எழுச்சி அரசியலிலுள்ள யதார்த்தங்கள் எடுகோள்களால் தீர்மானிக்கப்படுகிறதா?

சுஐப் எம்.காசிம்

சமூக எழுச்சி அரசியலுக்கு தடையாக இருப்பது எது? தனித்துவ கட்சிகளா? அல்லது பிரதேச அபிலாஷைகளா? இன்றைய நிலைமைகள் இதைத்தான் சிந்திக்கத் தூண்டுகின்றன. சில எம்.பிக்களின் பிரதேச அபிலாஷைகள், ஏன் தலைமைகளை பலவீனப்படுத்துகின்றன? இனமாக, சமூகமாக மக்களை ஒன்றுதிரட்டிய இந்த தலைமைகளுக்கு, பிராந்திய அபிலாஷைகளையும் அரவணைத்துப் பயணிக்க முடியாது போய்விட்டதா? இவைகள்தான் இன்றைய கேள்விகள்.

சில எம்.பிக்களுக்குள்ள தனிப்பட்ட அல்லது பிரதேச அபிலாஷைகள்தான், அடையாள அரசியலை மலினப்படுத்துவதாக சிலர் கருதுகின்றனர். அரசியலமைப்பின் இருபதாவது திருத்தம், இரட்டைப்பிரஜாவுரிமை, பட்ஜட் வாக்களிப்புக்களின் பின்னரே இந்தக் கருத்துக்கள் நிழலாடத் தொடங்கி உள்ளன. இதனால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், அடையாள அரசியல் அழிந்துவிடுமென்ற ஐயம் தலைமைகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, மக்கள்தான் இந்த ஐயத்தை போக்க வேண்டியுள்ளது. தேசிய அரசியல் கணிப்பீடுகளில், தலைமைகள் விட்ட தவறுகள் எழுச்சியரசியலை வீழ்த்தி உள்ளதாகத்தான் இந்த வினைகளைக் கருத நேரிடுகிறது. ஏனெனில், உரிமை, எழுச்சி அரசியலுக்காக எந்த இழப்புக்களையும் சகித்துக்கொள்ளும் மனநிலைகளில் மக்கள் இல்லையே! இருந்தால் தலைமைகளுக்கு எம்.பிக்கள் கட்டுப்பட்டிருப்பரே. ஆகவே, சமூக அரசியலில் விலகி, அபிவிருத்தி அரசியலுக்கு முன்னுரிமை வழங்கும் அரசியலைத்தான் தலைமைகள் தெரிவுசெய்ய வேண்டி வருமோ? இழப்புக்களைப் பொறுத்துக்கொண்டு பயணிக்கும் மனநிலைகள் மக்களுக்கு இல்லாத நிலையில், தலைமைகளுக்கு இருந்து என்ன பலன்? சிறுபான்மை தளங்களில் எதிரொலிப்பது இவைகள்தான்.

எதிர்ப்புக்களை வௌிப்படுத்தி, என்ன அரசாங்கத்தையா கவிழ்க்க முடியும்? வாக்களிப்பில் பங்கேற்று, வரப்போவதை அள்ளிக்கொள்ளத்தான் இந்த வியூகம் என்கின்றனர் ஆதரவளித்த எம்.பிக்கள். மறுபுறமோ, சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான சிந்தனைகளை இயன்றவரை எதிர்ப்பதுதான், சர்வதேச மட்டத்தில் சில செய்திகளைச் சொல்ல உதவும் என்கின்றன சிறுபான்மை தலைமைகள். இந்த இயங்கு தளத்துக்கு அவசியப்படுவது கட்சிகளின் கட்டுக்கோப்புக்கள்தான். இதில்தான், சமூகத்தின் எழுச்சி அடையாளப்படுவதாகவும் இந்த மிதவாதத் தலைமைகள் சொல்கின்றன. அரசாங்கத்தின் பலம் மூன்றிலிரண்டு கெட்டியுடனுள்ளதை, களனிப்பாலத்தை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதியின் உரையும், பட்ஜட் வாக்கெடுப்பும் நிரூபித்துள்ளதால், அரசு விழும் அல்லது கவிழும் என்ற சிலரின் அங்கலாய்ப்புக்கள், அர்த்தமிழக்கும் சந்தர்ப்பங்கள்தான் அதிகமாகி வருகின்றன.

மறுபுறம், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 ஆசனங்களையும் சேர்த்தே அரசுக்கு இந்தப் பலம் என்கிறார் முன்னாள் ஜனாதிபதி. இவ்வாறு, இருபுறங்களிலும் சமப்படும் விவாதங்கள், எடுகோள்கள் மற்றும் யதார்த்தங்களே, முஸ்லிம் தலைமைகளையும் எம்.பிக்களையும் எதிரும் புதிருமாக புறப்பட வைத்துள்ளன. இது இப்போதைக்கு ஆரோக்கியமாக இருப்பினும், எப்போ ஒரு நாள் அதலபாதாளத்தில் சமூகத்தை தள்ளும் என்ற தலைமைகளின் வியாக்கியானங்கள் இப்போதைக்கு எடுபடப்போவதும் இல்லை.

மக்கள் இல்லாத மாநிலம் எதற்கு? அபிவிருத்தி இல்லாத அரசியல் யாருக்கு? என்று மக்களும் பொது அமைப்புக்களும் கூறிய அறிவுரைக்கு ஏற்ப செயற்பட்டுள்ளதாக, இந்த எம்.பிக்கள் கூறுவது தலைமைகளை சமாதானப்படுத்தவா? அல்லது அரசாங்கத்திடம் தங்கள் பலங்களை வௌிப்படுத்தவா? இவ்வாறு, மக்களது பலங்களை இந்த எம்.பிக்களல்லாது தலைமைகள்தான் நிரூபிக்க வேண்டும். இவ்வாறு செய்யத் தவறின், தனித்துவ தலைமைகள் தனிமைப்படுவது தவிர்க்க முடியாது போகும். இத்தலைமைகள் இவ்வாறு தனிமைப்படுவது, அரசுக்கு வாக்களித்த எம்.பிக்களின் கரங்களையே பலப்படுத்தும். ஏன், அரசாங்கமும் இவர்களையே பலப்படுத்தும். கடந்த காலங்களில், இந்தத் தலைமைகளால் இந்த அரசு அனுபவிக்க நேர்ந்தவைகளை இனவாதிகள் அடிக்கடி தூக்கிப்பிடிப்பதை நிறுத்தும் வரைக்கும், பேரம் பேசும் அரசியல் பேசா மடந்தையாகத்தான் போகுமோ தெரியாது!

இன்னுமொன்றும் இதில் உள்ளது. கொள்கை மாறி, கட்சி தாவி, கடைசியாக தனித்துவமும் இழந்து வரும் இந்த எம்.பிக்களுக்கு, தேர்தல் காலத்தில் மக்கள் வழங்கும் சன்மானமிருக்கிறதே! அதுதான் இவர்களின் அரசியலையும் தீர்மானிக்கும். இதற்காகத்தான் இவர்கள் உழைக்க வேண்டியிருக்கும். சார்ந்து செல்லும் அரசியலும், சமயோசித சிந்தனையுமா சமூகத்துக்கு தேவையானவை? அல்லது தனித்துவமும், சமூக அடையாளமுமா? என்பதை, அவரவர் தளத்திலிருந்து முஸ்லிம் எம்.பிக்களும், தலைமைகளும் உணர்த்த வேண்டியிருக்கும். எதுவாக இருந்தாலும், இவர்கள் செய்யப்போவது, இருப்பதையும் இல்லாமலாக்காதிருக்க வேண்டும் என்பதுதான் பொதுவானோரின் பிரார்த்தனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: