உக்ரேனை ரஷ்யா ஆக்கிரமித்தால் புதின் மீது தனிப்பட்ட பொருளாதார தடை- அமெரிக்கா

உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தால் விளாதிமிர் புதின் மீது தனிப்பட்ட தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யாவிற்கு தென்மேற்கு எல்லையில் அமர்ந்திருக்கும் உக்ரைன் நாட்டின் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்தால், அது உலகிற்கு “மிக மோசமான விளைவுகளை” ஏற்படுத்தும் என்று ஜோ பைடன் கூறினார்.

மேற்கத்திய தலைவர்கள் சிலர் கூறும்போது, ரஷ்யா உக்ரேன் மீது படையெடுப்பு நடத்தினால் அதற்கான தக்க பதிலடி கொடுப்போம் என்றும் அது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையிலேயே ஜோ பைடன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவும் மற்ற நாடுகளும் “பதற்றங்களை அதிகரித்து வருவதாக” ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. மேலும், உக்ரேனுக்குள் நுழைய திட்டமிடுவதாக கூறுவதை மறுக்கிறது. ஆனால் ரஷ்யா 100,000 வீரர்களை எல்லைக்கு அருகாமையில் நிறுத்தியுள்ளது.

இது சம்பந்தமாக ரஷ்ய அதிபர் மாளிகை கூறுகையில், மேற்கத்திய இராணுவக் கூட்டணியான நேட்டோவை, பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக கருதுகிறோம். மேலும், இனிவரும் காலங்களில் உக்ரேன் உட்பட மற்ற கிழக்கு நாடுகளும் நேட்டோவுடன் இணையக் கூடாது என்று வேண்டுகிறோம் என்று கூறியுள்ளது .

இந்த விவகாரத்தில் அமெரிக்கா, நேட்டோவை விரிவுபடுத்துவது தற்போது உள்ள பிரச்னை அல்ல என்றும், ரஷ்ய ஆக்கிரமிப்பு தான் இப்பொழுதுள்ள பிரச்னை என்றும் கூறியுள்ளது.

ரஷ்ய படையெடுப்பு அச்சுறுத்தலால் உக்ரேன் தலைநகர் கிவ்வில் உள்ள மேற்கத்திய தூதரகங்கள் தங்கள் பணியாளர்களைத் திரும்ப வரச்செய்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: