தனியார் சட்டமூலம் என்றால் என்ன?

என்.எம்.அமீன்

பதவி ஒன்றை வகிக்காத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலம் தனியார் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக சட்டமூலமாகும். இது இரண்டு வகைப்பட்டது.

ஒன்று பொது அல்லது மக்களுக்கு முக்கியத்துவமான காரணிகள் தொடர்பான சட்டமூலம். இரண்டாவது யாராவது ஒரு விசேட ஆளுக்கு, நிறுவனம் ஒன்றைக் கூட்டிணைப்பதற்கான சட்ட மூலமாகும்.

நாட்டின் சட்ட ஆக்க சபையான பாராளுமன்றத்தில் அரசாங்கத்துக்காக ஆக்கப்படும் சட்டங்களுக்கு மேலதிகமாக பதவி எதுவும் வகிக்காத பாராளுமன்ற உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலங்களே பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரத்தியேக சட்டமூலமாகும்.

பாராளுமன்றத்தில் தனியார் உறுப்பினர் என்பது சபாநாயகர், பிரதி சபாநாயகர், பிரதிக் குழுக்களின் தலைவர், பிரதமர், அமைச்சரவை அங்கத்தவர்கள், அமைச்சரவையில்லாத அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத் தரப்பு பிரதம அமைப்பாளர், எதிர்க்கட்சி தரப்பு பிரதம அமைப்பாளர் அல்லாதோர் ஆவர்.

மேற்குறிப்பிட்ட பதவிகளை வகிக்க எந்த ஓர் உறுப்பினருக்கும் தனியார் பிரேரணை ஒன்றையோ பலவற்றையோ சமர்ப்பிக்கலாம். ஒரு சட்ட மூலத்தை சமர்ப்பிக்க விரும்பும் தனியார் உறுப்பினர் எவரும் சட்டமூலத்தின் நோக்கம், முக்கிய அம்சங்கள் ஆகியவற்றைத் தெரிவித்து அச்சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி கோர வேண்டும். பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் 52 (1) இன்படியே இந்த அனுமதி பெறப்பட வேண்டும். இவ்வாறான ஒரு கோரிக்கையும் பாராளுமன்ற உறுப்பினரால் பிரேரணையாகச் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அத்தோடு, உத்தேச சட்ட மூலத்தின் சிங்கள, தமிழ் மொழிப் பிரதிகளை மொழி ஆங்கில மொழிபெயர்ப்புடன் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் சட்டமூலம் அரசியலமைப்புக்கு இயைபானதா? அரசியல் யாப்பின் 13ஆவது திருத்தத்திற்கு முரண்பட்டதாக இருக்கின்றதா? என்பதனை அறிவதற்கும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் சட்டமா அதிபருக்கு சமர்ப்பிக்க வேண்டும். சட்டமா அதிபர் தனது கண்காணிப்பினை ஆறு வார காலத்துக்குள் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, 14 நாட்களுக்கு பின் பிரேரணையாக பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் வெளியிடப்பட வேண்டும். குறிப்பிட்ட பிரேரணைக்கு பாராளுமன்றம் அங்கீகரிக்கவில்லை எனில், இருபதுக்கும் குறையாத உறுப்பினர்களின் ஆதரவுடன் (எழுந்து நின்று ஆதரவைத் தெரிவித்து) நிலையியல் கட்டளை 52 (6) இன் பிரகாரம் சட்டமூலம் முதலாம் வாசிப்பில் நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும். அதன் பின் சட்டமூலம் அச்சிடப்பட்டு, உரிய விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும்.

குறிப்பிட்ட அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் இது குறித்த அறிக்கையைச் சமர்ப்பிக்கும் வரை சட்டமூலம் தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சருக்கு ஒப்படைக்கப்பட்டு, ஆறு மாத காலத்தில் அறிக்கை கிடைத்தாலும், கிடைக்காவிடினும் பிரேரணைக்கு அனுசரணை வழங்கிய பாராளுமன்ற உறுப்பினருக்கு இரண்டாம் வாசிப்பு விவாதத்திற்காகப் பிரேரணையைச் சமர்ப்பிக்கலாம்.

சட்டமூலத்தின் முதலாம் மதிப்பீட்டு திகதியிலிருந்து ஒரு வார காலத்திற்குள் 121 ஆம் உறுப்புரையின் கீழ் சட்டமூலத்தின் எந்தவொரு ஏற்பாட்டையும் சவாலுக்குட்படுத்தி எந்தவொரு பிரஜையும் உயர்நீதிமன்றில் மனுவொன்றைத் தாக்கல் செய்யலாம்.

இரண்டாம் மதிப்பீட்டின் பின்னர் சட்டமூலம் சட்டவாக்க நிலையியற் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். சட்டவாக்க நிலையியற் குழுவின் நிரந்தர அங்கத்தவர்களுக்கு மேலதிகமாக துறைசார் மற்றும் அக்கறை, ஆற்றலுள்ள அங்கத்தவர்களையும் தேவைக்கு ஏற்ப சபாநாயகர் நியமிப்பார். நிலையியற் குழுவில் ஒவ்வொரு வாசகமாகப் பரிசீலித்து அதன் அறிக்கை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

சட்டவாக்கக் குழுவின் அறிக்கையைப் பரிசீலித்த பின்னர் பிரேரணை மூன்றாம் முறையாக மதிப்பிடப் பெற்று சபையில் நிறைவேற்றப்படும். இதன் பின்னர் குறிப்பிட்ட சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பார்.

தனியார் சட்ட மூலத்தில் மற்றொரு வகை சங்கம் அல்லது அமைப்பு ஒன்றை கூட்டு இணைக்கக் கோரும் சட்டம் மூலமாகும். கூட்டிணைக்கக் கோரும் அமைப்பு தொடர்பாக பத்திரிகைகளில் மும்மொழிகளிலும் விளம்பரங்களைப் பிரசுரித்து அதன் பிரதிகள் சட்டமூலத்துடன் ஒப்படைக்கப்பட வேண்டும்.

அரசியலமைப்பிற்கான 13ஆவது திருத்தத்திற்கான மாகாணசபைப் பட்டியலின் நோக்கெல்லையினுள் வருகின்றதும், பகிரங்க வருமானத்துடன் தொடர்புடையதுமான விடயங்களைக் கொண்ட சட்டமூலமொன்றை தனியார் உறுப்பினர் அறிமுகப்படுத்த முடியாது.

இதுவரை தனியார் சட்ட மூலம் ஒன்றை சமர்ப்பிப்பது உட்பட்ட நடைமுறைகளைப் பார்த்தோம்.

தனியார் சட்ட மூலம் ஒன்றினைச் சமர்ப்பித்து விவாதிப்பதற்கு மாதத்தில் ஒரு நாள் ஒதுக்கப்படுகின்றது. எமது பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இதற்காக ஒதுக்கப்படுகின்றது. வேறு நாடுகளில் வேறு நாட்கள் ஒதுக்கப்படுகின்றன. கட்சித் தலைவர்களது கூட்டத்தில் எடுத்த தீர்மானப்படி தனியார் பிரேரணைக்கான நாள் ஒதுக்கப்படும்.

குறிப்பிட்ட அரசாங்கத்திற்குத் தேவையான ஒரு சட்டமூலம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் அவசியம் ஏற்பட்டால், தனியார் பிரேரணை ஒத்திப் போடப்படலாம்.

தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக 88 தனியார் பிரேரணைகள் பாராளுமன்ற நிகழ்ச்சிகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தனியார் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டாலும் அதனை அரசு தீர்மானித்தாலே அமுலுக்கு கொண்டுவர முடியும். குறிப்பாக பிரேரணையின் கருத்துக்களை உள்வாங்கி குறிப்பிட்ட விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பிக்கலாம். அங்கத்தவர்கள் தனியார் பிரேரணைகளைச் சமர்ப்பிப்பது ஒரு விடயம் பற்றி பொதுசன அபிப்பிராயத்தை உருவாக்குவதாகும். அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் தனியார் பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. 8ஆவது பாராளுமன்றத்தில் 8 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட விவாதம் இடம்பெறும் போது விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரோ, பிரதி அமைச்சரோ சபையிலிருந்து விவாதத்தைச் செவிமடுப்பார். தேவையேற்படின் பதிலுமளிப்பார்.

இலங்கைப் பாராளுமன்றத்தில் அண்மைக் காலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பல தனியார் பிரேரணைகள் நாட்டின் அவதானத்தை ஈர்த்துள்ளன. யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவசரகால பொதுச் சுகாதார சட்ட மூலமொன்றைச் சமர்ப்பித்துள்ளார்.

கொவிட் – 19 பெருந்தொற்று முழு உலகையும் ஆட்கொண்டுள்ள நிலையில் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய வேறெந்த வகையான பெருந்தொற்று ஒன்றை எதிர்த்துப் போராடுவதற்கு சட்ட ரீதியாக எடுக்கும் நடவடிக்கை பற்றியே இச்சட்ட மூலம் கூறுகின்றது.

இதேநேரம், மாத்தளை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னக்கோனினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கையில் திருமணத்துக்கான ஆகக் குறைந்த வயதை அறிமுகம் செய்வதற்கான சட்டம் மூலம் நாட்டின் அவதானத்தை ஈர்த்துள்ளது. திருமண வயதெல்லை 18 ஆக இருக்க வேண்டும் என்பதை இச்சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும். அவர் இது தொடர்பாக திருமணப் பதிவு சட்டத்தைத் திருத்தும் பிரேரணை ஒன்றையும் சமர்ப்பித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 1951ஆம் ஆண்டின் முஸ்லிம் திருமணம் மண நீக்க திருத்தச் சட்டத்தை நீக்கக் கோரும் சட்டமூலம் இலங்கையில் நீண்ட காலம் அமுலில் இருந்து வரும் முஸ்லிம் திருமணச் சட்டத்துக்கு விடுக்கப்பட்டுள்ள சவாலாகும். கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்தயினால் வழிமொழியப்பட்டுள்ள இச்சட்ட மூலம் முதலாம் வாசிப்பில் நிறைவேற்றப்பட்டு, பாதுகாப்பு அமைச்சுக்கு அறிக்கையாக அனுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: