‘புலிகளுக்கே சமாதிகட்டிய எங்களுக்கு பொருளாதாரப் போரை முடிப்பதெல்லாம் ஜுஜுபி…’

” புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவந்ததுபோல பொருளாதாரப் போருக்கும் சமாதி கட்டுவோம்.. ” என ஆட்சியாளர்கள் சூளுரைத்தனர் – மார்தட்டினர் – வீரவசனம் பேசினர் – பொங்கியெழுந்து அடுக்குமொழியில் – அனல் பறக்க அறிக்கைகளையும், அறிவிப்புகளையும் விடுத்தனர்.

இதற்காக சிவில் நிர்வாகம் மற்றும் பொருளாதார துறைசார் விடயங்களுக்கு அவசர அவசரமாக இராணுவ நியமனங்கள் இடம்பெற்றன. அரசின் இந்த நகர்வுக்கு ஜனநாயகத்தை நேசிக்கும் அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தாலும் – ‘ஏதோ அதிரடி தாக்குதலுக்கு வியூகம் வகுக்கப்படுகின்றது’ என எண்ணி 69 இலட்சம் பேர் தமக்கு தாமே ஆறுதல் கூறிக்கொண்டனர்.

‘வாக்கு’ என்ற ஜனநாயக ஆயுதத்தின்மூலம் மக்கள் அமோக ஆணையை வழங்கிய நிலையிலும் , ’20’ என்ற சர்வாதிகார ஆயுதத்தின்மூலம் அரச தலைவர் ‘சர்வ பலமுத்தையும்’ தனதாக்கிக்கொண்டார். ஜனநாயக ஆட்சிக்கு இது ஆபத்து என்றபோதிலும், ‘தரமாக – சிறப்பாக செய்வார்’ என்ற நம்பிக்கையில் பெரும்பாலான மக்கள் இதனையும் சகித்துக்கொண்டனர்.

பல்தேசிய கம்பனிகளின் கொட்டத்துக்கு முடிவு கட்டப்படும், கறுப்பு சந்தைக்கு சமாதி கட்டப்படும், வர்த்தக மாபியாக்களுக்கு கடிவாளம் போடப்படும், இவற்றின்மூலம் பொருட்களின் விலை குறையும், பொருளாதாரம் மேம்படும், மக்களின் வாழ்வாதாரம் உயரும், உறுதியான பொருளாதாரத் திட்டங்கள் வகுக்கப்படும் என்ற நம்பிக்கையில் அடிப்படையிலேயே மக்கள் அனைத்தையும் தாங்கிக்கொண்டர். போர்காலத்தில் செய்த அதே தியாகங்களை பொருளாதாரப்போரை முடிப்பதற்கும் செய்து ஒத்துழைப்பு வழங்கினர்.

ஆனால் இன்று என்ன நடக்கிறது?

அரிசி ஆலை உரிமையாளர்கள் சக்கரை வியூகம் அமைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.

பால்மா இறக்குமதியாளர்கள் எறிகணை தாக்குதல் தொடுக்கின்றனர்.

சீமெந்து இறக்குமதியாளர்கள் கண்ணிவெடி வைத்து, அரசு முன்னோக்கி நகர்வதை தடுக்கின்றனர்.

சமையல் எரிவாயு இறக்குமதியாளர்கள், ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்துகின்றனர்.

மறுபுறத்தில் மருந்து, இறக்குமதி பொருட்கள் என அத்தனை பக்கங்களிலும் தாக்குதல்கள் தொடர்கின்றன.

ஆனால் அரசிடம்தான் பலம்பொருந்திய ஆயுதங்கள் உள்ளன. அப்படி இருந்தும் ‘கட்டுப்பாட்டு விலை’ என்ற குண்டு வீசப்படுவதும், சமர் களத்திலிருந்து படைகளை மீள பெறுவதுபோல வர்த்தமானி அறிவித்தல்களை மீளப்பெறும் போன்ற தாக்குதல்களே இடம்பெற்றுவருகின்றன.

போரை முடிப்பதற்கான ஆற்றல் இருந்தும் எதிரிகளிடம் சரணடையும் நிலையிலேயே அரசு உள்ளது. இதுகூட ‘தந்திரோபாய பின்வாங்கல்’ என விளக்கம்கூறி சரணடைவைகூட நியாயப்படுத்துபவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

போரின்போது முன்னோக்கி நகராமல் படைகள் தொடர்ச்சியாக தோற்கின்றதெனில், பின்வாங்குகின்றதெனில் தளபதி எதற்க, கட்டளைத் தளபதி எதற்கு என்றெல்லாம் வினா எழும். இந்த பொருளாதாரப் போரிலும் அப்படிதான். பொருட்கள் கட்டுக்கடங்காமல் உயர்கின்றதெனில் அமைச்சரவை எதற்கு, அமைச்சர்கள் எதற்கு என்ற கேள்வி எழுகின்றது.

‘உலக சந்தை, கொரோனா பரவல்’ என இந்த விடத்தை மட்டும் குறிப்பிட்டு தோல்விக்கு – பின்வாங்கலுக்கு – சரணடைவுக்கு விஞ்ஞான விளக்கத்தை வழங்க முற்படக்கூடாது.

பொருளாதாரம் என்பதும் தேசிய பாதுகாப்பின் ஓர் அங்கம்தான். எனவே, தேசிய பாதுகாப்பை பிரதான விடயமாக முன்வைத்து ஆட்சிக்கு வந்தவர்கள், பொருளாதார விடயங்களில் கோட்டை விடுவதும் தேசிய பாதுகாப்புக்கு ஏதேவொரு விதத்தில் தாக்கம்தான்.

ஆர்.சனத்

( இரண்டாம் கட்ட சமர் விரைவில்….)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: