ஜனாதிபதி டிசம்பரில் அபூதாபி விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் அடுத்த மாதம் 4ஆம் திகதி நடைபெறவுள்ள இந்து சமுத்திர மாநாட்டில் தலைமை உரையாற்றுவதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்ததுடன், டிசெம்பர் மாதம் 5ஆம் திகதி, ஐக்கிய அரபு அமீரகத்தின் அரச தலைவரைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என்றார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்து தெரிவித்த அவர், இந்த சம்மேளனத்தின் தலைவராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்படுவதுடன், உப தலைவர்களாக இந்தியா, சிங்கப்பூர், ஓமான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

குறித்த மாநாட்டின் இந்த வருடத்துக்கான தொனிப்பொருள்“ சுற்றாடல், பொருளாதாரம் மற்றும் தொற்று” என தெரிவித்த அவர், இந்த மாநாடானது இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமையவுள்ளது என்றார்.இதேவேளை, கடந்த வாரம் ஐக்கிய நாடுகளின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிப் பொது செயலாளர் மற்றும் ஐ.நாவின் விசேட தூதுவரும் இலங்கைக்க வருகைத் தந்து, தமது அமைச்சுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்ததாக தெரிவித்தார்.

கொரோனா தொற்று மற்றும் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி என்பவற்றின் பின்னணியில் இலங்கை முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் மற்றும் நாம் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில், குறித்த இரண்டு அதிகாரிகளிடமும் விரிவான காரணங்களை முன்வைக்க இது ஒரு பயனுள்ள சந்தர்ப்பமாக
அமைந்தது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: