இன்றும் எரிவாயு தாங்கி வெடிப்புச் சம்பவங்கள் பதிவு – 16 ஆக உயர்வு?

நாடளாவிய ரீதியில் இன்றும் (29.11.2021) எரிவாயு தாங்கி வெடிப்புச் சம்பவங்கள் பல பதிவாகியுள்ளன.  இன்று ஹட்டன், ஹங்வெல்ல, ஏராவூர், கிண்ணியா போன்ற பிரதேசங்களில் எரிவாயு தாங்கி வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

வடக்கு, தெற்கு உட்பட இன்று நாடளாவிய ரீதியில் நான்கு எரிவாயு வெடிப்புகள்

நேற்றைய லங்கா நெட் நிவ்ஸ் செய்தியறிக்கைகளின் படி நவம்பர் 28 ஆம் திகதி இடம்பெற்ற பத்து வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பாக வௌியிட்டோம்.

அவ்வகையில் இன்றும் பல சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

  • ஆராச்சிக்கட்டு

சிலாபம் – ஆராச்சிக்கட்டு பிரதேசத்தில் வீடொன்றில் சமையல் எரிவாயு அடுப்பினை பற்றவைத்த போது சிலிண்டரின் மேல் பாகத்தில் தீப்பற்றியுள்ளது.

சம்பவத்தின் போது வீட்டிலிருந்தவர்கள் மற்றும் அயலவர்கள் விரைந்து செயற்பட்டு தீ பரவ முன்னர் அதனைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த வீட்டிலிருந்த பெண் தெரிவிக்கையில் ,

சனிக்கிழமை (27.11.2021) எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றிலிருந்து சமையல் எரிவாயுவினை கொள்வனவு செய்தோம். அதனை பொறுத்தி அடுப்பை பற்ற வைத்த போதே இவ்வாறு தீ பற்றியது. எனினும் அயலவர்களுடன் இணைந்து விரைந்து செயற்பட்டு சிலிண்டரை வெளியில் எரிந்ததோடு, தீயையும் கட்டுப்படுத்தி விட்டோம்.

இதனை சரியாக அவதானிக்காமல் இருந்திருந்தால் நானும் எனது தாயும் தீக்கிரையாகியிருந்திருப்போம் என்று குறிப்பிட்டார். ஆராச்சிகட்டு பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். இச்சம்பவம் 28.11.2021 ஆம் திகதி இடம்பெற்றது.

  • ஜாஎல

ஜாஎல – துடெல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.11.2021) இரவு வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

சமைத்து முடிந்ததன் பின்னர் எரிவாயு அடுப்பினை அணைத்த பின்னரே பாரிய சத்தத்துடன் வெடித்ததாக குறித்த வீட்டிலுள்ள பெண் தெரிவித்துள்ளார்.

  • திருகோணமலை

திருகோணமலை – கிண்ணியா , ஆலங்கேணி பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.11.2021) எரிவாயு அடுப்பு வெடித்து தீப்பற்றியுள்ளது.

இதன் போது வீட்டார் மற்றும் அயலவர்கள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். சம்பவத்தில் எவ்வித உயர் சேதமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த சம்பவங்கள் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றாலும் செய்தியறிக்கை வௌியிட்ட பின்னரே கிடைக்கப்பெற்றன.

  • ஏறாவூர்

மட்டக்களப்பு – ஏறாவூர் மிஷ்நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இன்றைய தினம் (29.11.2021) நண்பகல் 12 மணியளவில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.

எனினும் இதன் போது வீட்டு சமையலறை சேதமடைந்துள்ள போதிலும் , எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஹட்டன் பகுதியில் சமையல் எரிவாயு குழாய் வெடிப்பு-Gas Leak-Blast-Hatton

  • ஹட்டன்

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஹட்டன் புருட்ஹில் பகுதியில் நடத்திச் செல்லப்படும் ஹோட்டலொன்றில் இன்று (29) காலை வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைத்து ஒரு மணத்தியாலத்தின் பின்னர், சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்பை இணைக்கும் குழாய் வெடித்து சிதறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இதன் போது எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையென தெரிவித்த ஹட்டன் பொலிஸார் சமையல் அறையில் இருந்த சில பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  • ஹங்வெல்ல

ஹங்வெல்ல பிரதேசத்திலும் எரிவாயு வெடிப்பு சம்பவம் ஒன்று இன்று (29) இடம்பெற்றுள்ளது. அந்த பகுதியிலுள்ள வீடொன்றில் எரிவாயு கசிவு காரணமாகவே இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக வீட்டாா் தெரிவித்துள்ளனர்.

  • பொல்கஸ்சோவிட – எரிவாயு கசிவு

கொழும்பு – பொல்கஸ்சோவிட்ட பிரதேசத்தில் ரணவிரு பிரேமசிறி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் உரிமையாளர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை தான் கொள்வனவு செய்த சமையல் எரிவாயு சிலிண்டரில் எரிவாயு கசிவு ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

சிலிண்டரை அடுப்புடன் பொறுத்துவதற்காக அதிலுள்ள மூடியைத் திறந்த போது சத்தத்துடன் வாயு வெளியேறியதாக அவர் கூறினார்.

இதன் காரணமாக எரிவாயு சிலிண்டரை வீட்டிலிருந்து அப்புறப்படுத்தி அதன் வாய்ப்பகுதியில் சவர்க்கார நுரையினை இட்டு அவதானித்த போது நுரை பொங்கியதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்.

இதனை அவர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்துள்ளார். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் குறித்த நபர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய அறிக்கையிடலின்படி எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் 16 ஆக உயர்வடைந்துள்ளன.

பாவனையாளர்கள் அவதானமாக செயற்பட வேண்டும்

எவ்வாறிருப்பினும் எந்த வகை சமையல் எரிவாயுவை உபயோகித்தாலும் மக்கள் அது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும். புதிதாக சமையல் எரிவாயு சிலிண்டரினை கொள்வனவு செய்பவர்கள் அதனை பொறுத்தும் போது ஏதேனும் கசிவு காணப்படுகிறதா என்பதை அவதானிக்க வேண்டும்.

கசிவு ஏற்படுவதை அவதானித்தால் அதற்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அத்தோடு சமையல் எரிவாயு சிலிண்டர்களை காற்றோட்டமுடைய இடங்களில் வைத்து உபயோகிப்பது ஓரளவிற்கு பாதுகாப்பானதாகும். LNN Staff

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: