சம்பந்தன், ஹக்கீம், மனோ சந்திப்பு; செல்வாக்கு இழந்து தவிக்கும் இனவாதிகளை உசுப்பி விடுமா? – சிங்கள மக்களுக்கும் புரியவைக்கும் நகர்வுகளே ஆரோக்கியம்

க.குணராசா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனை, தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரான மனோ கணேசனும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் அவரது இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

கடந்த 6ஆம் திகதி மாலை சம்பந்தன் ஐயாவின் கொழும்பு இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, கடந்த 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழ், முஸ்லிம் கட்சிகளின் உரையாடல் தொடர்பாக, ஹக்கீமும், மனோவும் கூட்டமைப்பு தலைவருக்கு எடுத்துக் கூறினர்.

இதில், வடக்கு – கிழக்கில் முன்னணி கட்சியாக திகழ்கின்ற தமிழரசுக் கட்சியும், சிரேஷ்ட தலைவரான சம்பந்தனும் கலந்து கொள்வதை தாம் விரும்புவதாக மனோ கணேசனும், ஹக்கீமும் எடுத்துக் கூறினர்.
தமிழ்பேசும் தரப்புகள் ஐக்கியப்பட்டு செயல்படும் முயற்சி குறித்து பேசுவதற்கு இந்த சந்திப்பில் இணக்கம் காணப்பட்டதாகத் தெரியவருகிறது.
தமிழ், முஸ்லிம் கட்சிகளின் மத்தியில் பொதுவான ஒரு தளம்

ஏற்படுவதன் அவசியத்தை ஏற்றுக்கொண்ட இரா. சம்பந்தன், 13 ஆவது திருத்தச் சட்டம் பற்றி விரிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்.
’13ஆவது திருத்தம்தான், இந்த நாட்டு அரசியலமைப்பில் இடம்பெற்ற ஒரேயொரு அதிகாரப் பரவலாக்கல் சட்டம். ஆனால், 13வது திருத்தம் ஒரு முடிவல்ல, ஆரம்பம். அது தீர்வல்ல, அது ஓர் அஸ்திவாரம். அதிலிருந்து கட்டடம் கட்டப்பட வேண்டும்” என்று சுட்டிக்காட்டினார்.

‘ஈழத்தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் எல்லோரும் சிங்களவர்களுடன் சேர்ந்து, இலங்கையர் என உணரும் அடிப்படையில் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் முறையில்,தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும். தீர்வை நோக்கிய பயணத்தில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை வேண்டும். அந்த ஒற்றுமை முயற்சியை, இலங்கை தமிழரசுக்கட்சி, ஒருபோதும் குழப்பாது. நாங்களும் கலந்து பேசத்தான் வேண்டும். கலந்து பங்களித்து ஒற்றுமையை மேலும் பலப்படுத்த வேண்டும்” என்று சம்பந்தன் தெரிவித்ததாகத் தெரிகிறது.
13ஆவது திருத்தத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்துமாறு இலங்கையை வற்புறுத்தும்படி, தமிழர் தரப்புக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, இந்தியாவை கோருவதற்கான ஓர் ஏற்பாடு செய்வதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. அதற்காக யாழ்ப்பாணத்தில் ரெலோ கட்சியின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கூட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி பங்குபற்றவில்லை.

இந்த சந்திப்பு குறித்து மனோ கணேசன் எம்.பியும், ஹக்கீம் எம்.பியும் திருப்தி தெரிவித்தனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், ‘ மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துதல், 13ஆவது திருத்தச்சட்ட அமுலாக்கல் உள்ளிட்ட விடயங்கள் மற்றும் சிறுபான்மை தமிழ் பேசும் சமூகங்கள்

முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக ஒன்றிணைந்து செயற்படுதல், ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தமிழ்க்கட்சிகளுடன் ஒன்றிணைந்த பயணம் தொடரும்” என அவர் தெரிவித்தார்.

என்றாலும், இந்த சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் கலந்துகொண்டமை தொடர்பாகவும் அவரது கருத்துகள் தொடர்பாகவும் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

தமிழ்த் தரப்புடன் ஒன்றிணைந்து பயணிக்க விரும்பும் மு.கா. தலைவர் ஹக்கீம், வடக்கு-கிழக்கு இணைந்த தீர்வை பகிரங்கமாக ஏற்றுக் கொள்வாரா என்று தமிழர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதேநேரம், தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை முழுமையாக ஏற்பதற்கு உள்ளார்ந்தமாக தயாரெனில், கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த எந்த ஆட்சேபனையும் இல்லையென்பதை ஹக்கீம் பகிரங்கமாகக் கூறுவாராயின் அவருடைய கருத்தை ஏற்க முடியும் என்கிறார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன்.

1949 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தந்தை செல்வா, இலங்கை தமிழரசுக் கட்சியை உருவாக்கி தமிழ் பேசும் மக்கள் என்ற சொல்லாடல் மூலமாக தமிழ் – முஸ்லிம் மக்களை இணைத்து அகிம்சை ரீதியான அரசியல் போராட்டங்களை முன்னெடுத்தார். தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்கள் உருவாகிய காலத்திலும், பல இயக்கங்களில் முஸ்லிம் இளைஞர்கள் இணைந்து செயற்பட்ட வரலாறுகளும் இருப்பதாக அரியநேந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.
தமிழ் தேசியத்தை ஏற்றுள்ள, தமிழ்மொழிக்கு அரசியலில் சம அந்தஸ்து கோருகின்ற தமிழ்க் கட்சிகளுடன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடத்திய சந்திப்புகள், தற்கால அரசியல் சூழ்நிலைக்கும், காலத்துக்கும் ஏற்ற நகர்வாகவே பார்க்கப்படுகின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டங்களின்
போது, பிந்திய காலங்களில் (1985) விடப்பட்ட தவறுகளால், மூன்றாம் தேசியம் (முஸ்லிம்) உருவாகியுள்ளதாக நிலவிவரும் கருத்துகளால்தான் இந்த விவாதங்கள் எழுந்துள்ளன.

தமிழர்களின் உரிமைப் போராட்டங்கள், துரதிர்ஷ்டவசமாக துருவப்படத் தொடங்கிய 1990 க்குப் பின்னரான காலந்தொட்டு, இன்றுவரை, இந்தச் சமூகங்கள் மீள இணைக்கப்படவில்லை. இணைப்பதற்கான சந்தர்ப்பங்களை தமிழ்,முஸ்லிம் அரசியல் தலைமைகள் உருவாக்கவும் இல்லை. பெரும்பான்மை அரசியல் சக்திகளும் இந்த இணைவுகள் மீள ஏற்படாதவாறு இடர்களை ஏற்படுத்தியே வந்திருக்கின்றன.

இப்படியான துருவ மயப்படுத்தப்பட்ட நிலை தொடர்கின்ற போது, இந்தச் சந்திப்புகள் தேவைதானா என்ற விவாதங்கள் எழுகின்றன.
ஆயுதப்போராட்டம் மௌனித்த பின்னராவது, சிறுபான்மைச் சமூகங்களின் தலைமைகள் அல்லது மிதவாதத் தலைமைகள் இந்தச் சமூகங்களின் மீளிணைவு பற்றிப் பேசியதாகவோ, அவ்வாறான முயற்சிகள் மேற்கொண்டதாகவோ பெரிய அளவில் கூற முடியாதுள்ளது. அவ்வாறு பேசப்பட்டாலும், தேர்தல் காலத்துக்கான தேனிலவுப் பேச்சுகளாகத்தான் அவை இருந்ததுண்டு.

இருந்தாலும், தமிழ், முஸ்லிம் சமூகங்களின் ஏக தலைமைகள் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ள, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் என்பவற்றுக்கு இந்த மீளிணைவுகளில் விருப்பங்கள் இருந்தாலும், சமூகங்களின் அடிமட்டங்களிலிருந்து எழும் எதிர்ப்புகளால் அவை கைவிடப்படுவதுண்டு.
பேரினவாதிகளின் இரும்புப்பிடியை இடித்துடைத்து ஒருமொழிச் சமூகங்கள் என்ற பொது அடையாளத்துக்குள் தமிழர்களும், முஸ்லிம்களும் வரவேண்டிய காலங்கள் பல தடவைகள் கைவிடப்பட்டதும் இதனால்தான்.

தென்னிலங்கையில், 2019 இல் விழித்துக் கொண்ட பேரினவாதத்துக்கு இன்றுவரையும் இனித்துக் கொண்டிருப்பதும், சிறுபான்மைச் சமூகங்களின் இந்த இடைவெளிகள்தான். இச்சமூகங்களை பேரினவாதம் இன்று கைவிட்டுள்ளமையும் இச்சமூகங்களின் இணக்கமின்மைகளால் ஏற்பட்டு வரும் துருவ அரசியல்தான்.
இந்த ஆதங்கங்கள்தான், இரு புறத்திலிருந்தும் இந்தச் சந்திப்புகளில் சந்தேகங்களை ஏற்படுத்தி வருகின்றன.

ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களுடன் மாறி, மாறி அமர்ந்து கொள்ளும் முஸ்லிம் தலைமைகளுக்கு அதிகாரப் பகிர்வு, சமஅந்தஸ்து, சமஷ்டித்தீர்வு என்பவைகளை விடவும் அமைச்சுப்பதவியே குறிக்கோளாகத் தென்படத் தொடங்கியதாகக் குற்றம் சாட்டுகிறது தமிழ்த் தரப்பு.
இப்போது, ஆட்சியாளர்களால் முற்றாகக் கைவிடப்பட்ட நிலையில், ஒத்தடத்துக்காக அல்லது ஒதுங்கிய வீட்டில் ஓரத்தில் குந்திக்கொள்ள முஸ்லிம் தரப்புகள் நெருங்குகின்றனவா? என்ற சந்தேகத்தையும் தமிழர் தரப்பில் இந்தச் சந்திப்புகள் ஏற்படுத்தி வருகின்றன. நிலையான கூட்டுக்கு, முஸ்லிம் தலைமைகள் வந்தால், ஏற்கத்தயாராகவுள்ள தமிழர்களுக்கு இவ்வாறான சந்தேகங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இதில், சிலதை ஏற்றுக்கொள்ளும் மனநிலை முஸ்லிம்களுக்கு இருக்கிறதோ? இல்லையோ? இதுதான் உண்மைநிலை.

2013, 2012 ஆம் ஆண்டுகளில் ஜெனீவா அமர்வுகளின்போது, இனப்படுகொலை விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவாக முஸ்லிம் தரப்பு செயற்பட்டது என்பது கசப்பான உண்மை. தமிழ்தேசிய புலத்தில், வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்பும் தாயகக் கோட்பாடும், இன்னும் கைவிடப்படாதவை.
ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட கூடாது என்பது அனைத்து முஸ்லிம் கட்சிகளின் கொள்கையாகவே தொடர்கின்றன. இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தமிழர் தரப்பை அணுகும் அரசியல் முன்னகர்வு, சாதகமாக அமையுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேர்ந்த, அரசின் ஒடுக்குமுறைகள், நெருக்குவாரங்கள் மற்றும் ஆட்சியாளர்களால் கைவிடப்பட்ட சூழலும்தான், முஸ்லிம்களை ஒதுங்குமிடம் தேட வைத்திருப்பதாக சொல்லலாம்.

இந்நிலையில், முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகளும் நியாயமான கோரிக்கைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம். அவைகளை புறம் தள்ளி தமிழர் தரப்புடன் எந்த ஒரு உடன்பாட்டுக்கு செல்வதும் சாத்தியப்படாத ஒன்றாகவே இருக்கும். இந்த இடத்தில் பல்வேறு பழைய சம்பவங்களைக் கூறி, இரு சமூகங்களையும் மீண்டும் சர்ச்சைக்குள் சிக்க வைப்பது ஆரோக்கியமாக இருக்காது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அரசியல் கால ஓட்டத்திற்கு ஏற்ப, புதிய பாதைகளை உருவாக்கி,முன்னேறுவது தான் இரு சமூகங்களுக்கும் நல்லது.

30 வருட கால யுத்தத்தில், அனைத்தையும் இழந்து கோவணத்தோடு நிற்பவர்கள் தமிழர்கள். ஆயுதப் போராட்டம் முழுமையாக மௌனித்த நிலையில், தமிழர் தரப்பு, அரசியல் போராட்டங்களை கூர்மையுடன் முன்னெடுத்து வருகின்றது.

கடந்த காலத் தவறுகள், கசப்புணர்வுகள் எல்லாவற்றையும் மறந்துதான், இரு தரப்புகளும் புதிய அணுகுமுறைகளை முன்னெடுக்க வேண்டிய காலமாக இது கனிந்திருக்கின்றது என்பதை சகலரும் புரிந்து கொள்ள வேண்டும். சில சில இடங்களிலும், எல்லைப் புறங்களிலும் சிறு சிறு சர்ச்சைகள் ஏற்படுவது சகஜம். இவைகளெல்லாம் ஒரு மொழிச் சமூகத்துக்குள் தீர்க்கக்கூடிய பிரச்சினைகள். தேசிய பிரச்சினைகளுடன் ஒப்பிட்டால், இவையெல்லாம் தானாகவே தீர்ந்துவிடும். திறந்த மனதுடன் இருதரப்புகளும் பேசினால், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வாய்ப்புகள் அதிகம்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர் மனோ கணேசன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோரின் சந்திப்புகளும், அரசியல் நகர்வுகளும் ஆரோக்கியமான முன்னெடுப்புக்கள்தான்.

ஆனால், சிங்கள சமூகம் இதனை சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் அளவுக்கு இருதரப்பு நகர்வுகளும் அமைந்துவிடக்கூடாது.
இரு சமூகங்களும் ஒன்றுபடுவதை விரும்பாத இனவாத சக்திகள்,சிங்கள மக்களை உசுப்பிவிட்டு, தவறாக வழி நடத்துவதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய அரசியல் சூழ்நிலையும் அப்படித்தான் இருக்கிறது.

‘இல்லாதவன் தலையில்தான் பொழுது விடியும்” என்பார்கள். தமிழ், முஸ்லிம் மக்களின் கடந்தகால வரலாறும் அப்படித்தான். தோல்வியடையும் ஆட்சியாளர்கள் சிறுபான்மையினர் மீது பழி சுமத்துவதும், வன்முறைகளைத் தூண்டுவதும்தான் கடந்த காலங்களில் நடந்திருக்கின்றன.
இழந்திருக்கும், செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள இனவாதிகள், சிறுபான்மையினர் மீது, புலிப்பூச்சாண்டி காட்டி, அப்பாவி சிங்கள மக்களை திசைதிருப்புவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகவே இருக்கின்றன.

ஆகவே, அரசியல் களநிலவரத்தை, இனவாதிகள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளாத வகையில், தமிழ் – முஸ்லிம் தரப்பினரின் பேச்சுவார்த்தை முன்னகர்வுகள் அமைந்தால், அதுவே, ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்துக்கு வழிவகுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: