புதிய பயங்கரவாத தடைச்சட்டமொன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை – அலிசப்ரி

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்

தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படாமலும் தனி நபர்களின் சுதந்திரத்துக்கு தடங்கல் ஏற்படாதவகையிலும் பயங்கரவாத தடைச்சட்டம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கையை அரசாங்கம் ஆரம்பித்திருக்கின்றது. 

அதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையில் 7 பேர் கொண்ட அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் நீதிமன்ற சுயாதீனத்தன்மைக்கு ஒருபோதும் தலையிடப்போவதில்லை என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21 .10.2021) இடம்பெற்ற இளந்தவறாளர்கள் (பயிற்சிப்பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தண்டனைச்சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாவத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 

சமூகவலைத்தலங்களில் மேற்கொள்ளப்படும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள், சிறுவர், பெண்கள துஷ்பிரயோக நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் சமுகவலைத்தலங்களை கண்காணிக்கும் நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இருக்கின்றோம்.

சமூகவலைத்தலங்களில் பிரசுரிக்கப்படும் தகவல்களால் பாதிக்கப்படுபவர்கள் வழக்கு தொடுப்பதற்கு தேவையான சட்ட திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துவருகின்றோம்.

மேலும் பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவேண்டும் என விசேடமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர்.

அதுதொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்திருக்கின்றது. குறிப்பாக எனது பிரேரணை ஒன்றுக்கமைய பயங்கரவாத தடைச்சட்டத்திக் கீழ் முன்னாள் சட்டமா அதிபர் அசோக்கடி சில்வா தலைமையில் ஆலாேசனை குழுவொன்றை ஜனாதிபதி நியமித்திருக்கின்றார். 

அதன் பிரகாரம் யாராவது தவறாக இந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தால், அதுதொடர்பில் அந்த குழுவுக்கு முறையிட்டால், அந்த குழு அதுதொடர்பில் ஜனாதிபதிக்கு தேவையான பரிந்துரைகளை மேற்கொள்ளும்.

இவ்வாறான 46 கோரிக்கைகள் இதுவரை வந்திருக்கின்றன. இதுதொடர்பில் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கின்றன.

ஜனாதிபதி மிக விரைவில் நடவடிக்கை எடுப்பார் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதேபோன்று பயங்கரவாத தடைச்சட்டத்தை மீள் பரிசீலனை செய்யவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருக்கின்றார். அதற்காக அமைச்சர் ஜீ.எல், பீரிஸ் தலைமையில் 7பேர் கொண்ட அமைச்சரவை குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கின்றது. 

அந்த குழுவுக்கு கிடைக்கும் பரிந்துரைகளை ஆராய்ந்து, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு இல்லாமலும் தனி நபர்களின் சுயாதீனத்துக்கு பாதிப்பு ஏற்படாதவாறும் நடுத்தரமான பயங்கரவாத தடைச்சட்டம் ஒன்றை கொண்டுவருவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.

மேலும் வழக்குகளில் இருந்து விடுக்கப்படுவதும் வழக்குகள் வாபஸ் பெறப்படுவதும் புதிய வியடயமல்ல. கடந்த அரசாங்க காலத்திலும் இடம்பெற்றிருக்கின்றன.

அரசியல் அடிப்படையில் வழக்கு தொடர்ந்திருந்தால்தான் இந்த நிலை ஏற்படுகின்றது. அதற்கு நாங்கள் அழுத்தம் கொடுப்பதில்லை.

அமைச்சர் பசில் ராஜபக்ஷ்வுக்கு எதிரான தொடுக்கப்பட்டிருந்த திவிநெகும வழக்கில் அவர் நிதி மோசடி செய்தார் என எந்த குற்றச்சாட்டும் இல்லை.

ஆனால் அந்த வேலைத்திட்டத்துக்கு எதிராகவே வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அதனை விசாரித்து, சாட்சியங்கள் இல்லாதபடியால் அவர் விடுவிக்கப்பட்டார்.

அதனால் நாங்கள் ஒருபோதும் நீதிமன்ற சுயாதீனத்தில் தலையிடப்போவதில்லை. மாறாக நிதிமன்ற சுயாதீனத்தை பலப்படுத்தவே நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: