கெரவலப்பிட்டி அனல் மின்நிலைய 40% பங்கு விற்பனையை தடுக்குமாறு எதிர் கட்சி மனு

நா.தனுஜா

கெரவலப்பிட்டி ‘யுகதனவி’ மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் தீர்மானத்திற்கு எதிராகப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வியாழக்கிழமை (21.10.2021) உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன ராஜகருணா மற்றும் முஜிபுர் ரகுமான் ஆகியோரினால் கட்சியின் சார்பில் மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கெரவலப்பிட்டி ‘யுகதனவி’ மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்காவிற்குச் சொந்தமான நியூ போர்ட்ரெஸ் நிறுவனத்திற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்பட்டதைத் தொடர்ந்து, அதற்கு நாட்டின் பல்வேறு தரப்பினராலும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன.

அதன் ஓரங்கமாக அவ்வொப்பந்தத்திற்கு எதிராக பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டமை மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகியோர் ஒன்றிணைந்து கடந்த திங்கட்கிழமை உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல்செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அமைச்சரவை அமைச்சர்கள், அமைச்சரவை செயலாளர், நிதியமைச்சின் செயலாளர், சட்டமாதிபர் உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருப்பதுடன் அதில் நியூ போர்ட்ரெஸ் நிறுவனத்தின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேற்படி அடிப்படை உரிமை மீறல் மனுவில் அமெரிக்காவின் நியூ போர்ட்ரெஸ் நிறுவனத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பிலான மீளாய்வு பூர்த்தியடையும் வரையில் அதன் அமுலாக்கத்தை இடைநிறுத்துமாறு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: