காசுமில்லை, காகிதமும் இல்லை – இலங்கையில் பத்திரிகைகள் மூடப்படும் அபாயம்

இலங்கையில் பரவிய கோவிட் பெருந்தொற்று காரணமாக, நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள இந்த தருணத்தில் செய்தித் தாள்களை அச்சிடும் கடதாசிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஊடகத் தொழில் நலிவடையும் என்பதையும் கடந்து, தொலைக்காட்சி, இணையதளம் போன்ற வசதிகள் இல்லாத பின் தங்கிய பகுதிகளில் வசிப்பவர்கள் நாட்டு நடப்பு என்ன என்பதை அறிவதற்கான வாய்ப்புகளும் பறிபோகும் என்ற அச்சம் உண்டாகியுள்ளது.

ஆனால், ஊடக நிறுவனங்கள் இத்தகைய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளதை இதுவரை தங்கள் கவனத்துக்குக் கொண்டுவரவில்லை என்று இலங்கை அரசு கூறுகிறது.

கொரோனா தொற்று, உணவுப் பொருள் பற்றாக்குறை, வேலைவாய்ப்பின்மை போன்ற பல்வேறு நெருக்கடிகளை இலங்கை ஒரு சேர சந்தித்து வரும் சூழலில், அவை குறித்த அரசின் அறிவிப்புகள் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த செய்திகள் இலங்கையின் கடைசி கிராமம் வரை சென்று சேர்வதும் இதனால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

அச்சுப் பத்திரிகையை மட்டுமே நம்பி, தகவல் அறிந்துக்கொள்ளும் கொழும்பு – கிரான்பாஸ் பகுதியைச் சேர்ந்த சிவம் சண்முகராஜா பிபிசி தமிழிடம் தமது கவலையைப் பகிர்ந்துகொண்டார்.

”பேப்பரை நாளாந்தம் வாங்குவேன். வீட்டில் இருக்கும் போது, இடைக்கிடை வாசிப்பேன். எங்களுக்கு ஒன்லயின்ல எல்லாம் செய்தி பார்க்க தெரியாது. நாங்க வயசானவங்க தானே! ஒன்லயின்ல பார்க்கக்கூடிய அளவு எமக்கு சரியான தெளிவில்ல. பேப்பர்ல இருந்தா, நேரம் கிடைக்கும் போது, செய்திகள வாசிப்பேன். எங்களுக்கு பேப்பர மாதிரி எப்படியும் வராது. பேப்பர பார்த்து பழகியதால, வேறு ஒன்றுலயும் செய்தி பார்த்த புரியாது” என சிவம் சண்முகராஜா கூறினார்.

இலங்கையில் என்ன நிலைமை?

நாட்டில் காணப்படுகின்ற அந்நியச் செலாவணி பிரச்னை, கடதாசிகளை கொள்வனவு செய்ய முடியாமைக்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது.

அதேவேளை, உலக சந்தையில் பத்திரிகைகளை அச்சிடும் கடதாசிகளுக்கான உற்பத்தி குறைவடைந்துள்ளமையும், பத்திரிகை துறை நெருக்கடிகளை சந்திப்பதற்கான மற்றுமொரு பிரதான காரணமாக உள்ளது.

பத்திரிகைளை அச்சிடும் ஒரு மெட்ரிக் டன் கடதாசி இரண்டு வருடங்களுக்கு முன்னர், 450 அமெரிக்க டாலராக காணப்பட்ட நிலையில், அதே கடதாசி ஒரு மெட்ரிக் டன் தற்போது 850 அமெரிக்க டாலர் வரை அதிகரித்துள்ளதாக பத்திரிகை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

தென் கொரியா, நார்வே, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிலிருந்தே இலங்கைக்கு பத்திரிகைகளை அச்சிடும் கடதாசி இறக்குமதி செய்யப்படுகின்றன.

இதனால், பத்திரிகைகளை அச்சிடுவதற்கான செலவு, பல மடங்காக அதிகரித்துள்ளதாக வீரகேசரி பத்திரிகையின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எம்.செந்தில்நாதன் பிபிசி தமிழுக்கு தெரித்தார்.

மேற்கந்தை நாடுகள், பத்திரிகை அச்சிடும் முறையிலிருந்து இலத்திரனியல் (இணையவழி ஊடகங்கள்) உள்ளிட்ட வேறு புதிய முறைகளை நோக்கி நகர்தல், பத்திரிகைகளை அச்சிடும் கடதாசிகளை கொள்வனவு செய்வதற்கான செலவு இரண்டு மடங்காக அதிகரித்தமை, கடதாசிகளை வேறு நாடுகளிடமிருந்து கொள்வனவு செய்து, அவற்றை கொண்டு வருவதில் காணப்படுகின்ற பிரச்னைகள் மற்றும் அந்நியச் செலாவணி தட்டுப்பாடு ஆகியனவே, இலங்கை பத்திரிகைத் துறை இன்று எதிர்நோக்கியுள்ளதாக பாரிய சவாலான பிரதான விடயங்கள் என அவர் கூறுகின்றார்.

அத்தியாவசிய பொருட்களையே கொண்டு வர சிரமம்

”பத்திரிகைகளுக்காக செலவினங்களின் அடிப்படையில் பத்திரிகைகளை விற்பனை செய்யும் போது, அதற்கான விலையை அதிகரிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. நிறைய இடங்களில் பேப்பர் நிறைய கேட்டிருந்தாலும், கொடுக்க முடியாமல் இருக்கு. அந்நிய செலாவணி பிரச்னையை சமாளிப்பதற்கு இப்படியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி இருக்கு. இந்த பிரச்னை இன்னும் 6 மாத காலத்துக்கு இருக்கும் என நினைக்கின்றோம். இலங்கையில் மருந்து பொருட்களையே கொண்டு வர முடியாத நிலைமை காணப்படுகின்றது. அத்தியாவசிய பொருட்களையே கொண்டு வர சிரமப்படும் போது, பத்திரிகை துறை சிரமமாக தான் இருக்கும்” என எம்.செந்தில்நாதன் தெரிவிக்கின்றார்.

இலங்கையிலுள்ள பத்திரிகை நிறுவனங்கள், 3 மாத காலத்திற்கு தேவையான கடதாசிகளை களஞ்சியப்படுத்திய வைத்திருப்பது வழமையானது.

இலங்கையில் கோவிட் பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், பத்திரிகை அச்சிடும் நடவடிக்கைகள் கைவிடப்பட்டு, இலத்திரனியல் பத்திரிகைகளே வெளியிடப்பட்டன.

நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த காலப் பகுதியில், கடதாசி இறக்குமதியும் செய்யாத நிலையில், பத்திரிகை நிறுவனங்கள் பழைய கடதாசிகளை வைத்தே தற்போது பத்திரிகைகளை அச்சிட்டு வெளியிட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையில், களஞ்சிய சாலையிலுள்ள கடதாசிகள் தொடர்ச்சியாக குறைவடைந்து வருகின்றமையினால், எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்கு அச்சிடக்கூடிய வகையிலான கடதாசிகள் மாத்திரமே எஞ்சியுள்ளன.

பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்கள், தமது பத்திரிகைகளின் பக்கங்களை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன், விலைகளையும் அதிகரிக்க தீர்மானித்துள்ளன.

இதேவேளை, தமது பத்திரிகைக்கு விளம்பரங்கள் குறைவடைந்துள்ளமையினால், பக்கங்களை குறைத்து, பத்திரிகைகளை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக வட மாகாணத்தில் வெளியாகும் உதயம் பத்திரிகையின் உரிமையாளர் ஈ.சரவணபவன், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

”நாங்க முன்னர் ஒரு கிலோகிராம் கடதாசியை 128 ரூபாய்க்கு வாங்கினோம். கடைசியாக கொழும்பில நாங்கள் ஒரு கிலோகிராம் கடதாசியை கிட்டத்தட்ட 300 ரூபாயாக இருந்தது. அவசரகால விதிகள் என்ற நடைமுறைக்குள் பத்திரிகையும் ஒன்று. பத்திரிகைகளுக்கு தேவையான கடதாசிகளை பத்திரிகை நிறுவனங்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு. இந்த அரசாங்கத்திடம் அப்படியானதொரு சிந்தனை இருக்கின்றதா? இல்லையா? என்பதை புரிந்துக் கொள்ள கஷ்டமாக இருக்கு” என அவர் குறிப்பிட்டார்.

யுத்தக் காலத்தில் தாம் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பத்திரிகையை நடத்திச் சென்றதாகவும், அதே நிலைமையை தற்போது தாம் எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறான சவால்கள் வந்தாலும், பத்திரிகைகளை நடத்திச் செல்ல முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

”பத்திரிகை கடதாசிகள் இல்லாத நிலைமையை நாங்கள் முகம் கொடுக்கவில்லை. ஒரு காலத்தில் முகம் கொடுத்தோம். போர் இடம்பெற்ற காலத்தில் இந்த பிரச்னையை எதிர்நோக்கினோம். ஆனால், பத்திரிகையை எப்படியோ நடத்திச் சென்றோம். போர் இடம்பெற்ற காலத்தில் அட்டைகள், பல்வேறு நிறங்களிலான கடதாசிகள் என கிடைக்கும் கடதாசிகளை கொண்டு பத்திரிகைகளை வெளியிட்டோம். அது எல்லாம் வரலாறு” என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை பத்திரிகைத்துறையின் எதிர்காலம்

இலங்கை பத்திரிகைத்துறை தற்சமயம் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்ற நிலையில், தாம் படிப்படியாக இலத்திரனியல் தொழில்நுட்பத்தை நோக்கி நகர ஆரம்பித்து வருவதாக வீரகேசரி பத்திரிகையின் பிரதம செயற்பாட்டு அதிகாரி எம்.செந்தில்நாதன் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, கடதாசி தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில் தமது பத்திரிகை மின்னிதழை நோக்கி நகர எதிர்பார்த்துள்ளதாக தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

‘தொட்டுணர்ந்து வாசித்தல் இல்லாது போகும்”

இதேவேளை, பத்திரிகைகளுக்கு தேவையான கடதாசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் பட்சத்தில், மாற்றுத் திட்டங்களை நோக்கி நகர வேண்டிய நிலைமை ஏற்படும் என தமிழ்மிரர் பத்திரிகையின் ஆசிரியர் அழகன் கனகராஜ் தெரிவிக்கின்றார்.

அவ்வாறு மாற்றுத் திட்டங்களை நோக்கி நகர்ந்தால், ‘தொட்டு, உணர்ந்து, வாசித்தல்” என்ற ஒன்று இல்லாது போகும் என அவர் கூறுகின்றார்.

அரசாங்கத்தின் பதில்

பத்திரிகை நிறுவனங்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்னை குறித்து இன்று வரை தனது கவனத்திற்கு, எந்தவொரு நிறுவனமும் கொண்டு வரவில்லை என ஊடகத்துறை அமைச்சர் டளஸ் அழகபெரும, பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த பிரச்னை தனது கவனத்திற்கு கொண்டு வரப்படும் பட்சத்தில், இது குறித்து தான் நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகிய தரப்பினருடன் கலந்துரையாடல்களை நடத்தி, தீர்வொன்றை பெற்றுக்கொடுப்பதாகவும் அவர் கூறினார். BBC

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: