சீனாவின் கடல் பட்டுப்பாதைத் திட்டம் எதிர் வியூகங்கள் போதுமானவையா?

தற்போது கொழும்பு விகாரமகாதேவி பூங்காவுக்கு எதிரே, நூலகத்தை அண்மித்ததாக வெற்றிக் கோபுரம் ஒன்று நிற்பதைப் பார்த்திருப்பீர்கள். இது இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் காலிமுகத் திடலில், இப்போது பண்டாரநாயக்கவின் சிலை அமைந்திருக்கும் இடத்துக்கு அருகில்தான் அமைக்கப்பட்டிருந்தது. உலகப் போரின்போது சிங்கப்பூரையும், பர்மாவையும் கைப்பற்றிய ஜப்பான், பரந்த பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தின் மணி முடியாகக் கருதப்பட்ட பிரிட்டிஷ் இந்தியாவையும் கைப்பற்றும் எண்ணம் இருந்தது. இந்தியாவைக் கைப்பற்றினால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முதுகெலும்பை ஒடித்தமாதிரி.

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய இராணுவத்தின் உதவியோடு பர்மாவில் இருந்து இந்தியாவுக்குள் வட இந்திய மார்க்கமாக நுழைந்து புதுடில்லி வரை படை நடத்தலாம் எனவும் இலங்கைத் தீவைக் கைப்பற்றுவதன் ஊடாக தென்னிந்திய தமிழ்நாடு வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவலாம் என்றும் ஜப்பானிய யுத்த வகுப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர். இதன் அடிப்படையில்தான் ஜப்பானிய விமானங்கள் கொழும்பு, கொக்கல, திருகோணமலையில் குண்டு வீச்சு நடத்தின. எனினும் போர் நிலவரம் திசைமாறியதால் இத்திட்டம் கைவிடப்பட்டது.

எனினும் கொழும்பு மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக இலங்கை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருந்ததால் ஜப்பானிய குண்டுவீச்சு விமானங்களுக்கு கொழும்பு நகரைக் காட்டிக் கொடுக்கும் என அவர்கள் நம்பிய இந்த வெற்றிக் கோபுரத்தை துண்டு துண்டாக் கழற்றி விகாரமகாதேவி பூங்கா ஓரமாக நிலைநிறுத்தினர். விகாரமகாதேவி பூங்கா அமைந்திருக்கும் பகுதி அன்று காடுபோல நிறைய மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் இக் கோபுரம் ஜப்பானிய விமானங்களின் கண்களுக்கு படாது என பிரிட்டிஷ் இராணுவம் நினைத்திருக்கலாம்.

அன்றைய இலங்கை பிரிட்டிஷ் அரசு பயந்தது இந்தியாவின் தென் பகுதியை ஆக்கிரமிக்க இலங்கையை ஜப்பான் ஒரு ஸ்பிரிங் போர்டாக பாவிக்குமோ என்பதாக இருந்தது.

இதெல்லாம் நடந்து இப்போது எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. ஆனால் வெளிநாடுகள் இலங்கையை ஸ்பிரிங் போர்டாக உபயோகிக்குமா, எங்களின் இறைமைக்கு இலங்கையைப் பயன்படுத்தி ஊறு விளைவிக்குமா என்ற கேள்வி இன்னமும் இந்தியாவை விட்டு அகன்றதாகத் தெரியவில்லை. காரணம் செஞ்சீனா.

ஆசியாவில் சீனா ஒரு பெருஞ்சக்தியாக உருவாக தொடர்ச்சியாக அமெரிக்கா உதவி வந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். வியட்நாம் போரின்போது வட வியட்நாமின் வியட்கொங் படைகளுக்கு சீனா உதவி வந்தது. அமெரிக்க படைகளுக்கு எதிராகப் போராட பயிற்சி வழங்கி ஆயுத உதவியும் செய்தது. 9/11 தாக்குதலின் பின்னர் அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இறங்கியது அமெரிக்கா. ஆப்கானிஸ்தானை அடித்து நொருக்கிய அமெரிக்கா அத்துடன் நில்லாது அரபு வசந்தத்துக்கு பின்னாலும் நின்றது. சதாமின் ஈராக்கை துவம்சம் பண்ணியது. சிரியாவின் சீரழிவுக்கு பின்னால் நின்றது.

இக் காலப்பகுதியை ஆசியாவிலும் ஆபிரிக்காவிலும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவும் இந்து சமுத்திர பிராந்தியத்தில் பெரு பொருளாதார மற்றும் இராணுவ வல்லரசாக மாறவும் சீனா பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்காவுக்கு சீனாவில் ஆதிக்க விஸ்தரிப்பை புரிந்துகொள்ளவும் எதிர் நடவடிக்கைகளை வகுக்கவும் கால அவகாசம் கிட்டாமல் போயிருக்கலாம். சீனாவின் சாதகத்தன்மை அதன் மாறாத கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி, தலைவர்கள் மாறினாலும் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகள், எதிர்காலத் திட்டங்களில் பெரிதும் மாற்றங்கள் ஏற்படுவதில்லை. அமெரிக்கா ஒரு ஜனநாயக நாடு. நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை அங்கே ஆட்சி மாறலாம், கொள்ளை கோட்பாடுகளுடன், உதாரணத்துக்கு ஒபாமாவை ட்ரட்ம் பின்பற்றவில்லை. ஜோ பைடனின் கொள்கைகள் ட்ரம்பை அனுசரித்ததாக இருக்காது.

இடைப்பட்ட ஒரு காலத்தில் பாகிஸ்தானில் இருந்து ஆபிரிக்கா வரை சீனா ஒரு கடல் பட்டுப் பாதையை (One belt and road initiative) அமைப்பதற்கான ஒரு விரிவான திட்டத்தை வகுக்கும் என்று அமெரிக்கா எதிர்பாராத ஒன்று என்றும் இந்தியாவும் இதன் சாத்தியப்பாடுகளில் அதிக நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்றும் ஆசிய அரசியல்வாதிகள் கருதுகிறார்கள்.

2009 இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்ததை இந்தியா எவ்வாறெல்லாம் தனக்கு சார்பாக பயன்படுத்த நினைத்திருந்ததோ, அதைவிட அதிகமாகவே சீனா இலங்கையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. தமிழர் பிரச்சினையுடன் நெருங்கிய தொடர்புகொண்டநாடு இலங்கை. இலங்கையில் தமிழ்த் தீவிரவாதம் உக்கிரம் பெறுவதற்கு உதவிய அதே இந்தியாதான் விடுதலைப் புலிகளை அழிக்கவும் உதவியது. ஆனால் அந்த உதவிக்கான அரசியல் ரீதியான பலன்களை இந்தியா முழுமையாகப் பெற்றுக்கொண்டதா என்றால் இல்லை என்பதாகவே தெரிகிறது. இங்கே இந்தியாவுக்கு ஒரு சிக்கல் உள்ளது. அது பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையையும் காட்டும் விலாங்கு மாதிரியான நிலை. இலங்கை அரசாங்கத்தோடு அனுசரித்துப் போக வேண்டும்; தமிழர்களின் அபிலாஷைகளை கைவிட்டு விடவும் முடியாது. ஆங்கிலத்தில் Love and hate என்று சொல்வார்கள். அன்பு செலுத்தவும் வேண்டும். வெறுப்பைக் காட்டவும் வேண்டும் என்பது போன்ற உறவைப் பேணியாக வேண்டியிருக்கிறது.

ஆனால் சீனாவுக்கு இத்தகைய குழப்பமே கிடையாது இலங்கையுடனான உறவில் அது முழுமையான வர்த்தக ஆதிக்கம் தொடர்பானது. அதன் வழியே தன் கடலாதிக்கத்தை இப்பிராந்தியத்தில் நிறுவுவது அதன் நீண்டகால நோக்கம். ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை மூலோபாய திட்டங்கள் என்ற வகையில் பார்த்தால் இந்தியா அவற்றை கையேற்றிருக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யவில்லை. சீனா செம்மையாகப் பயன்படுத்திக் கொண்டது. தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா குத்தகைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

சீனா, பாகிஸ்தானிலும் பல பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் பல கடல் பட்டுப் பாதையுடன் தொடர்புகொண்டுள்ள திட்டங்களை வகுத்து செயல்படுத்தத் தொடங்கியிருக்கிறது. மத்திய கிழக்கில் இருந்து வரும் எண்ணெய்க் குழாய்கள் பாகிஸ்தானின் பலூச்சிஸ்தான் வழியாய சீனாவுக்கு செல்லவுள்ளன. பாகிஸ்தானின் சீன ஆதிக்கம் அதிகரித்து வருவதை அமெரிக்காவும், இந்தியாவும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. கொழும்பு துறைமுக நகரம் சீனாவுக்கு ஒரு பெரிய பொருளாதாரத் தளமாகவே எதிர்காலத்தில் அமையவுள்ளது.

பொருளாதாரத்தில் அமெரிக்காவுக்கு சாவல்விடக்கூடிய நிலையில் சீனா இன்றுள்ளது. பொருளாதார பலம் அரசியல் பலத்துடன் சேர்ந்து வந்தால்தான் அமெரிக்காவுடன் சரிசமனாக பொருத முடியும் என்பது ஒரு அரசியல் வியூகம். சீனா அதைக் கையில் எடுத்திருக்கிறது. இப் பின்னணியில் தான் குவாட் அமைப்பை அமெரிக்கா தொடங்கியது. இதில் இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கத்துவம் வகிக்கின்றன. இதன் முதல் தலைவர்களின் நேருக்கு நேர் சந்திப்பு கடந்த மாதம் அமெரிக்காவில் நடைபெற்றது. சீனாவின் பிராந்திய பொருளாதார மற்றும் இராணுவ எழுச்சியானது பிராந்திய நாடுகள் என்ற வகையில் ஜப்பானையும் அவுஸ்திரேலியா மற்றும் இந்தியாவையும் பாதிக்கப் போகிறது என்ற வகையில் அந்நாடுகளின் கவலை புரிந்துகொள்ளக்கூடியதே. இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா கொண்டிருக்கும் ஆதிக்கத்தை படிப்படியாகக் குறைப்பதும் பின்னர் பிராந்தியத்தில் இருந்து அகற்றுவதுமே சீனாவின் கொள்கை மற்றும் இலக்கு.

இதனால்தான் குவாட் அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் மேலதிகமாக அமெரிக்கா மற்றொரு இராணுவ ஒத்துழைப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது. அதில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. கவனமாகவே இக்கூட்டமைப்பில் இந்தியா தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்தியாவை இணைத்துக்கொண்டால் இக்கூட்டமைப்பில் அந்நாடு இராணுவ ரீதியாக பங்களிப்பு செய்யவேண்டியிருக்கும். இது சீனாவுக்கு எதிரான அமைப்பு என்பது வெளிப்படையானது. பிராந்திய நாடான இந்தியா அதில் கலந்துகொள்வது சீனாவை நேரடியாக இந்தியா சீண்டுவதாக அமையும் என்பதால்தான் இந்தியா தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

எனினும் கடல் பட்டுப்பாதைத் திட்டத்தில் சீனா போதுமான அளவுக்கு முன்னேறி உள்ளது. இனி பின்வாங்குவது சாத்தியம் இல்லை. பல கோடி டொலர்களை இத்திட்டத்துக்காக சீனா செலவுசெய்துள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் மேற்கொண்டுவரும் எதிர் வியூகங்கள் போதுமானவையாகவும், சீனாவின் பிராந்தியத்தில் பலம்பெறும் முயற்சிகளைத் தடுத்து நிறுவத்துமளவுக்கும் இல்லை என்றே கருத வேண்டியிருக்கிறது.

ஸ்பானிய, போர்த்துகேய, டச்சு மற்றும் ஆங்கிலேயர் தமது பொருளாதார நலன்களுக்காகவே இந்து சமுத்திரத்தில் கடலாதிக்கம் செய்ய முனைந்தனர். பூகோள அரசியலில் இன்றைக்கும் கடலாதிக்கம் முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க கடலாதிக்கத்தை ஒட்ட நறுக்க வேண்டும் என்பதே சீனாவின் இலக்கு. இதற்கு எதிரான அமெரிக்காவின் தலைமையிலான நாடுகளின் செயற்பாடுகள் அல்லது செயற்திட்டங்கள் பற்றி தெளிவான தகவல்கள் இல்லை. தினகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: