ஈஸ்டர் தாக்குதல் ; சட்டமா அதிபருக்கு சுயாதீனமாக செயற்பட அரசாங்கம் இடமளிக்கவேண்டும் – காவிந்த ஜயவர்த்தன

ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அதனால் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கையின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்கு சட்டமா அதிபருக்கு சுயாதீனமாக செயற்பட அரசாங்கம் இடமளிக்கவேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் காவிந்த ஜயவர்த்தன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21.10.2021 ) இடம்பெற்ற இளந்தவறாளர்கள் (பயிற்சிப்பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம் மற்றும் தண்டனைச்சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதலை அடிப்படையாகக்கொண்டு இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்துவது தாக்குதலை மேற்கொண்டவர்கள் நோக்கமாக இருந்தது. என்றாலும் கார்தினால் மெல்கம் ரன்ஜித் அதற்கு இடமளிக்கவில்லை.

சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து பாதிக்கப்பட்டவர்களை பொறுமைக்காக்க வைத்தார். ஆனால் இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.

என்றாலும் தற்பேதைய அரசாங்கம் அன்று எதிர்க்கட்சியாக இருந்து இந்த தாக்குதலை பயன்படுத்திக்கொண்டு இனங்களுக்கிடையில் பொய் பிரசாரம் மேற்கொண்டு பிரச்சினையை தூண்ட நடவடிக்கை எடுத்தது.

குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு எதிராக பிரசாரம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திருந்தார்கள். வைத்தியர் ஷாபி, மலட்டுத்தன்மையுடைய கொத்து ராெட்டி போன்ற விடயங்கள் தற்போது ஒன்றும் இல்லை. சதொச வாகனத்திலேயே குண்டு கொண்டுபோனதற்கு சாட்சி இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார். ஆனால் அந்த சாட்சிகளை இன்னும் பொலிஸுக்கு சமர்ப்பிக்கவில்லை. இவர்களின் பொய் பிரசாரத்தில் நாங்கள் ஒரு சந்தர்ப்பத்தில் எமது முஸ்லிம் நண்பர்களுடன் எமது அதிருப்தியை வெளியிட்டிருக்கின்றோம்.

அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் அனைத்து விடயங்களையும் செயற்படுத்தினால் அதிருப்திக்கு ஆளாக நேரிடு்ம் என ஜனாதிபதி, கார்தினாரிடம் தெரிவித்திருக்கின்றார்.

விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் பிரகாரம் நிலந்த ஜயவர்த்தன, மைத்திரிபால சிறிசேன ஆகியாேரை விசாரித்து சட்டத்தை நிலை நாட்டவேண்டும்.

ஜனாதிபதி விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் விடயங்களை சுதந்திரமாக செயற்படுத்துவதற்கு சட்டமா அதிபருக்கு முடியும். அதனால் ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை விரைவாக பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். அதற்காக ஜனாதிபதி விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை செயற்படுத்துவதற்கு சட்டமா அதிபருக்கு அரசாங்கம் இடமளிக்கவேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: