நேரிடின், இந்த சபைகள் உதவுமா? என்றும் சிந்திக்கலாம். அவ்வாறு கலைத்தாலும் தேர்தலுக்கான செலவுகளுக்கு என்ன செய்வது? என்ற சிந்தனைகளிலே சில ஊடகங்கள், இந்தத் தேர்தல் தொடர்பில் ஊகங்களை வெளியிடுகின்றன.

இப்போதுள்ள நிலையில், சபைகளின் ஆயுட்காலம் முடிந்த கையுடன், ஆணையாளர்களிடம் ஒப்படைப்பதுதான் உகந்ததென, அரசாங்கம் கருதுமென ராஜபக்ஷக்களுக்கு நெருக்கமான ஊடகங்கள் ஊகிக்கின்றன. இதற்கும் சில காரணங்கள் இல்லாமலில்லை. எந்த வேளையிலும் ராஜபக்ஷக்கள் தேர்தலுக்கு அஞ்சியதில்லை. உரிய வேளைக்கும், வேளைக்கு முன்னரும் மக்கள் ஆணைகளுக்கு மதிப்பளித்து, வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றி தேர்தல்களை நடத்திக் காட்டியவர்கள் ராஜபக்ஷக்கள். இன்னும் நான்கு வருடங்கள் ஆட்சியில் இருக்கப்போகும் இந்த அரசுக்கு, உள்ளூராட்சித் தேர்தல் ஒரு பொருட்டும் இல்லை என்பதால், மக்கள் ஆணைக்கே இந்த அரசு மதிப்பளிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது. என்னவானாலும், நிதி நிலைமைகளும்,நோய் நிலைமைகளுமே இத்தேர்தலை தீர்மானிக்கப் போகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: