இலங்கையின் கடன் மீளச் செலுத்தும் ஆற்றலை கேள்விக்குறியாக்கியுள்ள கடன் தரமிடல் நிறுவனம்பு

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல் துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

புதுவருடம் பிறந்த கையோடு இலங்கை சர்வதேச ரீதியில் மற்றுமொரு நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கிறது. கடந்த 12ஆம் திகதி S&P என அழைக்கப்படும் ஸ்டாண்டர்ஸ் அன்ட் புவர்ஸ் (Standards and Poors) என்னும் சர்வதேச கடன் தரமிடல் நிறுவனம் இலங்கையின் நீண்டகால இறைமைக்கடன் தரமிடலை CCC+ என்ற மட்டத்தில் இருந்து அடுத்த மட்டமாகிய CCC மட்டத்திற்கு தரமிறக்கி அறிவித்துள்ளமை இலங்கையைக் கலக்கத்தில் தள்ளியிருக்கிறது.

ஆனால் இலங்கையின் நீண்டகால இறைமைக்கடன் தரமிடலை கீழ்நோக்கிய S&P நிறுவனம் குறுங்காலக் கடன் திருப்பிச் செலுத்தும் ஆற்றல் நிலை பற்றிய தரமிடலைத் தொடர்ந்தும் C என்ற மட்டத்தில் வைத்திருப்பதையும் குறிப்பிடலாம். 2021 ஆம் ஆண்டு முடிவடைந்த போது டிசம்பர் 31 திகதி இலங்கையின் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு 3.1 பில்லியன் டொலர்களாக அதிகரித்திருப்பதாக அறிவித்த இலங்கை மத்திய வங்கியானது, கடன் தரமிடல் நிறுவனங்களின் இலங்கை பற்றிய தரமிடலை விமர்சித்து அவற்றின் மூக்கில் ஒரு குத்து விட்டிருந்தமையும் நினைவிருக்கலாம்.

எவ்வாறாயினும் இலங்கையின் அடுத்துவரும் 12 மாதங்களுக்கான கடன் மீளச்செலுத்தும் ஆற்றல் நிலை இடரபாயமிக்கதாக உள்ளதாகவும் இதுவரை எதிர்வு கூறப்படாத ஏதேனும் நல்ல விடயங்கள் நடந்தாலே தவிர இலங்கை தான் பெற்ற கடனை மீளச் செலுத்தாமல் விடுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்துச் செல்வதாகவும் S&P நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. இதனால் அதன் எதிர்வுகூறல் எதிர்க்கணியமாக உள்ளதாக அதன் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

வெளிநாட்டு கடன் பொறுப்புகள் அதிகரிப்பதன் காரணமாகவும் நிதி வசதிகளை பெற்றுக்கொள்வதில் நிலவும் தடைகள் காரணமாகவும் இலங்கையின் வெளிநாட்டுத்துறை நிலைமைகள் தொடர்ந்தம் நலிவடைந்து செல்வதாக அந்நிறுவனம் கூறுகிறது. அடுத்துவரும் காலாண்டுகளில் முதிர்ச்சிடையவுள்ள இறைமைக்கடன் முறிகள் மீதான செலுத்தல்கள் மற்றும் சென்மதி நிலுவையின் நடைமுறைக்கணக்கு குறைநிலை காரணமாகவும் இலங்கையின் அந்நியச் செலாவணி ஒதுக்குகள் மீது மேலும் அழுத்தங்களை உருவாக்கும் என S&P நிறுவனம் எதிர்வு கூறுகிறது.

இலங்கையின் தளம்பலான வெளிநாட்டுத்துறை நிலை அத்துடன் விரிவடையும் வரவு செலவுத்திட்டப் பற்றாக்குறை அரசாங்கத்தின் பாரிய கடன் பெறுகை அதிகமான வட்டி செலுத்தல்கள் கடப்பாடுகள் போன்ற காரணங்களால் அடுத்துவரும் 12 மாதங்களில் உரிய காலத்தில் கடன் சேவை மேற்கொள்ளும் ஆற்றல் இலங்கைக்கு கடினமானதாக மாறக்கூடும் என அது கருதுகிறது.

அண்மையில் அரசு அறிவித்த 1.2 பில்லியன் டொலர் பெறுமதியான நிவாரணப்பொதி அரசாங்கத்தின் ஏற்கனவே பெரும்கடன் சுமையோடு கூடிய பலவீனமான நிதி நிலைமையினை மேலும் மோசமடையச் செய்துள்ளதாக குறித்த கடன் தரமிடல் நிறுவனம் கருதுகிறது. அத்துடன் நாட்டின் பொருளாதாரம் மீட்சியடையும் தன்மையானது தொடர்ந்து செல்லும் கோவிட் 19 பெருங்கொள்ளை நோய் காரணமாகவும் வெளிநாட்டுத்துறை நிதி அழுத்தங்கள் காரணமாகவும் சவால்நிலையை எதிர்கொள்வதோடு நுகர்வோரின் நடத்தைகளையும் பாதிக்கும். அதாவது நாட்டில் மக்களின் நுகர்வு நடத்தைகள் குறைவடையும். அது நாட்டின் முதலீட்டு சாத்தியங்களை பாதிக்கும் எனவும் மேற்படி நிறுவனம் எதிர்வு கூறுகிறது. இவற்றின் விளைவாக 2021 ஆண்டில் 3 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி வீதம் 2022 இல் 2.2 சதவீதமாக வீழ்ச்சியடையும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.

இந்தக் கடன் தரமிடல் நடவடிக்கைக்கு இலங்கை மத்திய வங்கி உடனடியாகவே காட்டமாக எதிர்வினை காட்டியது. தெளிவான வகையில் கடன் தரமிடல் நிறுவனங்கள் இலங்கை வெளிநாட்டுக் கடன்கள் முதிர்வடைந்து மீளச்செலுத்தவேண்டிய காலம் அண்மிக்கும் வேளைகளில் கடன் தரமிடல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் கடனை மீளச் செலுத்துவதற்குரிய வளங்களை உரியவகையில் ஏற்பாடு செய்துள்ள நிலையிலும் அதுவரையில் இலங்கை எந்தக் கடனையும் மீளச் செலுத்தாமல் விடாத நிலையிலும் இவ்வாறு தரமிறக்கலை மேற்கொள்வது பொருத்தமற்ற நடவடி க்கை எனவும் இலங்கை அதிகாரிகள் இலங்கையின் பொருளாதார மற்றும் நிதி நிலைமைகள் மற்றும் எதிர்காலத்திட்டங்கள் குறித்து மேற்படி கடன் தரமிடல் நிறுவனத்திற்குத் தெளிவூட்டலை மேற்கொண்டுள்ள போதிலும் அவற்றையெல்லாம் கருத்திற்கொள்ளாது வெறுமனே அந்நியச் செலாவணி கையிருப்புகளை மாத்திரம் கருத்திற் கொண்டு இவ்வாறான தரமிறக்கலை அந்நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் மத்திய வங்கி கூறுகி றது. இலங்கை தொடர்ந்தும் தனது கடன் கடப்பாடுகளை உரியவாறு நிறைவேற்ற உறுதிப்பாட்டுடன் உள்ளதாகவும் அது அறிவித்தது.

கொரோனா கொள்ளை நோயினால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இலங்கையும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆயினும் இலங்கையில் இச்சவாலுக்கு மத்தியிலும் ஏற்பட்டுவரும் நேர்க்கணியமான அபிவிருத்திகளை அந்நிறுவனம் கருத்தில் கொள்ளவேயில்லை என மத்தியவங்கி கவலையடைகிறது. மத்தியவங்கி வெளியிட்ட ஆறுமாத கால பாதை வரைவு மற்றும் 2022 இற்கான அரசாங்க வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளிலுள்ள சிறந்த விடயங்கள் பற்றியெல்லாம் தரமிடல் நிறுவனம் கரிசனை காட்டவில்லை என அது சாடுகிறது.

இலங்கைக்கெதிராகத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இதுபோன்ற தரமிடல் நடவடிக்கைகள் அந்நியச் செலாவணி உட்பாய்ச்சல்களை அதிகரிப்பதற்கு இலங்கை அதிகாரிகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குத் தடையாக அமைந்து காலதாமதங்களை ஏற்படுத்துவதோடு முதலீட்டாளர்களின் நம்பகத் தன்மையைப் பாதித்து சாத்தியமான இலங்கைக்குள் வரவேண்டிய முதலீட்டு உட்பாய்ச்சல்களைக் குறைப்பதனால் நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்புகளை படிப்படியாகக் கட்டியெழுப்பும் நடவடிக்கை பாதிக்கப்படுவதாகவும் அறிவித்தது.

அத்தோடு S&P நிறுவனம் கூறிய எதிர்பார்க்கப்படாத நல்ல சம்பவங்கள் ஏதும் நடந்தாலன்றி கடன் மீளச்செலுத்தாமல் விடும் இடர்கள் அதிகரிக்கும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் ஏனெனில் இலங்கைப் பொருளாதாரம் மீட்சியடைவதற்கான சமிக்ஞைகள் உறுதியாகத் தென்படுவதாகவும் குறுங்கால நிதிவசதிகளை இருபக்க ரீதியிலும் இருதரப்பு அரசாங்கங்களுக்கு இடையிலும் ஏற்பாடு செய்துள்ளதோடு பரிமாற்றுக் கடன் வசதிகளையும் ஏற்படுத்தி செலாவணிப் பற்றாக்குறைக்குத் தீர்வுகாண முயற்சித்துள்ளதாகவும். இலங்கை ஊழியர்களின் பணவனுப்பல்களை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பலனளிக்க ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள மத்தியவங்கி, இலங்கையின் வெளிநாட்டு சொத்து ஒதுக்குகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் பிரகாசமாக உள்ளதாகவும் நம்புகிறது. எனவே அண்மைக்கால அபிவிருத்திகளைக் கருத்திற் கொள்ளாமல் இத்தரமிறக்கல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டுகிறது.

ஆனால் இதற்கு முன்பும் பலதடவைகள் கடன் தரமிடல் நிறுவனங்கள் இலங்கையின் தரமிடலை கீழ் நோக்கி நகர்த்தியபோது இலங்கையின் எதிர்வினைகள் இதேபோலவே இருந்தமையையும் ஆனபோதிலும் குறித்த நிறுவனங்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையும் அவதானிக்கலாம். குறித்த நிறுவனங்கள் தனிப்பட்ட ரீதியில் இலங்கை மீது காழ்ப்புணர்வடைய வாய்ப்பில்லை. S&P நிறுவனத்தின் அறிக்கையை நோக்குமிடத்து வெறுமனே அந்நியச் செலாவணிக் கையிருப்புக்களின் அளவை மாத்திரம் கருத்திற்கொண்டு தரமிடலை மேற்கொண்டதாகத் தெரியவில்லை. முறையான ஆய்வின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாகவே கருதவேண்டியுள்ளது. ஆனால் இலங்கை அரசாங்கம் நேர்க்கணியமான அண்மைக்கால அபிவிருத்திகள் எனக்கருதியவற்றை அந்நிறுவனம் தமது குறிகாட்டிகள் மற்றும் ஆய்வுகளின்படி நம்பத் தகுந்தவையாக கருதாமல் விட்டிருக்க இடமுண்டு. 6 மாதகால பாதை வரைவு மற்றும் 2022 பாதீட்டு முன்மொழிவுகள் குறித்த விமர்சனங்கள் உள்நாட்டிலேயே அதிகளவில் காணப்படும் நிலையில் சர்வதேச கடன் தரமிடல் நிறுவனங்கள் அவற்றின் நடைமுறைக்கிடும் சாத்தியங்களை நிராகரித்திருக்கக் கூடிய வாய்ப்பிருக்கிறது.

இனிவரும் காலப்பகுதிகளில் சர்வதேச தரமிடல் நிறுவனங்களின் அழுத்தங்களைக் கருத்திற் கொள்ளாது முதலீட்டாளர்களை நேரடியாக சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி இலங்கை பற்றிய உண்மை நிலைமையை உணர்த்தி இலங்கைக்குள் அவர்களை வரவழைக்கும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபடவேண்டும் எனவும் மத்தியவங்கி ஆலோசனை கூறியுள்ளது. அப்படியானால் இதுவரை அதிகாரிகள் என்ன பணியினை செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழத்தானே செய்யும்.

அதுமட்டுமன்றி சர்வதேச ரீதியில் இயங்கும் முதலீட்டாளர்கள் ஒரு அரசாங்கத்தின் அதிகாரிகள் கூறுவதை நம்புவார்களா அல்லது சர்வதேச ரீதியில் இயங்கும் கடன் தரமிடல் நிறுவனங்களின் தரமிடல் பெறுபேறுகளை நம்புவார்களா என்பதை பகுத்தறிவான வாசகர்களே தீர்மானித்துக் கொள்ளலாம். எவ்வாறாயினும் மத்தியவங்கி தனது புதுமுயற்சியை மேற்கொண்டு பார்க்கலாம். அது வெற்றிபெறும் பட்சத்தில் இலங்கைக்கு நல்லதுதானே.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: