இலங்கைக்கு நிதி உதவி வழங்கிய இந்தியா சிறுவர்கள்

தமிழகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது உண்டியல் சேமிப்பு பணத்தினை இலங்கை மக்களுக்கு என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த பில்சா சாரா எனும் மாணவி வீட்டில் தனக்கென உண்டியலில் சேர்த்து வந்த 4400 இந்திய ரூபாய் பணத்தினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் வழங்கியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருவதால் இலங்கை மக்களுக்காக தனது சேமிப்பு பணத்தினை அன்பளிப்பாக வழங்குவதாக சிறுமி கூறியுள்ளார்.

சிறுமியின் இந்த செயற்பாட்டை மாவட்ட ஆட்சியாளர், பாராட்டி உள்ளார்.

மேலும் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஹசான் பாஷா. இவருக்கு ஹனா பாத்திமா(9), மற்றும் ஹர்பான் பாஷா(7) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.


இருவரும் குனியமுத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். ஹனா மற்றும் ஹர்பான் ஆகிய இருவரும் தமிழக முதலமைச்சர் அறிவித்த இலங்கை நிவாரண நிதிக்கு, உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை கோவை மாவட்ட கலெக்டர் சமீரனை நேரில் சந்தித்து கொடுத்தனர். அவர்களை கலெக்டர் சமீரன் பாராட்டினார்.


இது குறித்து குழந்தைகளின் தந்தை ஹசான் பாஷா கூறியதாவது:


ஹனா பாத்திமா மற்றும் ஹர்பானும் தங்களுக்கு கிடைக்கும் பணத்தை செலவு செய்யாமல், அதை ஒரு உண்டியலில் சேர்த்துவைத்து அதை ரம்ஜான் தினத்தன்று என்னிடமோ அல்லது எனது மனைவியிடமோ கொடுத்து ஏழை மக்களுக்கு உதவி செய்து வந்தனர்.


தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்களுக்கு தமிழக அரசு சார்பாக முதல்அமைச்சர் அறிவித்த இலங்கை நிவாரண நிதிக்கு, தாங்கள் சேமித்த பணத்தை வழங்கலாம் என ஹனா பாத்திமா மற்றும் ஹர்பான் என்னிடம் கூறினர். ஆகையால், கலெக்டரை சந்தித்து தாங்கள் உண்டியலில் சேமித்த பணத்தை நிவாரண நிதியாக வழங்கினர்.


இதனால், மிகவும் மகிழ்ச்சி அடைந்த மாவட்ட கலெக்டர் இருவரையும் பாராட்டினார். உண்டியலில் எவ்வளவு பணம் உள்ளது என்பது நாங்கள் எண்ணி பார்க்கவில்லை. ஹனா பாத்திமா மற்றும் ஹர்பான் இது போன்று நல்ல காரியங்களை இந்த சிறுவயதிலேயே செய்வது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது. மேலும், பொதுமக்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும்.


Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: