இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் பிரதமருடன் சந்திப்பு

இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நேற்று (30) இரவு கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் நடைபெற்றது.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸின் அழைப்பின் பேரில் இவ்விசேட சந்திப்பும் இரவு விருந்துபசாரமும் இடம்பெற்றது.

இதன்போது வருகைத் தந்திருந்த தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்களுடன் பிரதமர் நட்பு ரீதியாக கலந்துரையாடினார்.

கொவிட்-19 தொற்று நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட துரித செயற்பாட்டிற்கு வருகைத்தந்திருந்த தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இஸ்லாமிய நாடுகளுடனான இருதரப்பு உறவை தொடர்ந்து பேணுவதல் மற்றும் பரஸ்பர செயற்பாடுகள் மற்றும் திட்டங்கள் ஊடாக இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிப்பு செய்வது தொடர்பில் இதன்போது தூதுவர்கள் கருத்து தெரிவித்தனர்.

தொற்று நிலைமைக்கு சவால்களை வெற்றி கொண்டு இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இதன்போது தெளிவுபடுத்தினார்.

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பினை தொடர்ச்சியாக எதிர்பார்ப்பதாக இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் மத்தியில் குறிப்பிட்டார்.

இஸ்லாமிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கையின் 15 தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

ஓமான், பலஸ்தீன், குவைத், சவுதி அரேபியா, மலேசியா, கடார், துருக்கி, ஈரான், லிபியா, ஐக்கிய அரபு இராச்சியம், இந்தோனேசியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கான இலங்கை தூதுவர்கள் மற்றும் மாலைதீவு, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாடுகளின் இலங்கை உயர் ஸ்தானிகர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: