மனிதனுக்கு மரபணு மாற்றிய பன்றி இதயம் பொருத்தி சாதனை

இதயம் பாதிக்கப்பட்டு மரணத்தை நெருங்கிய நபருக்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் பொருத்தி வெற்றி கண்ட விடயமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின்  மேரிலேண்டைச் சேர்ந்த 57 வயதான டேவிட் பென்னேட் என்ற நபர் இதயம் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். வேறு இதயத்தை பொருத்தாவிட்டால் மரணம் நிச்சயம் என்ற நிலையில் அவர் இருந்தார். இந்நிலையில் பன்றியின் இதயத்தை அவருக்குப் பொருத்த மேரிலேண்ட் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதற்காக அமெரிக்க சுகாதாரத்துறையின் ஒப்புதலையும் அவர்கள் பெற்றனர்.

இதையடுத்து மனிதர்களின் உடலுக்குப் பொருந்தும் வகையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் இதயம் டேவிட் பென்னேட்டுக்குப் பொருத்தப்பட்டது. இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் பென்னேட் ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனிதர்களின் உடல் உறுப்புகளும் பன்றிகளின் உடல் உறுப்புகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளன. இதனால் பன்றியின் இதயம் ஏற்கனவே மனிதர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த இதயங்கள் மனித உடலுக்கு முழுமையும் பொருந்தாததால் அறுவை சிகிச்சைகளில் வெற்றி கிடைக்கவில்லை. எனவே மனிதர்களின் உடலுக்குப் பொருந்தும் வகையில் பன்றியின் இதயத்தில் மரபணு ரீதியிலான மாற்றங்கள் செய்யப்பட்டு உலகிலேயே முதன்முறையாக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தற்போது செய்யப்பட்டுள்ளது.

இதில் நம்பிக்கை தரும் முடிவு கிடைத்துள்ளதால் சிறுநீரகம் போன்ற பன்றியின் மற்ற உடலுறுப்புகளையும் மரபணு மாற்றம் செய்து மனிதர்களின் உடலில் பொருத்தும் சூழல் ஏற்படும். உலகெங்கும் உறுப்பு தானத்திற்காக காத்துள்ள கோடிக்கணக்கான நோயாளிகளுக்கு இது மிகப்பெரும் தீர்வாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: