இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர்

(நா.தனுஜா)

பசுமை அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட விடயங்களில் இலங்கை விசேட கவனம் செலுத்தவேண்டியதன் அவசியம் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபி, எதிர்வரும் 2023 ஆம் ஆண்டளவில் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் செயற்திட்டத்தின்போது பாரிஸ் உடன்படிக்கை உள்ளிட்ட சூழல்நேய செயற்பாடுகள் உள்வாங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்துடன் இணைந்து இலங்கையின் சுற்றாடல் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘பசுமை அபிவிருத்தி தொடர்பான கொழும்பு அபிவிருத்தி கலந்துரையாடல்’ என்ற தலைப்பிலான மாநாடு நேற்று (13.10.2021) செவ்வாய்கிழமை மாலை 4.30 மணிக்கு ஆரம்பமானது.

‘பசுமை அபிவிருத்தி’ என்ற தொனிப்பொருளின் கீழ் சூழலுக்கு நேயமான அபிவிருத்தி செயற்திட்டங்கள், காலநிலை மாற்றங்களைக் கையாளல், சூழலுக்குப் பாதிப்பேற்படாதவகையில் உரியவாறு கழிவுகளை அகற்றல் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த 4 நாட்கள் மாநாட்டின் தொடக்கநாளான திங்கட்கிழமை சுற்றாடல்துறை அமைச்சர் மகிந்த அமரவீர, ஐக்கிய நாடுகள் சபைக்கான உதவி செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா, சமுர்த்தி,வதிவிடப்பொருளாதார, நுண்நிதிய, சுயதொழில் மற்றும் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ரொபர்ட் ஜஹ்காம் ஆகியோரின் விசேட உரைகளும் இடம்பெற்றன.

அதன்படி ‘பசுமை அபிவிருத்தி’ தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபி, பசுமை அபிவிருத்தி தொடர்பான இந்த விரிவான கலந்துரையாடலை ஐரோப்பிய ஒன்றியம் பெரிதும் வரவேற்பதாகக் குறிப்பிட்டதுடன் அதன் இலக்குகளை அடைந்துகொள்வதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பொதுவான கொள்கைகளையும் செயற்திட்டங்களையும் தயாரிக்கவேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இலங்கையில் உள்ள மழைக்காடுகள் மற்றும் ஏனைய பிரத்யேகமான வளங்கள் தொடர்பில் குறிப்பிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர், ஆகவே பசுமை அபிவிருத்தி தொடர்பில் பேசுவதற்கும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கும் இலங்கை மிகவும் பொருத்தமான இடமாகத் திகழ்வதாகவும் கூறினார்.

மேலும் ஏற்கனவே பசுமை அபிவிருத்தி உள்ளிட்ட திட்டங்களுக்காக (மலர்கள் வளர்ப்பு) 18 ஆயிரம் யூரோக்களும் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்காக 2000 யூரோக்களும் கொவிட் – 19 வைரஸ் பரவலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 2 மில்லியன் யூரோக்களும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டமையினை நினைவுறுத்திய டெனிஸ் சைபி, ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவு – செலவுத்திட்டத்தில் காலநிலை மாற்றத்தைக் கையாள்வதற்கான நிதியொதுக்கீட்டில் பிரத்யேக கவனம் செலுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். அத்தோடு எதிர்வரும் 2023 ஆம் ஆண்டில் ஆரம்பமாகும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கலில் பாரிஸ் உடன்படிக்கை உள்ளடங்கலாக சூழலுக்கு நேயமான விடயங்களில் கவனம் செலுத்தப்படுவுள்ளமை தொடர்பிலும் எடுத்துரைத்தார்.

மேலும் இதன்போது கருத்து வெளியிட்ட இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, அண்மையகாலங்களில் காலநிலை மாற்றத்தினால் இலங்கையும் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்திருப்பதாகக் குறிப்பிட்டதுடன் இதிலிருந்தும் கொவிட் – 19 வைரஸ் பரவல் சவாலில் இருந்தும் நாட்டுமக்களைப் பாதுகாப்பதற்கான நீண்டகால செயற்திட்டங்களைத் தயாரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்திவருவதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: