சீன கடன் பொறிக்குள் இலங்கை சிக்கிவிட்டதா?

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல் துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

இலங்கையின் கடன் சுமை பற்றி இப்போது பேசாத நபர்கள் இல்லை. நாடு கடன் சுமையில் மூழ்கிக் கொண்டிருக்கிறதென்றும் சீனாவின் கடன் பொறியில் சிக்கிக்கொண்டு வங்குரோத்து நிலையை அடைந்துவிடும் என்றும் இலங்கையில் இருந்து மட்டுமல்ல, இந்தியாவிலிருந்தும் தமிழ்பேசும் மக்கள் வாழும் நாடுகளிலிருந்தும் பொருளியலின் அரிச்சுவடி கூடத்தெரியாத பிரகிருதிகளெல்லாம் சமூக ஊடகங்களில் நிபுணர்களாக நினைத்துக் கொண்டு கருத்துச் சொல்வதை கவலையோடு பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

இலங்கையின் அரசபடுகடன் உயர்மட்டத்தில் உள்ளதென்பது உண்மைதான். ஆனால் அதற்காக நாட்டின் பொருளாதாரம் ஒரு கட்டடம் சரிந்து விழுவதைப்போல சரிந்து விடும் என்று கனவு காண்பதெல்லாம் சுத்த அபத்தமானது.

ஓரு நாட்டின் அரசாங்கம் கடன் பெறுவதென்பது காலாகாலமாக நடைபெறும் ஒரு விடயம் தான். உலகிலேயே அதிக கடன் சுமைகொண்ட நாடு ஐக்கிய அமெரிக்கா தான் என்றால் பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அந்த நாடுதான் உலகின் முதன்மைப் பொருளாதாரம்.

கடன் வாங்குவதொன்றும் பிழையான விடயம் கிடையாது. ஆனால் அக்கடன் எதற்காக வாங்கப்படுகிறது, அது எவ்வாறு மீளச் செலுத்தப்படுகிறது என்பதுதான் மிக முக்கியமானது. அந்த வகையில் இலங்கை தான் பெற்ற கடன்களை உற்பத்தியை ஈட்டித்தரும் துறைகளில் முதலீடு செய்வதற்காக பயன்படுத்தவில்லை என்பதால் பெற்ற கடன்களை மீளச் செலுத்துவதற்குரிய வருமானப்பாய்ச்சலை உருவாக்கத்தவறிவிட்டது. இதனால் ஏற்கெனவே பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்கு மீளவும் கடன் பெறவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது. ஆயினும் இற்றைவரையில் இலங்கை ஒரு தடவையாவது கடன் தவணையை மீளச் செலுத்தத் தவறியதில்லை.

பொதுவாக ஒரு நாட்டின் கடன் சுமையை அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு தொடர்புபடுத்தி அதன் சதவீதமாகக் கூறுவார்கள். கடந்த 2019ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரசாங்கத்தின் மொத்தக் கடன் 86.6 சதவீதமாக இருந்தது. அது 2020 இல் 101 சதவீதமாக உயர்ந்தது. கடன் தரமிடல் நிருவனங்களின் மதிப்பீட்டின் படி 2021 இது 108 சதவீதமாக அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. சிலவேளை இது ஒரு மிகைப்படுத்தப்பட்ட எதிர்வுகூறலாகக் கூட இருக்கலாம்.

எவ்வாறாயினும் கடன் சுமை அதிகரித்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. இவ்வாறு பெறப்பட்ட கடன்களை உள்நாட்டுக் கடன்கள் மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் என இருவகையாக பிரிக்கலாம். அந்த வகையில் 2019ஆம் ஆண்டில் உள்நாட்டிலிருந்து பெறப்பட்ட கடன்கள் 52 சதவீதமாகவும் வெளிநாட்டுக் கடன்கள் 48 சதவீதமாகவும் இருந்தன. 2020 ஆம் ஆண்டில் இவை முறையே 60 சதவீதமாகவும் 40 சதவீதமாகவும் மாற்றமடைந்தன. இதிலிருந்து இலங்கை அரசாங்கம் உள்நாட்டுக்கடன் மூலாதாரங்களை நோக்கி நகர்வது தெளிவாகத் தெரிகிறது.

இவற்றுள் அரசாங்கம் பெற்ற வெளிநாட்டுக் கடன்களே பெரும்பாலும் அனைவரதும் அதிக கரிசனைக்கும் கவலைக்கும் உள்ளாகின்றன. இலங்கையின் மொத்த கடன்களில் 40 சதவீதமான வெளிநாட்டுக் கடன்கள் பல்வேறு நாணய அலகுகளில் பெறப்படுகின்றன. ஆயினும் இலகுதன்மை கருதி அவை பொதுவாக ஐக்கிய அமெரிக்க டொலர்களில் மதிப்பிடப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றன.

இதன்படி இலங்கையின் வெளிநின்ற வெளிநாட்டுக்கடன்களின் அளவு 2019 ஆண்டின் இறுதியில் 54.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் 2020 ஆண்டின் இறுதியில் 49.2 பில்லியனாகவும் இருந்தது. 2021 ஆண்டின் ஏப்ரல் மாத இறுதியின் போது இது 35.1 பில்லியனாக வீழ்ச்சியடைந்தது. ஆகவே இலங்கை வெளிநாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் மீளச்செலுத்த வேண்டியுள்ள வெளிநின்ற கடன்கள் படிப்படியாகக் குறைவடைந்து சென்றுள்ளன. செலுத்தப்பட வேண்டியுள்ள கடன் தவணைகளை இலங்கை முறையாக மீளச்செலுத்தியமையே வெளிநாட்டுக்கடன்கள் குறைவடையக் காரணமாகும்.

உதாரணமாக, 2021இல் 4.4 பில்லியன் டொலர்களும் 2020 இல் 5.8 பில்லியன் டொலர்களும் மீளச் செலுத்தப்பட்டுள்ளன. 2021 ஆண்டில் டொலர் வடிவில் மீளச்செலுத்த வேண்டியிருந்த கடன்கள் 6.8 பில்லியன் டொலர்களாக இருந்தன. அதில் உள்நாட்டவர்களுக்கு சொந்தமான கடன்கள் 2.5 பில்லியன் டொலர்களாகவும் வெளிநாட்டவர்களுக்குத் திருப்பிச் செலுத்த வேண்டிய 4.15 பில்லியன்களும் உள்ளடங்கியிருந்தன. இவற்றுள் சுமார் 600 மில்லியன் மார்ச் மாதமளவில் மீளச் செலுத்தப்பட்டு விட்டன. உள்நாட்டவர்களுக்கு மீளச்செலுத்தப்படவேண்டியுள்ள டொலர் வடிவிலான கடன்களின் மீள்செலுத்தல் காலம் நிடிக்கப்பட்டுள்ள நிலையில் 2021 இறுதிவரையில் இன்றும் சுமார் 3.5 பில்லியன் டொலர்கள் கடன் மீளச்செலுத்தப்படவேண்டிய நிலையில் உள்ளது.

அதேபோன்று எதிர்வரும் 2026 வரையில் இலங்கை வருடாந்தம் சுமார் 4.3 பில்லியன் டொலர்களை மிளச்செலுத்த வேண்டியுள்ளதாக மதிப்பீடுகள் கூறுகின்றன. அடுத்துவரும் காலப்பகுதியில் அதுவே இலங்கைக்கு மிகப்பெரிய சவாலாக அமையக் கூடும். ஆயினும் உலகவங்கி உள்ளிட்ட நிறுவனங்களும் நட்பு நாடுகளும் இலங்கைக்கு உதவுவதாகக் கூறியுள்ளன. இலங்கை தன்னிடமிருந்த டொலர் கையிருப்புகளை இழந்தமைக்கு கடன் மீளச்செலுத்தல் தேவைப்பாடுகளும் மிகப்பெரிய காரணியாக அமைந்தமையையும் மறக்க முடியாது. இலங்கையின் கடன் மீளச்செலுத்தலில் எழக்கூடிய மேற்படி சிக்கல்களைக் கருத்திற்கொண்டே தரமிடல் நிறுவனங்கள் இலங்கையின் கடன் தரமிடலைக் குறைத்தன என்பதையும் இங்கு சுட்டிக்காட்டலாம்.

இவ்வாறு இலங்கை பெற்றுக்கொண்ட வெளிநாட்டுக் கடன்கள் எங்கிருந்து பெறப்பட்டன? அக்கடன்களுக்கு சொந்தக்காரர்கள் யார்? உண்மையிலேயே சீனா இலங்கையைக் கடனுக்கு வாங்கிவிட்டதா போன்ற சந்தேகங்களை தீர்ப்பதற்கு அட்டவணையிலுள்ள தரவுகள் பயன்படும்.

அட்டவணையிலுள்ள தரவுகளின் படி இலங்கைளின் வெளிநாட்டுக் கடன்களில் கிட்டத்தட்ட அரைப்பங்கு சந்தைக் கடன்களாக உள்ளன.

அதாவது சர்வதேச நிதிச்சந்தைகளில் சந்தை வட்டிவீதங்களில் பெறப்பட்ட கடன்களாகும். இவற்றின் கடன் மீளச்செலுத்தற்காலம் குறைவாகவும் வட்டிவீதம் அதிகமாகவும் இருக்கும்.

இலங்கை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்தும் உலக வங்கியிடமிருந்தும் கடன்களைப் பெற்றுள்ளது. இது மொத்த வெளிநாட்டுக் கடன்களில் 22 சதவீதமாகும். ஜப்பானும் இலங்கைக்கு தொடர்ச்சியாக சலுகைக் கடன்களை வழங்கிவரும் ஒரு நாடாகும். எனவே மொத்த வெளிநாட்டுக் கடன்களில் சுமார் மூன்றில் ஒரு பகுதி சலுகைக் கடன்களாக இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

சீனாவைப் பொறுத்தமட்டில் இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களில் அதன் பங்கு 10 சதவீதமாகும். ஆயினும் கடன்கள் சார்பளவில் உயர்ந்த வட்டிவீதத்திலும் சந்தை நிபந்தனைகளை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கும். தற்போதைக்கு ஜப்பான் வழங்கியுள்ள அதே சதவீதத்தையே சீனாவும் வழங்கியுள்ளது. இருப்பினும் ஜப்பான் இலங்கைக்கு கடன் வழங்கும் நோக்கத்திற்கும் சீனா கடன் வழங்கும் நோக்கத்திற்கும் இடையே பாரிய வேறுபாடுகள் உண்டு.

எனவே சீனாவின் கடன் பொறிக்குள் இலங்கை சிக்கிவிட்டதென்றோ கடனில் முழ்கப்போகிறது என்றோ கூறப்டும் கூற்றுகள் மிகைப்படுத்தப்பட்டனவாகும். அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்வதே புத்திசாலித்தனமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: