மக்கள் வங்கி தொடர்பான கோப் குழு அறிக்கை

தனியார் நிறுவனங்கள் பலவற்றுக்குப் பெற்றுக்கொடுக்கப்பட்டு தற்பொழுது செயற்படாத கடன்களாகவுள்ள 54 பில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்ட நிறுவனங்கள், அவை மதிப்பிடப்பட்ட விதம் மற்றும் இவற்றை அனுமதிப்பதற்கு தொடர்புபட்ட அதிகாரிகள் உள்ளிட்ட விடயங்களைக் கொண்ட முழுமையான அறிக்கையொன்று ஒரு மாத காலத்துக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) தலைவர் பேராசிரியர் சரித ஹேரத், மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷவுக்குப் பணிப்புரை விடுத்தார்.

இது தொடர்பான விபரங்கள் அடுத்த கோப் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2018, 2019ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் மக்கள் வங்கி நேற்று (04) கோப் குழு முன்னிலையில் அழைக்கப்பட்டபோதே அதன் தலைவர் இந்தப் பணிப்புரையை விடுத்தார்.

பலனற்ற தகவல் சேகரிப்புத் திட்டத்துக்காக 402 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டமை குறித்து விசேட விசாரணை6 மில்லியன் ரூபாவில் கொள்வனவு செய்யப்பட்டு முன்னாள் பொது முகாமையாளர் பயன்படுத்திய வாகனம் அவருக்கு 113,698 ரூபாவுக்கு வழங்கப்பட்டமையும் புலப்பட்டது

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வங்கிக் கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கு கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ள நிலையில், பணம் செலுத்தும் நிலையில் இல்லாமல் அல்லது போதுமான சொத்துக்களை பிணையாக வைக்காமல் சில நிறுவனங்களால் 2,3,4 பில்லியன் ரூபா போன்று பாரிய தொகை கடன்களாகப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்திருப்பதாகவும், இதற்கு எந்த அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்தும் உறுப்பினர்கள் இங்கு கவனம் செலுத்தினர். எதிர்காலத்தில் கடன்களை வழங்கும்போது தற்பொழுது காணப்படும் உரிய நடைமறையின் கீழ் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், தேசிய சொத்துக்கள் குறித்து மேலும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மக்கள் வங்கியின் முன்னாள் பொது முகாமையாளர் 2019ஆம் ஆண்டு ஒய்வுபெறும் போது அவர் பயன்படுத்திய வாகனம் குறைந்த பெறுமதிக்குக் கொடுக்கப்பட்டமை தொடர்பில் இங்கு தகவல்கள் வெளிப்பட்டன. 2015.04.27 அன்று 16.6 மில்லியன் ரூபாவுக்குக் கொள்வனவு செய்யப்பட்ட மேர்சிரட்ஸ் பென்ஸ் ரக வாகனம் 2019ஆம் ஆண்டு 113,698 ரூபாவுக்கு முன்னாள் பொது முகாமையாளருக்கே வழங்கப்பட்டமையும் இங்கு புலப்பட்டது. வங்கியின் பொது முகாமையாளர் வருடத்துக்கு மேலான காலம் பயன்படுத்திய வாகனத்தை இவ்வாறு அவருக்கே வழங்குவது  வழமையாக இடம்பெறும் நிகழ்வு என்றும், பயன்படுத்திய காலத்துக்கு அமைய தேய்மானத்தைக் கருத்தில் கொண்டு சந்தையின் பெறுமதிக்கு அமைய இதற்கான விலை தீர்மானிக்கப்படும் என மக்கள் வங்கியின் தற்போதைய பொது முகாமையாளர் ரஞ்சித் கொடித்துவக்கு தெரிவித்தார்.

16 மில்லியன் ரூபாவுக்கு அண்மித்த பெறுமதியில் கொள்வனவு செய்யப்பட்ட வாகனம் ஒரு இலட்சத்து பதின்மூவாயிரம் ரூபாவுக்கு வழங்கப்பட்டமை எவ்வாறு என குழு இங்கு கேள்வியெழுப்பியது. வங்கியிலிருந்து வாகனங்களை வழங்குவது தொடர்பிலான கொள்கை தற்பொழுது மாற்றப்பட்டிருப்பதாகவும், பொது முகாமையாளர் அல்லது பிரதிப் பொது முகாமையாளர் அப்பதவியிலிருந்து விலகும்போது 25 வருடங்களுக்கு மேலான காலப் பகுதி பணியாற்றியிருந்தால் மாத்திரமே இவ்வாறு வாகனங்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பொது முகாமையாளர் இங்கு குறிப்பிட்டார்.

தேசிய சொத்துக்களைப் பயன்படுத்தும்போது மீண்டும் சிந்தித்து பணிப்பாளர் சபையின் அனுமதியுடன் தற்போதைய நடைமுறையில் உள்ள செயற்பாடு விசேட அனுமதியின் கீழ் மாத்திரம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய கோப் குழு, இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிடுமாறு நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தனவுக்குத் தெரிவித்தது. இதற்கமைய செயலாளரின் கீழ் உள்ள வங்கி அமைப்புக்கான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், பணிப்பாளர் சபையின் அனுமதியுடன் மட்டுமே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

இதற்கிடையில், 2015 இல் ஆரம்பிக்கப்பட்ட டேட்டா வேர் ஹவுஸ் திட்டத்துகு்கு ஏறக்குறைய 402 மில்லியன் ரூபா செலவிடப்பட்டபோதிலும், அது எதிர்பார்த்த அளவு பயன்படுத்தப்படவில்லை எனவும் தெரியவந்தது. இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய மக்கள் வங்கியின் அப்போதைய தலைவரால் நியமிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கான தலைவர் இத்திட்டத்தை முன்னெடுத்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்பது பற்றியும் இங்கு பேசப்பட்டது. இதற்கான சாத்தியக்கூற்று ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், பயன்படுத்த முடியாமல் உள்ள திட்டத்துக்காக ஏறக்குறைய 402 மில்லியன் ரூபா செலவிடப்பட்டமை பாரதூரமான விடயம் என்பதனால் அமைச்சு மட்டத்தில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கோப் குழுவின் தலைவர், நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார். மேலும் இவ்விடயம் குறித்து விசேட கணக்காய்வொன்றை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் கோப் குழுவின் தலைவர் கணக்காய்வாளர் நாயகத்திடம் தெரிவித்தார்.

பணிப்பாளர் சபையின் உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமான நிறுவனத்துக்கும், அதன் துணை நிறுவனங்களுக்கும் கடன் வழங்கப்பட்டு, அவற்றை செயற்படாத கடன்களாக மாற்றியமையும் இங்கு புலப்பட்டது. 31.12.2019 நிலவரப்படி, மொத்த கடன் தொகை  4.2 பில்லியன் ரூபாவாகும். இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினூடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வங்கியின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் நாளக கொடஹேவா, இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த, பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த அமரவீர, ஜகத் புஷ்பகுமார, ரோஹித அபே குணவர்த்தன, பாட்டலி சம்பிக ரணவக, கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா, கலாநிதி சரத் வீரசேகர, இரான் விக்ரமரத்ன, ஜயந்த சமரவீர, எஸ்.எம்.மரிக்கார், எஸ்.ராசமாணிக்கம், மதுர விதானகே மற்றும் பிரேம்நாத்.சி.தொலவத்த ஆகியோரும் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.சி விக்ரமரத்ன, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன, மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ, பொது முகாமையாளர் ரஞ்சித் கொடித்துவக்கு உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: