நாட்டின் பொருளாதார பிரச்சினையை எம்பிக்களும், மக்களும் சரியாக புரிந்து கொள்ளவில்லை – அலி சப்ரி

நாட்டு மக்களோ அல்லது தற்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 பாராளுமன்ற உறுப்பினர்களோ நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியின் அளவை இன்னும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லையென நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். தற்போது பற்றாக்குறையாக காணப்படும் அத்தியாவசியப் பொருட்கள் எதிர்காலத்தில் நாட்டுக்கு முற்றாக இழக்கப்படும் என்றும் நாட்டில் தற்போது பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாக இருப்பதாக நிதி அமைச்சர் அலி சப்ரி எச்சரித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று விசேட உரையொன்றை ஆற்றிய போதே நிதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பாராளுமன்றத்திலும் ஒட்டுமொத்த சமூகத்திலும் பல விவாதங்களும் விமர்சனங்களும் இடம்பெற்று வருவதாக தெரிவித்த அவர், தற்போது பற்றாக்குறையாக காணப்படும் இந்த அத்தியாவசியப் பொருட்கள் எதிர்வரும் காலங்களில் நாட்டுக்கு முற்றாக இழக்கப்படுமென அவர் எச்சரித்தார்.

தற்போது இலங்கை எதிர்கொள்ளும் ஒட்டுமொத்த பொருளாதார நெருக்கடி மிகவும் பாரதூரமானதும் ஆழமானதுமாகும். சுதந்திரத்திற்குப் பின்னரான மிக மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்கொண்டுள்ளது. இந்த அச்சுறுத்தலிலிருந்து விடுபட அனைவருக்கும் தேசியபொறுப்புள்ளது எனவும் தெரிவித்த அவர், நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள வரிக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பது கேள்விக்குறியெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஓரிரு மாதங்களில் தீர்க்க முடியுமா என்று தெரியவில்லை . கடந்த காலங்களில் வரிகள் அதிகரிக்கப்பட வேண்டிய காலப்பகுதியில் அரசாங்கம் வரிகளை குறைத்தது. அதன் பலனை இன்று நாம் அனுபவிக்க வேண்டியுள்ளது.சுற்றுலாத்துறையின் சரிவு, எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணிகள் வெளிநாட்டு கையிருப்பு இழப்புக்கு பங்களித்தன. வரி குறைப்பு, பொருத்தமான நேரத்தில் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லாமை மற்றும் கடன் மறுசீரமைப்பில் தாமதம் என்பனவே இதற்கு காரணமென அவர் கூறியுனார்.

எனவே தற்போதைய நெருக்கடியை இரண்டு ஆண்டுகளில் தீர்ப்பதா அல்லது 05 முதல் 10 ஆண்டுகள் வரை இழுத்தடிப்பதா என்பதை அரசியல்வாதிகளே முடிவு செய்ய வேண்டுமென அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நாட்டின் பொருளாதார நிலை குறித்து உரையாற்றிய நிதியமைச்சர் அலி சப்ரி, கடந்த ஆண்டின் செலவினம் வருமானத்தை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் குறிப்பிட்டார். 2021 ஆம் ஆண்டின் மொத்த வருவாய் 1,464 பில்லியன் என்றும் செலவு 3,522 பில்லியன் ரூபாய் எனவும் அவர் தெரிவித்தார்.

 லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: