காயங்களை குணப்படுத்தி முன்னேறி செல்வதிலேயே கவனம் செலுத்த வேண்டும் – அலிசப்ரி
கே: நீதிக்கான அணுகல் திட்டம் மற்றும் அதன் நோக்கங்கள் எவை?
பதில்: நீதி அமைச்சு வழங்கும் சேவைகள் குறித்து நாடு முழுவதிலும் உள்ள மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஊட்டுவதே நீதிக்கான அணுகல் என்ற திட்டத்தின் பிரதான நோக்கமாகும். எமது அமைச்சின் சேவைகள் மக்களைச் சென்றடைவதையும், பிரச்சினைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன் மூலம், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைவார்கள். அமைச்சின் அதிகாரிகள் கொழும்பில் இருந்து பிரச்சினைகளை தீர்க்க முயற்சிப்பதை விட, அந்தந்த இடங்களுக்குச் சென்று உண்மையான நிலைமையை புரிந்து கொள்வார்கள். எனவே, மக்களைச் சென்றடைந்து, அவர்களின் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதே நோக்கமாகும்.
கே: இத்திட்டத்தின் கீழ் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன?
பதில்: இதில் பல செயற்பாடுகள் உள்ளடங்குகின்றன. நீதி அமைச்சின் கீழ் நீதிமன்றங்கள், சட்ட உதவி ஆணைக்குழு போன்ற பிரிவுகள் காணப்படுகின்றன. இவை அப்பகுதிக்குச் சென்று மக்களுக்கு சட்ட உதவி வழங்குகின்றன. எங்களிடம் ONUR (தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம்) உள்ளது. இது மக்களிடையேயான ஒற்றுமை மற்றும் காலாசாரங்களை உருவாக்குவதை நோக்காகக் கொண்டுள்ளது. இழப்பீடுகளுக்கான அலுவலகம் என்பது மக்கள் தங்கள் வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கு இழப்பீடு அல்லது இழப்பீடு வழங்கும் மற்றொரு முறையாகும். உதாரணமாக அண்மையில் எனது யாழ்ப்பாண விஜயத்தின் போது சுமார் 1000 பேருக்கு தலா 100,000 ரூபா வீதம் 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது. காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஆலோசனை வழங்கி அவர்களின் தேவைகளைக் கண்டறியும். இத்திட்டத்தின் கீழ் அனைத்து நிறுவனங்களாலும் முன்னெடுக்கப்படும் சேவைகள் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படும்.
கே: நீங்கள் அண்மையில் அங்குரார்ப்பணம் செய்த இத்திட்டத்தின் கீழ் வடக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்களின் நோக்கங்கள் யாவை?
பதில்: சிவில் கலவரம் மற்றும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதே இழப்பீடுகள் குறித்த அலுவலகத்தின் நோக்கமாகும். இந்தக் காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் ஏராளமான குடும்பங்கள் இடம்பெயர்ந்ததை நாம் அறிவோம். அவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஆதரவளிப்பது நமது பொறுப்பு. அதைத்தான் நீண்ட நாட்களாக செய்து வருகிறோம். ஆனால் இம்முறை, அந்த ஆதரவிற்கு தகுதியான சுமார் 1,000 குடும்பங்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு இழப்பீடுகளை வழங்கினோம். மொத்தமாக 100 மில்லியன் ரூபாவுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
கே: உள்நாட்டுப் பொறிமுறையின் கீழ் நல்லிணக்கப் பணியின் மற்ற சிறப்பம்சங்கள் எவை?
பதில்: தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. உதாரணமாக, கொக்குவில் இந்துக் கல்லூரியில் 12 ஸ்மார்ட் வகுப்பறைகளுடன் கூடிய மூன்று மாடிக் கட்டடத்தை நிர்மாணித்தோம். 2018 ஆம் ஆண்டில் இந்தப் பாடசாலையைச் சேர்ந்த சுமார் 70 மாணவர்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ காலிக்குச் சென்றிருந்தனர். எனவே, அவர்களை அங்கீகரித்து வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையில் பாலங்கள் அமைக்க உதவிகளை வழங்க விரும்புகின்றோம். புனர்வாழ்வுத் திட்டம் மற்றும் அவர்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக புனர்வாழ்வளிக்கப்பட்ட சுமார் 50 முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடனான சந்திப்பும் ஏற்பாடு செய்யப்பட்டது.
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களுடன் நல்லிணக்கத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து அவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக நாங்கள் கலந்துரையாடினோம். காணாமற் போனோர் தொடர்பில் சுமார் 400 விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவுகின்றோம். குழந்தைகளை இழந்த பல பெற்றோர்களிடம் பேசும் வாய்ப்பு எனக்குத் தனிப்பட்ட முறையில் கிடைத்தது, அவர்களுக்கு நாம் எப்படி உதவலாம் என்பதை அறிய விரும்பினேன். எனவே, உண்மையான பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு மக்களுக்கு உதவவும், பாலங்களைக் கட்டவும் இது ஒரு நல்ல திட்டமாக இருந்தது.
கே: மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஜெனீவா அமர்வுக்கு அரசாங்கம் எவ்வாறு தயாராகி வருகின்றது? இது விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
பதில்: பயங்கரவாத யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதன் ஊடாக பாரிய பிரச்சினையை நாம் தீர்த்து விட்டோம். தற்பொழுது காயங்களை ஆற்றிக் கொண்டு எவ்வாறு முன்னேறிச் செல்வது என்பதே கவனம் செலுத்த வேண்டியதாகும். உள்நாட்டு பொறிமுறைகள் உரிய முறையில் செயற்படுகின்றன என்பதே எங்கள் நிலைப்பாடு, மூன்றாவது தரப்பினராக சர்வதேச சமூகம் தலையிடுவதை விட காயங்களை ஆற்றுவதற்கே இது பயன்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் இது உண்மையான நல்லிணக்கத்தை எதிர்மறையாக பாதிக்கும் என்பதுடன் காயங்கள் ஆற்றப்படுவதற்குப் பதிலாக நிலைமையை மோசமாக்கும். எனவே, நாம் உண்மையைச் சொல்வோம். உதாரணமாக வடக்கு, கிழக்கில் பிரச்சினைகள் இருந்தன, அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள நிறுவனங்கள் நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கி முன்னோக்கி நகர்ந்து வருகின்றன. எனவே, நாம் நமது முன்னேற்றத்தை உலகிற்குக் காட்ட விரும்புகிறோம். மேலும் இந்த மாற்றங்களை அங்கீகரிக்கும்படி அவர்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.
உதாரணமாக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருகிறோம். நல்லாட்சி அரசாங்கத்தினால் அதனைச் செய்ய முடியவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், பலர் மன்னிக்கப்பட்டனர். ஆக மொத்தத்தில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம்.
கே: இலங்கையின் நீதிக் கட்டமைப்பை மேம்படுத்த எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?
பதில்: நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். உதாரணமாக, எனது வடக்கிற்கான விஜயத்தின் போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மாங்குளம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய நான்கு பிரதான நீதிமன்ற வளாகங்களை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தோம். அதேபோன்று, உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், பழைய சட்டங்களை மாற்றுதல், சட்டமா அதிபர் திணைக்களம் போன்ற இடங்களுக்கு அதிகளவிலான ஆட்களை நியமித்தல் போன்ற நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளோம். நீதித் துறையை டிஜிட்டல் மயப்படுத்தி வருகின்றோம். மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் ஏனைய நீதிமன்றங்களில் இலங்கையின் நீதித்துறை அமைப்பை மாற்றியமைக்க முயற்சிக்கிறோம்.
கே: குறிப்பாக புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பான முக்கிய சட்டச் சீர்திருத்தங்கள் எவை?
பதில்: உண்மையில், அரசியலமைப்புக்கான வரைவு தயாரிக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும். சிறப்பாகச் செயற்படக் கூடிய வலுவான அரசியலமைப்பையே எதிர்பார்க்கின்றோம் தேர்தல் சீர்திருத்தங்களுடன் ஒரு தனியான தேர்தல் முறை அவசியமாகிறது.
கே: தொழிலாளர் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவது பற்றிய உங்கள் சமீபத்திய அறிக்கை விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
பதில்: இல்லை, நாங்கள் அப்படிச் சொல்லவில்லை. இது தவறாக சித்திரிக்கப்பட்டுள்ளது.
கருத்துச் சுதந்திரத்தை யாரும் தடை செய்ய விரும்பவில்லை. ஆனால் உலகின் பிற பகுதிகளில், அத்தியாவசிய சேவைத் துறையில் திடீர் மற்றும் தற்காலிக வேலைநிறுத்த நடவடிக்கைக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. இது அரசாங்கத்தைப் பற்றியது அல்ல, பொதுமக்களைப் பற்றியதாகும். இதனால் மக்கள் மக்கள் அவதிப்படுகின்றனர். பொதுப் போக்குவரத்து, மின்சாரம், நீர், ஆற்றல் மற்றும் துறைமுகம் ஆகியவை பொருளாதாரத்தின் நரம்பு மையங்கள். எந்தவித அறிவிப்பும் இன்றி திடீரென வேலைநிறுத்தம் செய்வதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.
பல நாடுகளில் அதற்கான பாதுகாப்பு பல்வேறு நிலைகளில் உள்ளது. சில நாடுகள் வேலைநிறுத்தங்களை முற்றிலுமாக தடை செய்கின்றன. மற்ற நாடுகளில், தொழிலாளர் நடவடிக்கைக்கு முன்னர் முழு உறுப்பினர்களும் ஆலோசிக்கப்பட வேண்டும் மற்றும் பெரும்பான்மையானவர்கள் அதற்கு வாக்களிக்க வேண்டும். பின்னர் தொழிற்சங்கம் 14 நாட்களுக்குள் அறிவிப்பை வழங்க வேண்டும். அதனால் அதை வரிசைப்படுத்த அரசுக்கு அவகாசம் உள்ளது. அத்தியாவசிய சேவை வேலைநிறுத்தங்களுக்குச் செல்வதற்கு முன் சில நாடுகளில் சிறப்பு நீதிமன்றம் உள்ளது.
அது அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதைக் கண்டறிய அவர்கள் மதிப்பீடு செய்வார்கள். மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கும் தொழிலாளர்களின் உரிமைக்கும் இடையே ஒருவித சமநிலை இருக்க வேண்டும். நியாயமற்ற வேலைநிறுத்தங்களைக் கண்டதும் எனது கருத்தைக் கூறியிருந்தேன். அண்மையில் குருநாகல் வீதியில் வைத்தியர் ஒருவருக்கும் மற்றொருவருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனை முழுவதும் வேலைநிறுத்தம் செய்யப்பட்டது. சில வாரங்களுக்கு முன்னர், கொழும்பில் இருந்து பதுளைக்கு சுமார் 300 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்தது. சுற்றுலா பயணிகளை கொழும்பில் இருந்து பஸ்கள் மூலம் பதுளைக்கு அனுப்ப வேண்டியிருந்தது.
சுற்றுலாப் பயணிகள் எங்கள் நாட்டிற்கு திரும்பி வர மாட்டார்கள் என்று கூறினர். எனவே, இது நமது பொருளாதாரத்தையும், நாடு தொடர்பான பிம்பத்தையும் பாதிக்கும். தொழிலாளர்களின் நியாயமான குறைகள் கவனிக்கப்பட வேண்டியிருந்தாலும், அவை பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் இருப்பதற்கு அனுமதிக்க முடியாது. எனவே, மற்ற நாடுகளைப் போலவே, இந்தச் சட்டங்களும் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.
நம் நாட்டில் உள்ள சவால்கள் மற்றும் பொருளாதார தடைகளை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். தொழிற்சங்கங்கள், அரசு, அரசு ஊழியர்கள் மற்றும் அனைவரும் எங்கள் மீட்புக்கு ஒத்துழைக்க வேண்டும். தினகரன்