ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியில் இலங்கைக்கு 37 புள்ளி

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) சர்வதேச நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியானது (CPI) (CORRUPTION PERCEPTIONS INDEX) இன்று வெளியிடப்பட்டது. CPI ஆனது, உலகெங்கிலுமுள்ள 180 நாடுகள் மற்றும் ஆட்சி எல்லைக்குள் இடம்பெறுகின்ற பொதுத் துறை ஊழல்களின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படுகின்றது.

இங்கு வழங்கப்பட்ட புள்ளிகளானது நிபுணர்களின் கருத்துக்களையும் வர்த்தக சமூகத்தினரின் கருத்துக் கணிப்புக்களையும் பிரதிபலிக்கிறது. உலக வங்கி, உலகப் பொருளாதார மன்றம் (WEF), தனியார் இடர் மற்றும் ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், சிந்தனைக் குழுக்கள் உட்பட 13 வெளிவாரியான தரவுகளை பயன்படுத்தியே CPI மதிப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. CPI மதிப்பாய்வானது அதன் புள்ளி வழங்கும் முறையினை 0 தொடக்கம் 100 வரை வடிவமைத்துள்ளது. 100 புள்ளிகள் என்பது ஊழலற்ற தூய்மையான நிலையினையும் 0 புள்ளி என்பது கூடிய ஊழல் நிலையினையும் குறிப்பிடுகிறது.

2021 ஆம் ஆண்டிற்கான CPI மதிப்பாய்வில் இலங்கைக்கு 37 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. இது முன்னைய ஆண்டினை விட ஒரு புள்ளி குறைவானதாகும் (38). அதனடிப்படையில் தரவரிசையில் 2020 ஆம் ஆண்டு 94 ஆம் இடத்திலிருந்த இலங்கை 2021 ஆம் ஆண்டு 102 ஆம் நிலைக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இலங்கையின் CPI மதிப்பாய்வானது

ஒப்பீட்டளவில் ஒரே மாதிரியாகவே காணப்படுகிறது. 2016 ஆம் ஆண்டு பதிவாகிய 36 புள்ளிகள் குறைந்த மதிப்பீடாகவும் 2012 ஆம் ஆண்டு பதிவாகிய 40 புள்ளிகள் இலங்கையின் அதிகபட்ச புள்ளியாகவும் விளங்குகிறது.

ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியில் பொதுத்துறை ஊழல் வகைகளாக இலஞ்சம், பொது நிதியின் தவறான பயன்பாடு, ஊழல் தொடர்பிலான வழக்குகளை திறம்பட விசாரணை செய்யும் தன்மை, போதுமான சட்ட கட்டமைப்புக்கள், தகவல் அணுகுவதற்கான வாய்ப்பு மற்றும் முறைகேடுகளை வெளிப்படுத்துவோர், ஊடகவியலாளர்கள் மற்றும் புலனாய்வாளர்களுக்கான சட்டப் பாதுகாப்புகளின் தன்மை என்பனவே உள்ளடக்கியுள்ளது.

இலங்கையின் ஊழலுக்கெதிரான ஒட்டுமொத்த செயற்பாடுகளும் ஸ்தம்பித நிலையிலேயே காணப்படுவதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் 86 சதவீதமான உலக நாடுகளில் ஊழலுக்கெதிராக எந்த முன்னேற்றமும் அடையப்படாத நிலைமையே காணப்படுவதாக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் குறிப்பிடுகிறது.

சுதந்திரத்தினை கட்டுப்படுத்தல் மற்றும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டிலிருந்து விலகுதல் போன்ற அடிப்படை விடயங்களிலிருந்து விடுபட உலகளாவிய கோவிட்-19 தொற்றுப்பரவலை உலகிலுள்ள பல நாடுகள் தமக்கு சாதகமாக பயன்படுத்துகிறது என ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் நிறுவனம் குறிப்பிடுகிறது. அது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், அநாமதேயமான ஷெல் நிறுவனங்களின் (Shell) துஷ்பிரயோகங்களை தடுப்பதற்காக சர்வதேசத்தின் வேகம் அதிகரித்துள்ள போதிலும் ஒப்பீட்டளவில் “தூய்மையான” பொதுத் துறைகளைக் கொண்ட அதிகப்படியான புள்ளிகளை பெற்ற பல நாடுகள் கடல்கடந்த ஊழல்களை தொடர்ந்தும் செயற்படுத்துகின்றன.

CPI மதிப்பாய்வில் அதிக மற்றும் குறைந்த புள்ளிகளை பெற்ற நாடுகளின் வரிசை, டென்மார்க் (88), பின்லாந்து (88), நியூசிலாந்து (88) அதேபோல் சோமாலியா (13) தென் சூடான் (11).

ஊழல், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஜனநாயக வீழ்ச்சி போன்றவற்றின் தொடர் சுழற்சியை எதிர்த்துப் போராடுவதற்காக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் சர்வதேச நிறுவனம் பின்வரும் பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு வழங்குகிறது:

பொறுப்புகூறலிற்கு தேவையான அதிகாரத்தினை வைத்திருக்க தேவையான உரிமைகளை உறுதிப்படுத்தல்

அதிகாரத்தின் மீதான நிறுவன கட்டுப்பாடுகளை மீட்டெடுத்து வலுப்படுத்தல்

எல்லைகடந்த ஊழல் வடிவங்களை எதிர்த்துப் போராடுதல்

அரச செலவீனங்களில் தகவல் அறியும் உரிமையினை உறுதிப்படுத்துதல்

* ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனமானது ஊழலுக்கு எதிராகவும் நல்லாட்சியை மேம்படுத்துவதன் மூலம் ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்ப சர்வதேச ரீதியாக செயற்படும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) சர்வதேச நிறுவனத்தின் உள்நாட்டு அமைப்பாகும். அதேவேளை மேற்குறிப்பிட்டவாறு இவ் CPI வருடாந்த ஆய்வுக்காக ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) நிறுவனத்தினால் இலங்கை தொடர்பிலான தரவுகள் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனத்திற்கு வெளியே பெறப்பட்டவையாகும்.


Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: