இலங்கையை அச்சுறுத்தியே இரசாயன உரத்தை சீனா அனுப்பியுள்ளது – ரஞ்சித் மத்தும பண்டார

ஆர்.யசி

எந்தவித ஆய்வுகளும் முன்னெடுக்கப்படாது வெவ்வேறு நாடுகளின் இரசாயன உரங்களை இலங்கையில் பயன்படுத்தி இலங்கையை ஒரு ஆய்வுகூடமாக பயன்படுத்தவே நினைக்கின்றனர் என எதிர்கட்சி உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார சபையில் தெரிவித்தார்.

நாட்டின் மண்ணுக்கு மட்டுமல்ல மக்களின் உடலுக்கும் ஏற்பில்லாத உரத்தை சீனா அனுப்பியுள்ள நிலையில், அதனையே மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், சீனா இலங்கையை அச்சுறுத்தி இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் அவர் சபையில் குற்றஞ்சாட்டினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21.10.2021 ), எதிர்கட்சி உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார நாட்டின் உர பிரச்சினைகள் குறித்த சபை ஒத்திவைப்பு பிரேரணையை கொண்டுவந்து உரையாற்றும் போதே  இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

வெளிநாடுகளில் இருந்து உரம் இறக்குமதி செய்யும் வேளையில் அதன் தரம் குறித்து கூடிய ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும்.

எமது மண்ணுக்கு உகந்ததா என்பதை ஆராய வேண்டும். குப்பைகூளங்களை இறக்குமதி செய்து நாட்டின் வளங்களை நாசமாக்கக்கூடாது. இன்றைய நிலையில் நாட்டில் விவசாயிகள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். 

நாட்டில் விவசாய பிரச்சினைகளை தீர்க்காது வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதி செய்துள்ளனர். உரம் பிரச்சினைக்கு சீனாவிடம் இருந்து உரம் இறக்குமதி செய்ய தீர்மானித்தனர்,

ஆனால் சீனாவின் உரம் தரம் குறைந்தது எனவும், மனித உடலுக்கு பாதகமான தன்மைகள் உள்ளதாக சர்வதேச ஆய்வுகள் கூட தெரிவித்தனர்.

இதனை அடுத்து உரக் கப்பலை திருப்பி அனுப்பினர். ஆனால் சீனா இதே உரத்தை மீண்டும் அனுப்புவதாக தெரிய வந்துள்ளது. சீனா எச்சரித்து எமக்கு இந்த உரத்தை அனுப்புகின்றது.

அதேபோல் லித்துவேனியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உரம் இங்கு பரிசோதிக்கப்பட்டதா? இல்லவே இல்ல. எந்தவித பரிசோதனைகளும் முன்னெடுக்கப்படாது இவ்வாறு உரம் பாவனைக்கு வழங்கப்படுகின்றது.

சீனாவில் இருந்து உரம் இறக்குமதி செய்ய முடியாது போனதை அடுத்து இந்தியாவில் இருந்து நனோ நைற்றிஜன் இறக்குமதி செய்துள்ளனர். இதுவும் இரசாயன உரம் என்றே ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது பிரதான உரம் அல்ல, உப உரமாகவே இதனை பயன்படுத்த முடியும். ஆகவே மக்களை, விவசாயிகளை ஏமாற்றும் வேலையையே அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இந்தியாவில் கூட இந்த உரம் பரிசோதிக்கப்படவில்லை,11ஆயிரம் விவசாயிகளிடமே இது பரிசோதிக்கப்பட்டு பரிசோதனை மட்டத்தில் உள்ள ஒன்றாகும், ஆகவே இலங்கையை பரிசோதனை கூடமாக பயன்படுத்தி உரங்களை பரிசோதனை செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த உரங்களை ஆய்வுகள் இன்றி பயன்படுத்துவதனால் எமது வளங்களுக்கு ஏற்படும் அழிவுகள் கண்டறியப்படாது. அதுமட்டுமல்ல இந்தியாவின் விலைக்கு இங்கு கணக்கிட்டு பார்த்தால் 1292 ரூபாவே செலவாகும். ஆனால் இரண்டாயிரத்து ஐநூறுக்கு அதிகமான விலையில் இதனை விற்கவுள்ளனர். விவசாயிகளின் வயிற்றில் இவ்வாறு அடித்து ஊழல் செய்ய வேண்டாம். 

விவசாய நிலங்களை நாசமாக்கிய அரசாங்கமாக இந்த அரசாங்கம் வரலாற்றில் பதியும். நாட்டில் தேயிலை தோட்டங்கள் நாசமாகிவிட்டது, அடுத்ததாக விவசாய நிலங்களை நாசமாக்க ஆரம்பித்துள்ளனர். செய்ய முடியாத வேலைகளை செய்ய முயற்சித்து விவசாயிகளை கஷ்டத்தில் தள்ள வேண்டாம். வியாபாரிகளின் கதைகளை கேட்டு நாட்டை நாசமாக்க வேண்டாம். அரசாங்கம் வியாபாரிகளின் பின்னால் இருந்துகொண்டு விவசாயிகளை அழிக்கும் வேலையை முன்னெடுத்து வருகின்றது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: