விவசாய தன்னிறைவு பொருளாதார திட்டமே நெருக்கடியிலிருந்து நாட்டை காப்பாற்றும்

எம். ஜி. ரெட்னகாந்தன்

உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள் காலத்துக்காலம் ஏற்பட்டு வந்துள்ளன. அதற்கு பல காரணிகள் ஆதிக்கம் செலுத்தியிருந்தது.

காலநிலை மாற்றங்கள், தொடர் வறட்சி, யுத்தம், பிழையான பொருளாதாரக் கொள்கை போன்ற காரணங்களால் வளர்முக நாடுகள் பொருளாதார நெருக்கடிகளையும், பஞ்சங்களையும் எதிர்நோக்கி வந்துள்ளன.

இலங்கையைப் பொறுத்தளவில் கொரோனா பெருந்தொற்று மற்றும் பிழையான பொருளாதார கொள்கையினால், நாடு இப்போது ஒரு நெருக்கடியான காலகட்டத்திற்குள் நுழைந்துள்ளது. வேலையின்மை, கடன்சுமை, பொருட்களின் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு, நாட்டின் வாழ்க்கை தரங்களின் குறைவு, இளைஞர்களின் வெளியேற்றம் போன்ற காரணங்களினால் நாடு ஒரு பஞ்சத்தை எதிர்கொள்ள நேரிடுமா? என சந்தேகம் வலுத்துள்ளது.

இலங்கை சீனாவிடமிருந்து வாங்கிய கடனில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டாலும் இன்று மீண்டும் அந்தக் கடனை செலுத்தும் நிலையில் இலங்கையின் பொருளாதாரம் இல்லை.

ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் தொடர்ச்சியாக உள்நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி பூச்சியத்திற்கு கீழே இருந்தால் அது பெருளாதார மந்தம் என கணிக்கப்படுகின்றது.

இலங்கையை பொறுத்தவரை நிலையான உள்நாட்டு மொத்த உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை நோக்கி இலங்கை பயணித்துள்ளதை இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத்திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

கொவிட் -19 தாக்கத்தின் காரணமாக இலங்கை இவ்வாறான பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா காரணமாக இலங்கைக்கு பிரதானமாக அந்நிய செலவாணியை ஈட்டித்தரும் சுற்றுலாத்துறையானது வெகுவாக பாதிக்கப்பட்டதன் காரணமாக அந்நியச் செலவாணி குறைந்து இலங்கை ரூபாயின் மதிப்பு வெகுவாக சரிந்து விட்டது.

இதன் காரணமாக, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப்பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களின் இருப்பு குறைவாலும், பதுக்கல் அதிகரிப்பாலும் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

பணவீக்கம், இறக்குமதி இன்மை, பொருட்கள் தட்டுப்பாடு போன்றன இருக்கின்ற போதும் இலங்கையில் பெரும் பஞ்சம் ஏற்பட போவதில்லை. இருந்தபோதும் அரச தனியார் ஊழியர்கள் மற்றும் நிரந்தர மாதாந்த வருமானங்களை பெறுபவர்கள் உடனடி பாதிப்புக்களை சந்திக்க வாய்ப்புள்ளது.

இலங்கையின் பண மதிப்பு தொடர்ச்சியாக பெறுமதியை இழந்துவரும் நிலையில், நிரந்தரமாக ஊதியம் பெற்று வாழ்க்கையை நடத்திவரும் ஊழியர்கள் உடனடி பாதிப்புக்களை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

அரசாங்கம் என்னதான் சம்பளத்தை அதிகரித்து அரச ஊழியர்களுக்கு வழங்கினாலும், பொருட்களின் விலை உயர்வு காரணமாகவும், பொருட்களின் பதுக்கல் காரணமாகவும் அவர்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து விடாது. அண்மையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை உற்று நோக்கினால், அது ஆட்சி மாற்றத்திற்கான ஆர்ப்பாட்ட கோஷங்கள் அற்றதாகவும், அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு எரிபொருள் விலையேற்றம் போன்றவற்றை முன்நிறுத்தியே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உலகசந்தையில் இலங்கையின் நாணய மதிப்பிழப்பு, இலங்கை நாணயங்களை அச்சிட்டு வெளியிடுவதனால் ஏற்படுகின்ற பண வீக்கம் போன்ற காரணங்களால் மக்களின் கைகளிலுள்ள பணத்திற்கு பெறுமதியற்று போகின்றது.

இன்றைக்கு வளர்முக நாடுகள் என்று சொல்லப்படும் நாடுகளில் முதலாளித்துவ வர்க்கம், தொழிலாளர் வர்க்கம் என்ற இரண்டு வர்க்கங்கள் குறிப்பிடப்படுகின்றது. இதில் மூன்றாவதாக நடுத்தர வர்க்கம் என்ற ஒன்று உள்ளது. இந்த நடுத்தர வர்க்கமானது எவ்வாறாயினும் தனது நிலையை கீழிறக்காமல் தக்கவைப்பதற்கு போராடுவதுடன், தனது பொருளாதார நிலையை அடுத்தகட்டத்திற்கு அதாவது மேல்தட்டு வர்க்கத்தினரின் வாழ்க்கை முறையை அடைவதற்காக முயற்சி செய்யும் ஒரு வர்க்கமாக இருப்பதை காணக்கூடியதாக இருக்கும்.

இலங்கையில் இந்த நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் எதிர்காலத்தில் பொருளாதார சிக்கலில் பெரும் அவலங்களை சந்திக்க கூடிய வாய்ப்புக்கள் தென்படுகின்றன. உதாரணமாக இந்த நடுத்தட்டு வர்க்க மக்களே நகரங்களில் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இப்போது அம்மக்கள் எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினையாக சமையல் எரிவாயு பிரச்சினை காணப்படுகின்றது.

நகரத்தில் வாழும் மக்கள் சமையல் செய்வதற்கு மாற்று வழிகளை நாடிச் சென்றாலும், பணம் இருந்தும் சமையல் எரிவாயுவை பெறமுடியாத நிலைமை உருவாகியுள்ளது.

அடுத்து கீழ்த்தட்டு மக்கள் அதாவது தொழிலாளர் வர்க்கத்தை சேர்ந்த மக்கள், இந்த மக்கள் இலங்கையின் பொருளாதார பிரச்சினை காரணமாக பாதிப்புக்களை சந்தித்தாலும் அவர்களுடைய உழைப்பு பஞ்சத்திலிருந்து இம்மக்களை காப்பாற்றக்கூடியதாகவும், மற்றவர்களுக்கு உணவு உற்பத்தி பொருட்களை வழங்கக்கூடிய வல்லமையையும் கொண்டிருக்கும்.

இலங்கையில் விவசாயத்திற்கான போதிய நீர்வளம் மற்றும் நில வளங்கள் இருந்தபோதும், யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் விவசாய நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்படாமலே இருந்துள்ளது. மரபுவழியாக விவசாயம் செய்துவந்த மக்கள் தமது உணவுப்பயிர்களுக்கு சரியான விலை கிடைக்காமை காரணமாக, உணவுப் பொருள் உற்பத்திகளை குறைத்துக்கொண்டனர் அல்லது கைவிட்டு மத்திய கிழக்கு போன்ற நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்களை தேடி சென்றுவிட்டனர்.

குறிப்பாக விவசாயிகள் மற்றும் உற்பத்தி சார்ந்த பொருட்களை விளைவிப்போருக்கு அவர்களின் பொருட்களுக்கு ஏற்ற சரியான விலை நிர்ணயம் கிடைக்காமல் இடைத்தரகர்களால் தடை செய்யப்பட்டிருந்ததது.

உதாரணமாக உருளைக்கிழங்கை விவசாயிகள் இலங்கையில் பயிரிட்டு அறுவடை செய்யும் காலப்பகுதியில், வெளிநாடுகளிலிருந்து உருளைக்கிழங்கை இறக்குமதி செய்யும் இடைத்தரகர்கள் குறைந்த விலையில் சந்தையில் உருளைக்கிழங்கை விற்பனைக்கு விடும்போது உள்ளுர் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திப்பதுடன் உருளைக்கிழங்கு உற்பத்தியை கைவிடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதன் காரணமாக, மக்கள் வெளிநாட்டு உருளைக்கிழங்கை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையை இடைத்தரகர்கள் ஏற்படுத்துகின்றனர். உள்ளுர் உற்பத்தி கைவிடப்பட்டதன் பின்னர் இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கு இடைத்தரகர்கள் நிர்ணயிப்பதே விலையாக இருக்கும். இதன் காரணமாக இடைத்தரகர்கள் கொழுத்த இலாபத்தை பெற்றுக் கொள்ள உள்ளுர் விவசாயிகள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தள்ளப்படுகின்றனர். இலங்கையில் உள்ளூர் விவசாய உற்பத்தியின் தேவை எதிர்காலத்தில் உணரப்படும் போது உழைக்கும் அடித்தட்டு வர்க்க மக்களுக்கான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும், அத்துடன் அவர்களின் வாழ்க்கைதரமும் உயரும் என்பதுடன் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த மக்களால் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கு அவர்கள் நிர்ணயிப்பதே விலையாக இருக்கும்.

கடந்த காலத்தில் அரசாங்கம் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்காத காரணத்தினால் பலர் தமது உற்பத்திகளை கைவிட்டனர். பெரு முதலாளிகள் ஊக்குவிக்கப்பட்டனர், இதன் காரணமாகவே இன்று பெரும் பஞ்சத்தை நோக்கி நாடு நகரவேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இலங்கையின் உணவு உற்பத்தி கடந்த ஐம்பது வருடங்களுக்கு முன் இருந்ததுடன் ஒப்பிடுகையில் இப்போது மிக மோசமான நிலைமையை அடைந்துள்ளது. இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விவசாய நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில் இன்று விவசாயப் பொருட்களின் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.

தரிசாக உள்ள நிலங்கள் மீளமைக்கப்படவில்லை, வன்னியில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள விவசாய நிலங்கல் விடுவிக்கப்படவில்லை, குளங்கள் அனைத்தும் முற்றுமுழுதாக புனரமைப்பு செய்யப்படவில்லை, சகல விவசாயிகளுக்குமான நீர்ப்பாச நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை, குறிப்பாக வன்னி பகுதியில் விவசாய நடவடிக்கைகள் திட்டமிட்ட முறையில் நசுக்கப்பட்டு வருகின்றது.

வடக்கில் வன்னியில் விவசாய நடவடிக்கைகளை வனவளத் திணைக்களம் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. தமது சொந்த நிலத்தில் விவசாயம் செய்ய முற்படும் மக்களை தடுத்து நிறுத்தும் வனவளத்துறையினர், மக்களிடம் நிலத்திற்கான ஆவணங்கள் இருந்தும் இந்த ஆவணங்கள் செல்லாது இக்காணி வனவளத்துறைக்கு சொந்தமானது என கூறி மக்களின் உழவு இயந்திரங்கள் மற்றும் விவசாய உபகரணங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்தும் வருகின்றனர். இச்செயற்பாடுகளின் போது அப்பிரதேசங்களிலுள்ள பிரதேச செயலகங்களின் ஆலோசனைகளை வனவளத்துறையினர் பெற்றுக்கொள்வதில்லை என்றும் சர்வதிகாரப் போக்கில் செயற்படும் வனவளத்துறையினரின் நடவடிக்கை காரணமாக விவசாயிகள் வன்னியில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக விவசாய அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக உள்ளுர் விவசாய உற்பத்தி பொருட்களை அதிகரிக்க முடியாத நிலைமை தொடர்ந்து காணப்படுகின்றது.

இலங்கைத் தீவை சூழவுள்ள கடல்வளம் எமது நாட்டிற்கு கடலுணவு ஏற்றுமதி மூலம் பெருளவு அந்நியச் செலவாணியை ஈட்டி தருகின்றது. உண்மையில் கடற்றொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அத்துடன் அவர்களுக்கான எரிபோருள் விநியோகம் தடைப்படாமல் வழங்கப்பட வேண்டும்.

முக்கியமாக இலங்கை மக்களுக்கு கடலுணவானது குறைந்த விலையில் புரதம் நிறைந்த உணவாக கிடைக்கக் கூடியதாக இருந்தாலும் இன்று ஏழை மக்களுக்கு கடலுணவு வாங்க முடியாத அளவிற்கு விலை ஏற்றம் விஷம் போல ஏறிக்கொண்டு செல்கிறது.

உண்மையில் உணவு உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கு கரங்கொடுக்கும் காலம் நெருங்கி வந்துள்ளது. இறக்குமதி உணவுப்பொருட்கள் கிடைக்காது என்ற நிலையில், தங்களை தாங்களே மேன்மை பாராட்டிய அரச தனியர் ஊழியர்கள் விவசாயிகளுக்கு சலுகைகளை வழங்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு விவசாயிகளுக்கான சலுகைகளை வழங்கினால் மாத்திரமே வரப்போகும் பஞ்சத்திலிருந்து நாடு தப்பி பிழைக்க முடியும்.

பணம் வைத்திருப்பவர்கள் எல்லாம் பணத்தை சாப்பிட முடியாது எனவே நிலம் வைத்திருக்கும் மக்கள் அனைவரும் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டால் மாத்திரமே நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவர முடியும்.

விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் பணப்பயிர்களை தவிர்த்து நெல், தானியங்கள் மற்றும் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய முன்வர வேண்டும். இவ் உற்பத்தி பொருட்கள் இலாப நோக்கமாகவும் வெற்றி பெறும், நாட்டை காப்பாற்றும் சமுக பங்களிப்பாகவும் இருக்கும்.

வடக்கு கிழக்கில் விவசாயம் செய்வதற்கான நிலங்கள் அதிகமாக காணப்படுகின்றன. பிரதேச செயலகங்கள், மாவட்ட செயலகங்கள் மற்றும் விவசாய திணைக்களங்கள் ஒன்றிணைந்து அரச மற்றும் தனியார் நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை விளைநிலங்களாக மாற்ற முன்வரவேண்டும். அத்துடன் இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள விளைநிலங்கள் விடுவிக்கப்பட்டு அவற்றை மீண்டும் பயிர் செய்யும் நிலங்களாக மாற்றியமைக்க அரசாங்க திணைக்களங்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் வடக்கு கிழக்கு மக்களை பெரிதும் பாதித்ததுடன் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இடம்பெயர்வுகளையும் ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக வன்னி பகுதியில் இடம்பெயர்ந்த மக்களின் காணிகள் காடுகளாக மாறியுள்ள நிலையில் வனவளத்திணைக்களம் அம் மக்களின் காணிகளை எல்லையிட்டு அவர்களின் விவசாய நடவடிக்கைகளையும், அபிவிருத்திகளையும் தடுத்து வருகின்றது.

இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பாக பிரதேச அரசியல்வாதிகளும், பிரதேச செயலகங்களும் இணைந்து நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

எதிர்வரும் காலத்தில் வங்கிகள், தனியார் நிறுவனங்கள், புலம்பெயர் அமைப்புக்கள் ஒருவருக்கு உதவி வழங்கும் போது உற்பத்தியில் ஈடுபடும் ஒரு நபருக்கு அதை வழங்கினால் அதனால் நாடே பயனடையும் வாய்ப்பு ஏற்படும். விவசாயத்தில் இலாபமில்லை என கைவிட்டவர்கள் மீண்டும் விவசாயத்தை தொடங்கவேண்டிய காலகட்டம் இது. இளைஞர்கள் ஒரு விவசாய புரட்சியில் ஈடுபடும் காலகட்டம் நெருங்கி வந்துள்ளது, நாட்டையும் மக்களையும் காப்பாற்ற விவசாய நடவடிக்கையை முழுமூச்சாக இளைஞர்கள் முன்னெடுக்க வேண்டும் இதன்காரணமாக இளைஞர்களின் எதிர்காலம் செழிப்படையும்.

எதிர்காலத்தில் ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தனியார் மற்றும் அரச திணைக்களங்களால் முடியாமல் போகும்.

ஒரு சிறுதுண்டு நிலம்கூட தரிசாகவிடப் படக்கூடாது, எதிர்காலத்தில் பணத்தை வைத்து எதுவும் செய்யமுடியாத நிலைமை ஏற்படும் எனவே விவசாயம் மற்றும் உற்பத்தியில் ஈடுபடுவதற்கு இளைஞர்களை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும். சுயதன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கிய பாதையில் நாடு நடைபோடும் பட்சத்திலேயே முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய அரசுகளிடம் இலங்கை அடிமைப்பட்டு கையேந்தாமல் வரப்போகும் பஞ்சத்திலிருந்து மக்களை காப்பாற்றி, இலங்கை ஒரு ஜனநாயக சோசலிச குடியரசாக தலைநிமிர்ந்து நடைபோடச் செய்ய முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: