இலங்கை – தென்னாபிரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக டயானா கமகே தெரிவு

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இலங்கை-தென்னாபிரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே நேற்று (29) தெரிவுசெய்யப்பட்டார்.

கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் உயர்ஸ்தானிகர் சண்டைல் எட்வின் சல்க் இக்கூட்டத்தில் விசேட விருந்தினராகக் கலந்துகொண்டார். பல்வேறு அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான அரவிந்த் குமார், வீரசுமன வீரசிங்ஹ மற்றும் மர்ஜான் பலீல் ஆகியோர் இந்நட்புறவு சங்கத்தின் பிரதித் தலைவர்களாகத் தெரிவுசெய்யப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் செயலாளராகவும், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் உதவிச் செயலாளராகவும் தெரிவுசெய்யப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் இலங்கை – தென்னாபிரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் பொருளாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.

இலங்கை – தென்னாபிரிக்கா பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் இரு நாடுகளுக்கும் இடையில் பல தசாப்தங்களாக நிலவும் நல்லுறவை மேலும் மேம்படுத்தும் என இங்கு உரையாற்றிய கௌரவ சபாநாயகர் தெரிவித்தார். “தென்னாபிரிக்கப் பிராந்தியத்தில் இலங்கையின் முன்னணி வர்த்தகப் பங்காளியாக தென்னாபிரிக்கா விளங்குகிறது. இரு நாடுகளும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள உத்தேசித்துள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

நட்புறவு சங்கத்தின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வாழ்த்தைத் தெரிவித்த இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சண்டைல் எட்வின் சல்க், இந்த நட்புறவு சங்கத்தின் ஊடாக இரு நாட்டுப் பாராளுமன்றங்களுக்கிடையிலான உறவுகளையும் பலப்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டார்.

‘ஒமிக்ரோன்’ கொரோனா வைரஸ் திரிபு தொடர்பில் ஊடகங்களில் வெளியிடப்படும் அறிக்கைகளை மறுத்த தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர், தென்னாபிரிக்க வைத்தியர்களே குறித்த திரிபை முதலில் கண்டுபிடித்தபோதும், இந்தத் திரிபு தென்னாபிரிக்காவிலிருந்து உருவாகவில்லையென்றும் கூறினார்.

இலங்கை – தென்னாபிரிக்க பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே இங்கு குறிப்பிடுகையில், இரு நாட்டுப் பாராளுமன்றங்களும் இடையிலான நல்லெண்ண விஜயம் மற்றும் ஆய்வு விஜயங்களின் ஊடாக இரு நாட்டு சட்டவாக்கங்களுக்கும் இடையிலான உறவுகளை மேலும் விரிவுபடுத்த முடியும் எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: