பஸிலின் ‘ஓயாத அலை’ வியூகம் வெற்றி! கட்சி முடிவையும்மீறி முஸ்லிம் எம்.பிக்கள் ‘அந்தர் பல்டி’! துள்ளிய பங்காளிகளும் ‘கப்சிப்’!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான கூட்டணி அரசின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் 2 ஆம் வாசிப்பு நாடாளுமன்றத்தில் இன்று 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 11 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் கடந்த 12 ஆம் திகதி நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. மறுநாள் முதல் இன்றுவரை 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இந்நிலையில் இன்று மாலை 5.10 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

பட்ஜட்டுக்கு ஆதரவாக வாக்களித்த கட்சிகள் (153 வாக்குகள்)

1.ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
2.ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி

 1. ஈபிடிபி
  4.இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்
  5.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி
  6.ஜனநாயக இடதுசாரி முன்னணி
  7.லங்கா சமசமாஜக்கட்சி
  8.இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி
  9.தேசிய காங்கிரஸ்
  10.எமது மக்கள் சக்தி
 2. பிவிதுரு ஹெல உறுமய
  12.முஸ்லிம் தேசியக் கூட்டணி.

( மேற்படி கட்சிகளில் பொதுஜன பெரமுன, சுதந்திரக்கட்சி, ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தேசிய காங்கிரஸ், எமது மக்கள் சக்தி, முஸ்லிம் தேசியக் கூட்டணி ஆகியனவே நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள். ஏனையக்கட்சிகள் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தின்கீழ் போட்டியிட்டன. சுதந்திரக்கட்சிக்கு யாழ் மாவட்டத்தில் ஒரு ஆசனம் கிடைத்தது.)

எதிராக வாக்களித்த கட்சிகள் (60 வாக்குகள்)

 1. ஐக்கிய மக்கள் சக்தி
 2. இலங்கைத் தமிழரசுக்கட்சி
  3 அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
 3. ஜனநாயக மக்கள் முன்னணி
 4. மலையக மக்கள் முன்னணி
 5. தொழிலாளர் தேசிய சங்கம்
 6. ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
 7. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
 8. புளொட்
  10.ரொலோ

( மேற்படி கட்சிகளுள் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, இலங்கைத் தமிழரசுக்கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவே நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள். ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி என்பன கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணியாக ஐக்கிய மக்கள் சக்தியின்கீழ் போட்டியிட்டன)

வாக்கெடுப்பில் பங்கேற்காத உறுப்பினர்கள் – 11

மனோ கணேசன்,
சுமந்திரன்,
சாணக்கியன்,
சிவி விக்னேஸ்வரன்,
விஜயதாச ராஜபக்ச,
தௌபீக் உட்பட 11 எம்.பிக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

மனோ கணேசன் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் வெளிநாடு சென்றுள்ளனர். 20 ஆவது திருத்தச்சட்டத்தை ஆதரித்த அரவிந்தகுமார், டயானா கமகே ஆகிய எம்.பிக்கள் இம்முறையும் அரசுக்கு ஆதரவு வழங்கினர்.

முஸ்லிம் எம்.பிக்கள் பல்டி

அதேவேளை, வரவு- செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன தீர்மானித்திருந்தன. இதன்படி இவ்விரு கட்சிகளின் தலைவர்களும் (ஹக்கீம், ரிஷாட்) எதிர்த்து வாக்களித்தனர். எனினும், முஸ்லிம் காங்கிரஸின் மூன்று எம்.பிக்கள் ஆதரவாகவும், ஒருவர் வாக்கெடுப்பில் (தௌபீக்) இருந்தும் நழுவியுள்ளார்.

ரிஷாட்டின் கட்சியை சேர்ந்த மூன்று எம்.பிக்களும் அரசை ஆதரித்துள்ளனர். புத்தளம் மாவட்டத்தில் இருந்து முஸ்லிம் தேசியக் கூட்டணி சார்பாக தெரிவாகியிருந்தவர் ரிஷாட்டின் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் அரசியல் உயர்பீடங்கள் எடுத்த முடிவையும்மீறி இவர்கள் வாக்களித்துள்ளதால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சமாளிப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

நாளை முதல் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இடம்பெறும். டிசம்பர் 10 இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும். பட்ஜட்டில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் அன்றைய நாளில் அவை உள்வாங்கப்படும்.

வரவு- செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்காக பல தரப்புகளுடனும் கடந்த மூன்று மாதங்களாக பஸில் ராஜபக்ச சந்திப்புகளை நடத்திவந்தார். ஆலோசனைகளை உள்வாங்கினார். அதுமட்டுமல்ல நீண்டதொரு பாதீட்டு உரையையும் நிகழ்த்தினார். தனது கன்னி வரவு- செலவுத் திட்டம் என்பதால் எப்படியும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறவேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார். துள்ளிய பங்காளிக்கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். இறுதியில் இன்று வெற்றி கண்டுள்ளார். அரசுக்குள் உட்கட்சி மோதல் இருந்தாலும் ஆட்சிக்கு அது எவ்வித அச்சுறுத்தலாகவும் அமையவில்லை எனவும், மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது என்பதையும் 2ஆம் வாசிப்புமீதான வாக்கெடுப்பின்மூலம் ஆளுந்தரப்பு நிரூபித்துள்ளது.

ஆனால் மக்கள் மத்தியில் அரசின் செல்வாக்கு எப்படி உள்ளது என்பதை தேர்தலொன்று நடத்தப்படும் பட்சத்தில் அறியலாம் என்பதே எதிரணிகளின் வாதமாக உள்ளது.

இறுதி வாக்கெடுப்பிலும் அரசு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும். ஆனால் பாதீட்டை நிறைவேற்றிக்கொள்வதற்கு சாதாரண பெரும்பான்மையே (113) போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

( நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் என்பது, பொதுத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு வெற்றிபெற்ற கட்சிகளைக் குறிக்கும். அக்கட்சிகளுக்கு நாடாளுமன்ற வளாகத்தில் அலுவலகம் ஒதுக்கப்படும். கட்சித் தலைவருக்கான சிறப்புரிமைகள் அக்கட்சிகளின் தலைவர்களுக்கு வழங்கப்படும். விவாதங்களில் நேர ஒதுக்கீடு இடம்பெறும். 27/2 இன்கீழ் கேள்விகளை எழுப்பலாம். மேலும் பல சிறப்புரிமைகளும் உள்ளன.)

ஆர். சனத்

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: