வெலிகம சிறுமியின் உயிரை பறித்த தீப் பரவலுக்கான காரணம் என்ன?

வெலிகம, வெவேகெதரவத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக, அவ்வீட்டிலிருந்த 8 வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நேற்று (30) இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வீட்டின் அறையொன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக, அதன் கூரை எரிந்து வீழ்ந்துள்ளதோடு, இதன் காரணமாக குறித்த அறையில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி தீயில் சிக்கி மரணமடைந்துள்ளார்.

குறித்த வேளையில் தந்தை வீட்டில் இருக்கவில்லை எனவும், மற்றுமொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த அவரது 13 வயது சகோதரியும், பாட்டியும், வீட்டிலிருந்து தப்பியோடி உயிர் தப்பியுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து வெலிகம பொலிஸாரால், மாத்தறை தீயணைப்பு பிரிவினர் வரவழைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும், வீட்டில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர், எரிவாயு அடுப்பு உள்ளிட்ட ஏனைய உபகரணங்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த வீட்டிலிருந்த எரிவாயு சிலிண்டர் ஒரு வாரத்திற்கு முன்னர் தீர்ந்து போன நிலையில், புதிய சிலிண்டரை கொள்வனவு செய்யவில்லையென்பதால், இது சமையல் எரிவாயு தொடர்பான விபத்து அல்ல என, தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: