பிரியந்த குமார கொலை − முதல் குற்றவாளிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை

பாகிஸ்தான் சியல்கோர்ட் பகுதியில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமார தியவடனவின் கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு, அந்த நாட்டு பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனையை வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் செய்தி நிறுவனமாக த நேசன் செய்தி வெளியிட்டுள்ளது.

பிரியந்த குமார தியவடனவின் கொலையுடன் தொடர்புடைய வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி, கொலையை நியாயப்படுத்தி ஒருவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 10,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

சியல்கோர்ட் பகுதியில் கடந்த டிசம்பர் மாதம் 3ம் தேதி பிரியந்த குமார தியவடன, நூற்றுக்கணக்கானோரினால் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.

மத நிந்தனையில் ஈடுபட்டார் என கூறியே, நூற்றுக்கணக்கானோர் இவரை அடித்து கொலை செய்து, பின்னர் உடலுக்கு தீ வைத்திருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 130திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ், வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதன்படி, கொலையை நியாயப்படுத்தும் வகையில், சமூக வலைத்தளங்களில் வீடியோவை பதிவேற்றிய நபர், தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இதையடுத்தே, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதேவேளை, பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட 34 பேரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பிரியந்த குமார தியவடனவின் குடும்பத்திற்கு பாகிஸ்தான் அரசாங்கம் ஒரு லட்சம் அமெரிக்க டொலரை வழங்கியதுடன், பிரியந்த குமாரவின் ஒரு மாத சம்பளமான 1667 டொலர் தொகையையும் மனைவியின் வங்கி கணக்குக்கு அண்மையில் வைப்பிலிட்டிருந்தது. BBC

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: