இந்தியாவிலிருந்து உரம் இறக்குமதி செய்து விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க முடியாது – அனுரகுமார

ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்

இரசாயன உரம் விவசாய பூமிக்கு பயன்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும், இது குறித்து நாம் முரண்படவில்லை. ஆனால் இதனை முறையாக முன்னெடுத்திருக்க வேண்டும்.

இப்போது இந்தியாவில் இருந்து உரம் இறக்குமதி செய்வதால் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது, என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21), நாட்டின் உர பிரச்சினை குறித்தும் விவசாயிகளின் நெருக்கடி நிலைமை குறித்தும் எதிர்கட்சி உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் விவசாய பிரச்சினை குறித்து குளிரூட்டப்பட்ட இந்த சபையில் மின் விளக்குகள் மத்தியில் பேசிக்கொண்டுள்ளோம்.

ஆனால் எமது விவசாயிகள் தமது விளைச்சல் குறித்த சந்தேகத்தில், தமது வாழ்க்கை குறித்த நெருக்கடியில், வீடு சொத்துக்கள் என சகலதையும் அடகு வைத்து வாழ்க்கையையே அடக்கு வைத்துள்ள நிலைமையே காணப்படுகின்றது.

அவர்களின் சகல வாழ்க்கையையும் விவசாயத்தை நம்பியே முன்னெடுத்துள்ளனர். இந்த பிரச்சினையை பொய்களை கூறி சமாளிக்க முடியாது.

கீழ்மட்ட மக்களின் பொருளாதார மூலத்தை நாசமாக்கும் வேலையே இவையாகும்.  சேதன பசளைக்கு நகர்வது என்பது நீண்டகால திட்டமாகும், பூட்டான் போன்ற நாடுகள் இதற்கு நல்ல உதாரணமாகும்.

ஆகவே தீர்மானங்கள் எடுக்கும் வேளையில் வாய் வார்த்தைகள் மூலம் மட்டுமே எடுக்கப்பட்டதே தவிர புத்திசாலித்தனமாக எந்த தீர்மானமும் எடுக்கவில்லை. அமைச்சரும் அரசாங்கமும் ஆரம்பத்தில் இருந்தே வியாபாரிகள் பக்கமே நின்றனர்.

சீனா உர விடயத்தில் அமைச்சரின் செயற்பாடு இதற்கு நல்ல உதாரணமாகும். இப்போது இந்தியாவில் இருந்து நனோ நைற்றிஜன் உரம் இறக்கப்படுகின்றது.

ஆனால் இது நனோ யூரியா உரமாகும். ஆய்வுகளில் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உரம் யூரியா பயன்படுத்த பின்னர் ஒரு மாதத்தின் பின்னர் பயன்படுத்தவே இந்தியாவின் ஆய்வுகளில் ஆலோசனைகளில் கூறப்பட்டுள்ளது. 

இதனை இங்கு பயன்படுத்துவது ஆரோக்கியமானதல்ல.  முதலில் இதை இலங்கையில் ஆய்வுக்கு உற்படுத்தியிருக்க வேண்டும். இரசாயன உரம் நிறுத்தப்பட வேண்டும், அதில் நாம் முரண்படவில்லை. ஆனால் இதனை முறையாக முன்னெடுத்திருக்க வேண்டும். இப்போதுள்ள உரத்தினால் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: