அயர்லாந்துடனான வெற்றியுடன் சுபர் 12 சுற்றுக்கு இலங்கை தகுதி

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் இடையிலான T20 உலகக் கிண்ண முதல் சுற்றுக்கான போட்டியில், இலங்கை 70 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் இலங்கை, T20 உலகக் கிண்ணத்தின் அடுத்த சுற்றுக்கு (சுபர் 12) செல்லும் தமது வாய்ப்பினையும் முதல் அணியாக உறுதி செய்திருக்கின்றது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் நடைபெறும் T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றின் குழு A இல் இடம்பெற்றுள்ள  இலங்கை அணி தமது முதல் போட்டியில் நமீபியாவினை வீழ்த்திய நிலையில் தமது இரண்டாவது போட்டியில் நேற்று (20) அயர்லாந்து அணியினை எதிர்கொண்டிந்தது.

அபுதாபி நகரில் ஆரம்பமாகிய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணியின் தலைவர் அன்ட்ரூ பல்பைனி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை அணிக்கு வழங்கியிருந்தார்.

இப்போட்டிக்கான இலங்கை அணியும், அயர்லாந்து அணியும் மாற்றங்கள் ஏதுமின்றி தமது முதல் போட்டிக்கான அதே அணியுடன் களமிறங்கியிருந்தன.

இலங்கை அணி

தசுன் ஷானக (தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் பெரேரா, தினேஷ் சந்திமால், பானுக ராஜபக்ஷ, பெதும் நிஸ்ஸங்க, வனிந்து ஹஸரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மன்த சமீர, மஹீஷ் தீக்ஷன, லஹிரு குமார

அயர்லாந்து அணி

அன்ட்ருவ் பல்பைனி (அணித்தலைவர்), மார்க் அடைர், கேர்டிஸ் கெம்பர், கரேத் டெலானி, ஜோஸ் லிட்டில், கெவின் ஓ பிரெய்ன், நெயில் ரொக், சிமி சிங், போல் ஸ்டெர்லிங், ஹர்ரி டெக்டர், கிரைக் யங்

தொடர்ந்து ஆரம்பமான போட்டியில் அயர்லாந்து ஏற்கனவே நெதர்லாந்தினை தோற்கடித்து T20 உலகக் கிண்ணத் தொடரில் சிறந்த ஆரம்பத்தினை பெற்ற நிலையில் முதலில் துடுப்பாடிய இலங்கை வீரர்களுக்கும் நெருக்கடியினை உருவாக்கியது.

இலங்கை அணியின் ஆரம்பத்  துடுப்பாட்டவீரர்களில் ஒருவராக களம் வந்த குசல் பெரேரா போல் ஸ்டெர்லிங் இலகுவான பிடியெடுப்பு ஒன்றுடன் போட்டியின் முதல் ஓவரில் ஓட்டமேதுமின்றி  ஆட்டமிழக்க அதன் பின்னர், இரண்டாவது ஓவரில் இலங்கை ஜோஸ் லிட்டிலின் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து தடுமாறியது.

அதன்படி இலங்கையின் இரண்டாம் விக்கெட்டாக மோசமான முறையில் போல்ட் செய்யப்பட்ட தினேஷ் சந்திமால் 6 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று வெளியேற, ஜோஸ் லிட்டிலின் விக்கெட் வேட்டைக்கு இரையான அவிஷ்க பெர்னாண்டோவும் ஓட்டமெதுவுமின்றி ஓய்வறை நடந்திருந்தார். இதனால், இலங்கை அணி 8 ஓட்டங்களுக்கு 3 விக்கடெ்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும், இலங்கையின் ஏனைய ஆரம்ப வீரரான பெதும் நிஸ்ஸங்கவுடன் ஐந்தாம் இலக்கத்தில் துடுப்பாடிய வனிந்து ஹஸரங்க அதிரடி கலந்த நிதானத்துடன்  இலங்கை அணியினை கட்டியெழுப்பினார்.

வனிந்து ஹஸரங்க – பெதும் நிஸ்ஸங்க ஜோடி இலங்கை அணியின் நான்காம் விக்கெட்டுக்காக பிரம்மாண்டமான முறையில் 82 பந்துகளுக்கு 123 ஓட்டங்களைப் இணைப்பாட்டமாகப் பகிர்ந்தது. இந்த இணைப்பாட்டத்திற்குள் இரண்டு வீரர்களும் T20 உலகக் கிண்ணத்தில் தாம் பெற்ற கன்னி அரைச்சதங்களினையும் பதிவு செய்தனர். அதோடு, இந்த இணைப்பாட்டம் T20 சர்வதேச போட்டிகளில் இலங்கை அணியின் நான்காம் விக்கெட்டுக்காக பெறப்பட்ட கூடுதல் இணைப்பாட்டமாகவும் பதிவானது.

தொடர்ந்து இலங்கை அணியின் நான்காம் விக்கெட்டாக ஆட்டமிழந்த வனிந்து ஹஸரங்க, T20 உலகக் கிண்ணத்தில் தான் வெளிப்படுத்திய சிறந்த இன்னிங்சுடன் வெறும் 47 பந்துகளுக்கு 10 பௌண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 71 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இதன் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணி பெதும் நிஸ்ஸங்க மற்றும் தசுன் ஷானக்க ஆகியோரின் சிறு அதிரடி ஆகியவற்றின் துணையுடன் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் அணியின் 6ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்த பெதும் நிஸ்ஸங்க 6 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 47 பந்துகளில் 61 ஓட்டங்களினைப் பெற, தசுன் ஷானக்க 11 பந்துகளில் 21 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அயர்லாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ஜோஸ் லிட்டில் 23 பந்துகளுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மார்க் அடைர் 2 விக்கெட்டுக்களை  கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 172 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பாடி அயர்லாந்து, இரண்டாம் இன்னிங்ஸின் முதல் ஓவரில் தமது ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கெவின் ஓ பிரெய்னினை பறிகொடுத்தது. கெவின் ஓ பிரய்ன் சாமிக்க கருணாரட்னவின் பந்துவீச்சில் 5 ஓட்டங்கள் பெற்றவாறு மஹீஷ் தீக்ஷனவின் பிடியெடுப்பில் ஆட்டமிழந்தார்.

இதன் பின்னர் அயர்லாந்தின் முன்வரிசையின் போல் ஸ்டெர்லிங், கரேத் டெலேனி போன்ற வீரர்களின் விக்கெட்டுக்களை அவர்கள் ஓரிலக்க ஓட்டங்களைப் பெற்ற நிலையில் இலங்கையின் சுழல்பந்துவீச்சாளர்கள் கைப்பற்றினர். இதனால் அயர்லாந்து 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

எனினும் இலங்கை அணி களத்தடுப்பில் விட்ட சில தவறுகளினால் அயர்லாந்தின் தலைவர் அன்ட்ரூ பல்பைர்னி மற்றும் கேர்டிஸ் கெம்பர் ஆகியோர் அயர்லாந்தின் நான்காம் விக்கெட்டுக்காக இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்கினர்.

பின்னர் 52 ஓட்டங்கள் வரை நீடித்த இந்த இணைப்பாட்டம் மஹீஷ் தீக்ஷனவின் சுழலில் முடிவுக்கு வந்தது. அயர்லாந்தின் நான்காம் விக்கெட்டாக கேர்டிஸ் கேம்பர் 24 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்திருந்தார்.

கேர்டிஸ் கெம்பரின் விக்கெட்டினை அடுத்து இலங்கையின் சுழல், வேகப் பந்துவீச்சாளர்கள் என அனைவருக்கும் தடுமாற்றம் காட்டத் தொடங்கிய அயர்லாந்து அணி தமது இறுதி ஆறு விக்கெட்டுக்களையும் வெறும் 16 ஓட்டங்களுக்கு பறிகொடுத்து 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 101 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் படுதோல்வி அடைந்தது.

அயர்லாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் அன்ட்ரூ பல்பைனி 39 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 41 ஓட்டங்களை எடுத்து போராட்டம் காட்டியிருந்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் சுழல் பந்துவீச்சாளரான மஹீஷ் தீக்ஷன 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருக்க, சாமிக்க கருணாரட்ன மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து இலங்கையின் வெற்றியினை உறுதி செய்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணிக்காக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த வனிந்து ஹஸரங்க தெரிவாகினார்.

இனி இலங்கை அணி இந்த T20 உலகக் கிண்ண முதல் சுற்றின் தாம் ஆடும் இறுதிப் போட்டியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) நெதர்லாந்தினை எதிர்கொள்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: