பட்ஜட்; ஆதாய வழிகளை அடைய வழிகோலுமா?

சுஐப் எம். காசிம்

வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின் இரண்டாம் கட்ட வாசிப்புக்கு திங்கள் வாக்கெடுப்பு இடம்பெறுகிறது. ஐக்கிய மக்கள் சக்தி இதை நிச்சயம் எதிர்க்கும். இதை, எதிர்ப்பதில் இக் கட்சிக்குள்ளதைப் போன்று இதிலுள்ள ஏனைய பங்காளிகளுக்கும் தேவை இருக்கிறதா? என்பது அலசிப்பார்க்க வேண்டிய விடயம். இதன்,பெரிய பங்காளிக் கட்சிகள் அனைத்தும் சிறுபான்மை கட்சிகளாக உள்ளதால்தான், இந்த அலசல் அவசியப்படுகிறது. ராஜபக்ஷக்களை அல்லது இவர்களின் அரசாங்கத்தை தோற்கடிக்க உச்சளவில் முயன்றும் பலனின்றிப்போன நிலையில், சிறுபான்மைக் கட்சிகளுக்கு இந்தக் கூட்டு அவசியம்தானா?

இந்த அங்கலாய்ப்புக்குள்தான் தமிழ்மொழி சமூகங்கள் இன்று மூழ்கியுள்ளன. இன்னுமொரு தேர்தல் வரைக்கும் காத்திருக்க வேண்டிய நிலையில், தொடர்ந்தும் எதிரணி மனநிலையில் சிறுபான்மை தலைமைகள் செயற்படுவது ஆரோக்கிய அரசியலாக அமையாது என்பதும் சிலரது ஆதங்கங்கள். இவ்வளவு பலமுள்ள இந்த அரசாங்கத்தை ஜனநாயக ரீதியில் கவிழ்ப்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு உரிமை இருக்கிறதுதான். அதற்காக, அடித்தளமே அசையாத கட்டிடத்தை, அலவாங்குகளால் அகற்றவா முற்படுவது? இப்போதைக்கு தேர்தலும் இல்லை என்ற தருணம் வந்துள்ளதாகத்தான் அரசின் அறிக்கைகளும், செயற்பாடுகளும் உள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஒய்வூதியம் பெறுவதற்கு பத்து வருடங்கள் பூர்த்தியாக வேணுமென பட்ஜட்டில் அறிவிக்கப்பட்டிருப்பது, புதிய அரசியலமைப்பு பூர்த்தியாகாமல் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியாது என்று கூறப்படுவதெல்லாம் எதற்காக? சுமார் 25 வருடங்களாகத் தீர்க்கப்படாதிருந்த ஆசிரியர் சம்பளப் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கையில், இந்த பட்ஜட்டுக்கான எதிர்ப்பு, அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இப்போதைக்கு எதற்கு? இதுபற்றி எதிரணியிலுள்ள சிறுபான்மை தலைமைகள் சிந்திப்பது அவசியம்.

அரசியலுக்காக எதிர்ப்பதென்பது அவசியமான விவாதம்தான். அப்படி எதிர்ப்பதில் அடையப்போவது எதை?ஏதாவது ஆபத்து, எந்த வடிவிலும் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தானே, எம்.பிக்களின் ஒரு கையில் அப்பிளும், மறு கையில் கத்தியையும் கையளித்திருக்கிறது இந்த பட்ஜட். இன்னும் ஐந்து வருடங்களை பூர்த்தி செய்யாத, சுமார் அறுபதுக்கும் அதிகமான எம்.பிக்கள் இந்தப் பாராளுமன்றத்தில் உள்ளனர். கடந்த நல்லாட்சியில், நான்கரை வருடங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதால், அதிலிருந்த சிலருக்கும் இந்த பத்தில் பாக்கியிருக்கிறது. இதனால், ஆட்டத்துக்கான துரும்புகள் அசையாதிருக்கும் என்பதுதான் அரசின் கணிப்பீடு.

எனவே, ஆட்சியைப் புரட்டும் ஆசையுடன் எவரும் வாக்களிப்பது அர்த்தப்படாது. கொள்கைக்காக எதிர்த்தல் அல்லது பங்காளிக் கட்சிகளின் கூட்டுப் பலத்தை காண்பிக்க, பலப்படுத்த ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள சிறுபான்மைக் கட்சிகள் எதிர்க்கலாம். இந்த, இரு வருட காலங்களில் இந்த ஒற்றுமையை ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் வௌிப்படுத்தியிருக்கிறாரா? இதிலுள்ள பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் தனித்தனியாக எதிர்கொள்ள நேர்ந்த இடைஞ்சல்களில், சஜித் பிரேமதாசா பொறுப்புடன் நடந்துகொண்டாரா? இவைகள்தான், சிறுபான்மைத் தளங்களில் விரவி வரும் வினாக்கள். சாத்தியமாகாத ஒன்றுக்காக கூட்டுப்பலத்தை காட்டி, சமூகங்கள் நாதியற்ற நிலமைக்கு தள்ளப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

பிரதேசவாயிலாக சில எம்.பிக்கள் அடையவுள்ள அபிலாஷைகள் அதிகமிருக்கையில், அரசை எதிர்த்து வாக்களிப்பது, தங்களது பிரதேச அபிவிருத்திகளை தூரப்படுத்தும் செயலாகத்தான் இந்த எம்.பிக்கள் கருத முற்பட்டுள்ளனர். எனினும், இதையும் விடபெரிய துரோகம்தான் இந்த எம்.பிக்கள் தலைமைகளுக்குச் செய்வது என்ற விவாதத்திலும் நியாயம் இருக்கிறது. எனவே, சமூகங்கள்தான் இதுபற்றி தங்கள் தலைமைகள், பிரதிநிதிகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. இன்னும் பல வருடங்கள் அல்லது நான்கு வருடங்களில் வரப்போகும் தேர்தலில் பழி தீர்ப்பதை எண்ணி, பாதங்களுக்கடியில் வரும் வரப்பிரசாதங்களை அல்லது வாய்ப்புக்களை விரட்டிவிட சில சிறுபான்மை எம்.பிக்கள் தயாராக இல்லை என்றுதான் தோன்றுகிறது.

மேலும், இவ்வளவு பலமுள்ள அரசாங்கத்தை வாய்த்தர்க்கத்தாலோ அல்லது பாராளுமன்ற வாக்களிப்பாலோ புரட்ட முற்படாமல், தேர்தல் வரைக்கும் சமயோசிதமாக நடப்பதுதான், சமகால அரசியலுக்கு ஆரோக்கியமாக அமையும். இந்த சமயோசிதங்கள் வாக்களிப்பது அல்லது நடுநிலையாக இருத்தலாகவே அமையுமே தவிர, எதிர்ப்பதாக அமையாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: