ஜனாதிபதியின்கொள்கை பிரகடன உரை

2022 இல் உதித்த புத்தாண்டை முன்னிட்டு உங்களுக்கும் நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஜனநாயக ரீதியாக அதியுயர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நீங்கள் பல்வேறு அரசியல் கருத்துக்களினூடாக நாட்டு மக்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக உள்ளீர்கள்.

இதனால் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள நீங்கள் அனைவரும் நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்பு கூற வேண்டிய மிகவும் விசேடமான ஓர் குழுவினராவீர்கள்.

உங்களைப் போன்று ஜனநாயக வழிமுறையினூடாக மக்களின் ஆணையைப் பெற்று ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள நானும் நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் பொறுப்புக் கூற கடமைப்பட்டுள்ளேன். தேர்தலில் எனக்கு வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, வாக்களிக்காத மக்கள் தொடர்பாகவும் பொறுப்பு கூறும் கடமை எனக்கு உள்ளது.

எனவே, பாராளுமன்றத்திலும் அதன் வெளியிலும் ஆளுங்கட்சியும், எதிர்கட்சியும் தனது கடமைப் பொறுப்புக்களை செவ்வனே நிறைவேற்றி, நாடு எதிர்நோக்கியுள்ள சவால்களிலிருந்து வெற்றி பெறுவதற்கு எனக்கு உதவுமாறு நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இன்று உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

கடந்த இரண்டு ஆண்டுகள் பெரும் சவால்களை எதிர்நோக்கிய காலகட்டமாக அமைந்தது. ஒட்டு மொத்தமான உலகையே ஒரேயடியாக தாக்கிய கொவிட் 19 உலகளாவிய தொற்று நோயை எம்மால் எதிர்கொள்ள நேர்ந்தது. இந்த தொற்று நோய் காரணமாக உலகில் அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் அனைத்து நாடுகளும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கினர். சிறிய பொருளாதாரமொன்றைக் கொண்டுள்ள இலங்கையை அது கடுமையாக பாதித்தது. பல தடவைகள் நாட்டை முடக்கும் நிலைக்கு கொண்டு வருவதற்கும் நேர்ந்தது. இதனால் நாட்டின் பொருளாதார செயற்பாடுகளும் பெருமளவில் பாதிக்கப்பட்டன. நாட்டுக்கு அந்நிய செலவாணியை கொண்டு வந்த சுற்றுலாத்துறை, வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் ஆடை தொழில்துறை போன்ற முக்கிய துறைகள் அனைத்தும் இந்த தொற்று நோயினால் பெரும் இடையூறுகளை எதிர்நோக்கின. உலகளாவிய ரீதியிலான இத் தொற்று நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த பல்வேறு சட்டவிதிமுறைகளை அமுல்படுத்த நேர்ந்ததினால் பல தொழில் முயற்சிகள் மற்றும் சுயதொழிலில் ஈடுபடுவோரின் அன்றாட வருமானம் பாதிக்கப்பட்டது. மக்களின் பொதுவான வாழ்க்கையும் பல தடைகளை எதிர்நோக்கியதனால் சமுதாயத்தில் உளரீதியான பாதிப்புகளும் ஏற்பட்டிருந்தன.

கொவிட் 19 உலகளாவிய ரீதியிலான தொற்று நோயிலிருந்து மக்களைப் பாதுகாக்க அரசு பாரிய செலவுகளை மேற்கொண்டது. அடிக்கடி நாடு முடக்கப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் வருமானங்களை இழந்த மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். உலகளாவிய ரீதியிலான இத் தொற்று நோய் காரணமாக வருமானங்களை இழந்த சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் கடன் மீள் செலுத்தலை பிற்போடுவதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். குறைக்கப்பட்ட எந்தவொரு வரியையும் நாங்கள் மீண்டும் அதிகரிக்கவில்லை. அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு எவற்றையும் நாங்கள் குறைக்கவில்லை.

எத்தகைய பொருளாதார நெருக்கடிகள் காணப்பட்டாலும் மக்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை வழங்கி அதற்குத் தேவையான அனைத்து செலவுகளையும் அரசு மேற்கொண்டது. நாடு முழுவதிலும் தனிமைப்படுத்தும் நிலையங்கள் மற்றும் சிகிச்சையளிப்பு நிலையங்கள் தாபிக்கப்பட்டதுடன், வைத்தியசாலைகளுக்குப் புதிதாக 35,000 ற்கும் அதிகமான படுக்கைகளை வழங்கினோம். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் 10,000 ரூபா பெறுமதியான உணவு நிவராண பொதிகளை வழங்கினோம்.

கொவிட் 19 உலகளாவிய ரீதியிலான இத் தொற்றினைக் கட்டுப்படுத்துவதற்கு ஒரே ஒரு வழி தடுப்பு ஊசி வழங்குவதே என்பதை நாம் புரிந்து கொண்டோம். அதன்படி பாரிய செலவுகளை மேற்கொண்டு நாட்டுக்குத் தேவையான தடுப்பூசிகளைப் பெற்று 16 வயதிற்கு மேற்பட்டோருக்கு அந்த தடுப்பூசிகளை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம். தற்போது இந்த உலகளாவிய ரீதியிலான தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தல் தொடர்பாக ஏனைய உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாங்கள் ஒரு திருப்திகரமான நிலையில் உள்ளோம்.

இலக்கு வைக்கப்பட்ட சனத்தொகையில் 85% வீதத்தினருக்கும் அதிகமானோருக்கு இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கி இந்த நோயைக் கட்டுப்படுத்தி மக்களின் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டு வர முடிந்தது. தற்போது அனைத்து மக்களையும் இலக்காகக் கொண்டு மூன்றாவது பூஸ்ட்டர் தடுப்பூசியையும் வழங்கி வருகின்றோம்.

இந்த உயர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மத்தியில் அரசியல் ரீதியிலான பல்வேறு கருத்து வேறுபாடுகள் மற்றும் கொள்கை வேறுபாடுகள் இருக்கின்றது. எனினும், நாங்கள் அனைவரும் நாட்டின் நன்மையையே பிரார்த்திக்கின்றோம். உலகளாவிய தொற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இந்த கடினமான சந்தர்ப்பத்தில் நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்படும் பாரிய பொறுப்பு மக்கள் பிரதிநிதிகளாகிய உங்கள் அனைவருக்கும் உள்ளது. அந்தப் பொறுப்பினை நிறைவேற்ற எம்முடன் இணைந்து செயற்படுமாறு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

குறுகிய கால பிரச்சினைகளை வெற்றிகரமாக எதிர்கொள்வதுடன், எமது அடிப்படை கடமைப் பொறுப்பு எங்களால் நாட்டு மக்களுக்கு முன்வைக்கப்பட்ட பெரும்பாலான மக்களினால் அனுமதிக்கப்பட்ட நீண்டகால அடிப்படையிலான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை இடையறாது முன்னெடுத்தலாகும். இதன் அடிப்படையிலேயே நாட்டின் நிலைபேறான அபிவிருத்தி தங்கியுள்ளது. இதனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது முன்னுரிமை கடமைப் பொறுப்புக்களை மறந்துவிடக் கூடாது.

நாங்கள் ஈராண்டுக்குள் ஒரு குறிப்பிடத்தக்களவிலான வேலைத்திட்டங்களை நிறைவேற்றுவதாக மக்களுக்கு உறுதியளித்து இருந்தோம். எனினும், முதல் ஈராண்டுகளில் உலகளாவிய தொற்று நோயினால் பாரிய இடையூறு ஏற்பட்டது. எனினும் எமது கடமைப் பொறுப்புக்களை நிறைவேற்றுவதை நாங்கள் மறக்கவும் இல்லை, தட்டிக் கழிக்கவும் இல்லை.

2019ஆம் ஆண்டில் நான் ஜனாதிபதியாக நியமிக்கப்படும் போது மக்களுக்கு இருந்த அடிப்படை பிரச்சினை தேசிய பாதுகாப்பு என்பதை பலர் இன்று மறந்து விட்டனர். தற்போது நாங்கள் நாட்டின் பாதுகாப்பினை உறுதிபடுத்தியுள்ளோம். இன்று மக்கள் மத்தியில் பயங்கரவாதம் தொடர்பான அச்சம் கிடையாது.

பாதாள உலகக் கோஷ்டியின் நடவடிக்கைகள் அன்று பாரியளவில் வியாபித்து இருந்தது. சிறைச்சாலை பஸ் வண்டிகள் மீது துப்பாக்கிச் சூடுகளை மேற்கொண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் சிறைக்கைதிகள் கொலை செய்யப்பட்ட ஒரு யுகத்தை நாம் கடந்து வந்துள்ளோம். வீதியில் பயணித்த பொதுமக்கள் பாதாள உலக கோஷ்டியினரின் மோதல்களில் சிக்கி உயிரிழந்த யுகத்தையும் நாம் கடந்து வந்துள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கம் இந்த நிலைமையை மாற்றியமைத்துள்ளது.

போதைப்பொருள் தொல்லை அன்று பாரிய ஒரு பிரச்சினையாக இருந்தது. நாட்டின் இளைஞர்கள் பாரியளவில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமைப்பட்டு இருந்தனர். வெளிநாடுகளுக்கு கூட போதைப்பொருட்களை வழங்கும் கோஷ்டிகள் இலங்கையில் உருவாகி எமது நாடு சர்வதேச போதைப் பொருள் கடத்தல்காரர்களின் கேந்திர நிலையமாக உருவாக்கப்பட்டிருந்தது. இதனை உடனடியாக கட்டுப்படுத்துவதற்காக நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நடவடிக்கை எடுத்தோம். எமது பாதுகாப்பு படையினர், புலனாய்வுப் பிரிவினர் துல்லியமாக செயற்பட்டு இந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். போதைப்பொருள் தொல்லையை முற்றாக ஒழிப்பதற்கு நாங்கள் ஆரம்பித்த வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம். அயல்நாடுகளின் புலனாய்வு துறையினரும் எமக்குத் தேவையான தகவல்களை வழங்கி வருகின்றனர். 

மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பொலிசாருக்கு பாரிய பொறுப்புள்ளது. மக்களுக்கு அச்சம், பீதி இல்லாமல் வாழக்கூடிய சூழலை உறுதிப்படுத்துவதற்கு பொலிசார் தொடர்ச்சியாக மக்களது பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புடன் இருத்தல் வேண்டும். இதற்காக நாங்கள் பொலிஸ் துறையில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டுள்ளோம்.

எந்தவொரு பகுதியில் வாழும் மக்களுக்கும் பொலிஸ் நிலையங்களிலிருந்து சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வகையில் நாடு முழுவதிலும் சுமார் நூற்றிற்கும் அதிகமான பொலிஸ் நிலையங்களை நாங்கள் புதிதாக நிறுவியுள்ளோம். அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தேவையான வாகன வசதிகளையும் வழங்கியுள்ளோம். அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்துள்ளதுடன், பயிற்சிகள், செயலமர்வுகள் மூலம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மத்தியில் அறிவு மற்றும் சிந்தனை ரீதியிலான மாற்றங்களைச் செய்துள்ளோம்.

செயலிழந்த நிலையில் காணப்பட்ட சூழல் பாதுகாப்பு பொலிஸ் பிரிவினை நாங்கள் மீண்டும் வழுவடையச் செய்துள்ளோம். பொதுமக்களுக்கும் பொலிசாருக்குமிடையேயான தொடர்புகளை மேலும் பலப்படுத்தும் வகையில் மக்கள் பாதுகாப்பு கடமைகளில் பொதுமக்களின் பங்களிப்பினையும் பெற்றுக்கொள்ளக் கூடிய வகையில் சமுதாய பொலிஸ் இராஜாங்க அமைச்சினையும் தாபித்துள்ளோம்.

நாங்கள் சர்வதேச சட்டதிட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகள் என்பவற்றை மதிக்கும் ஓர் நாடாக விளங்குகின்றோம். கடந்த காலங்களில் எமது நாட்டில் மனித உரிமைகள் தொடர்பாக சர்வதேச ரீதியில் எடுத்துச் செல்லப்பட்ட தவறான கருத்துக்களை சீர்செய்யும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. எனது ஆட்சிக் காலத்தில் எந்தவொரு விதத்திலும் மனித உரிமை மீறல்களுக்கு எமது அரசு உடந்தையாகவிருக்கவில்லை. அதேபோன்று எதிர்காலத்திலும் அவ்வாறான நிலைமைகள் ஏற்பட இடமளிக்கப் போவதில்லை. அவ்வாறான செயற்பாடுகளை நாங்கள் அங்கீகரிப்பதும் இல்லை.

கடந்த 30 ஆண்டுகளில் நாட்டில் வாழும் அனைத்துச் சமூகங்களும் பயங்கரவாதம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன. 2009ஆம் ஆண்டு பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு, நாட்டில் மீண்டும் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளது. இருள் சூழ்ந்த கடந்த கால ஞாபகங்களை ஒருபுறம் வைத்து அனைத்து சமூகங்களும் சமாதானத்துடனும், சகவாழ்வுடனும் வாழக்கூடிய பாதுகாப்பான நாடொன்றை உருவாக்குவது எமது நோக்கமாகும். இதற்காக அனைவரும் இன, மத, அரசியல் வேறுபாடுகளின்றி ஒன்றிணைதல் வேண்டும்.

யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் பாரிய முதலீடுகளைச் செய்துள்ளோம்.

யுத்தம் நிலவிய காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினரின் பயன்பாட்டிற்காக கையேற்கப்பட்டிருந்த காணிகளில் 90% வீதமானவற்றை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை நான் பாதுகாப்புச் செயலாளராக இருந்தபோது ஆரம்பித்திருந்தேன். அந்த பிரதேசங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி அமைதியான சூழலொன்றை ஏற்படுத்த எம்மால் முடிந்துள்ளதனால் எதிர்வரும் நாட்களில் மீதியாகவுள்ள காணிகளையும் விடுவிக்க எங்களுக்கு இயலும்.

யுத்தத்தினால் காணாமற் போனவர்கள் தொடர்பான பிரச்சினை ஒரு தரப்பினருக்கு மாத்திரம் பொதுவானதல்ல. அனைவருக்கும் எம்மால் முடிந்தளவில் நீதி, நியாயம் வழங்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.

நாங்கள் இனவாதத்தை நிராகரிக்கின்றோம். நாட்டில் வாழும் அனைத்து பிரசைகளும் கௌரவத்துடன் வாழ்வதற்கும் அவர்களது அனைத்து உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இதனால் குறுகிய அரசியல் நோக்கங்கள் அடிப்படையில் மக்களை ஒருவர் மீது ஒருவரை ஏவி விடுவதை தற்போதாவது நிறுத்துமாறு, அவ்வாறான அரசியல்வாதிகளிடம் வேண்டுகோள் விடுகின்றோம்.

நீண்டகாலமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த எல்.ரீ.ரீ.ஈ செயற்பாட்டாளர் சிலருக்கு மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்ய நான் கடந்த நாட்களில் நடவடிக்கை எடுத்திருந்தேன். அதேபோன்று 1978ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத்தைத் தடுக்கும் வகையில் அதற்கான திருத்தங்களை கொண்டு வர நாங்கள் தயாராகவிருக்கின்றோம்.

நாட்டின் இறைமை, தேசிய பாதுகாப்பு என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை சர்வதேச சமூகத்தினரால் முன்வைக்கப்பட்டுள்ள அவதானிப்புகள் தொடர்பாக நியாயமான பிரதிபலிப்புகளை முன்வைப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

நாங்கள் சுதந்திரமான தன்னாதிக்கமுள்ள ஓர் நாடாகும். வல்லரசுகளுக்கிடையிலான மோதல்களில் சிக்குவதற்கு எமக்கு எத்தகைய தேவையும் கிடையாது. நாங்கள் எமது அயலவர்களை கௌரவிப்பதுடன், அனைத்து நாடுகளுடனும் நட்புறவைப் பேணுவது எமது கொள்கையாகும்.

யுத்தத்தினால் நீண்டகாலம் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொருளாதார பாதுகாப்பே முக்கிய தேவையாகவுள்ளது. சிறுவர்களுக்கு சிறந்த கல்வி, இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்புகள், சுய தொழில்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்புக்கள், மக்களுக்கு சுத்தமான குடிநீர், விவசாய நடவடிக்கைகளுக்கான நீர்ப்பாசன வசதிகள், வாழ்வதற்குத் தேவையான வீடுகள், வைத்தியசாலைகள், நெடுஞ்சாலைகள் உட்பட மேலும் பல அடிப்படை வசதிகள் அவர்களுக்குத் தேவையாகவிருந்தது. அனைத்து சமூகத்தினருக்கும் எத்தகைய பராபட்சமுமின்றி தேவையான அனைத்து வசதிகளையும் வழங்குவது நல்லிணக்கத்திற்கு அடிப்படையாக அமையும் என்பது அரசின் கொள்கையாகும்.

இதனால் இந்தப் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் உள்ள மக்களின் பிரதிநிதிகளிடம் நான் ஓர் வேண்டுகோளை விடுகின்றேன். பல்வேறுபட்ட அரசியல் கருத்து வேறுபாடுகளை தற்காலிகமாக ஒருபுறம் வைத்து உங்கள் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு நீங்கள் உங்களது ஆதரவினை வழங்க வேண்டும்.

ஜனநாயகத்தைப் பலப்படுத்துவதற்காக சட்டத்தின் ஆதிக்கமும் வெளிப்படைத் தன்மையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது எனது கடும் நம்பிக்கையாகும். சட்டத்தின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக நீதிமன்றங்கள் சுயாதீனமாக இயங்குவதை நாங்கள் பலப்படுத்தல் வேண்டும். நான் ஜனாதிபதியானதன் பின்னர் நீதித்துறையிலும், சட்டமாஅதிபர் திணைக்களத்திலும் இடம்பெறும் நியமனங்கள் தொடர்பாக எத்தகைய அரசியல் தலையீடுகளையும் மேற்கொள்ளவில்லை. நீதிமன்றத்துறையில் அனைத்து உத்தியோகத்தர்களும் திறமை மற்றும் சேவைமுதிர்வு அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இது தொடர்பாக எனது அரசு தனது அர்ப்பணிப்பை நடைமுறைப்படுத்தியுள்ளதை இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

அனைவருக்கும் நீதி, நியாயம் வழங்கக் கூடிய மக்களுக்கு சுமையில்லாத ஒரு செயற்றிறன்மிக்க நீதித்துறை ஒன்று நாட்டுக்கு தேவைப்படுகின்றது. எனினும் தற்போது நீதித்துறையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றது. அரசியல் யாப்பில் இரண்டு மாதங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் தொடர்பாக பல மனுக்கள் கூட சில சந்தர்ப்பங்களில் பத்து வருடங்களுக்குள்ளாவது விசாரித்து நிறைவு செய்யப்படாத சந்தர்ப்பங்கள் உள்ளன. சிறுவர்கள் மீது குற்றம் இழைப்பவர்களுக்கு தண்டனை வழங்க பல வருடங்கள் எடுக்கின்றன. காணிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் பெரும்பாலும் ஒரு பரம்பரையை தாண்டிச் செல்லும் நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறான பின்னணியில் சட்டம் மற்றும் அதன் நடைமுறை தொடர்பாக மக்கள் மத்தியில்  நம்பிக்கையீனம் ஏற்பட்டிருப்பது ஓர் ஆச்சரியமான விடயமல்ல.

சட்டத்தின் தாமதம் காரணமாக பல இன்னல்களை அனுபவிக்கும் மக்களுக்கு தீர்வுகளை வழங்குவதோடு, முதலீட்டு கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைப்பதற்குத் தேவையான சட்டரீதியான மறுசீரமைப்புக்களை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையை பல அரசுகள் உணர்ந்திருந்த போதிலும் அவை தொடர்பான சட்ட மறுசீரமைப்புகளை மேற்கொள்ள முன்னர் ஆட்சியில் இருந்த பல அரசாங்கங்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: