மாமாவை பிரதமராக்க பதவி விலக தயாராகும் மருமகன்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசின், வாராந்த அமைச்சரவைக் கூட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று (09) மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது இராஜினாமாக் கடிதத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ச கையளிப்பார். அதன் பின்னர் விசேட அறிவிப்பொன்றையும் விடுக்கவுள்ளார்.

பிரதமர் பதவியை துறக்கும் முடிவை மஹிந்த ராஜபக்ச இன்று காலை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முக்கியமான சில அமைச்சரவைப் பத்திரங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக, அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு, விடைபெறுவதற்கு திட்டமிட்டுள்ளார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசின்கீழ், பிரதம அமைச்சராக மஹிந்த ராஜபக்ச பங்கேற்கும் கடைசி அமைச்சரவைக் கூட்டமாக இது அமையவுள்ளது.

இந்நிலையில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்தும், மக்கள் மத்தியில் அவருக்கு அனுதாப அலையை உருவாக்கும் நோக்கிலும் அலரிமாளிகையில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர் இன்று அணி திரளவுள்ளனர். எதிர்காலத்தில் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்படுவார்களென எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

இன்றைய தினத்துக்குள் பிரதமர் பதவி துறக்காவிட்டால், நிதி அமைச்சர் அலி சப்ரி உட்பட மேலும் சில அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்வதற்கு தயார் நிலையில் உள்ளனர். மஹிந்த ராஜபக்ச பதவி விலக இழுத்தடிப்பு செய்தால்கூட அவரை அகற்றுவதற்கு நம்பிக்கையில்லாப் பிரேரணையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இப்பிரேரணையை விவாதத்துக்கு – வாக்கெடுப்புக்கு உட்படுத்தும் நாளை நிர்ணயிக்கப்பதற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு இன்று முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் இச்சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.

அவசரகால சட்டம் மற்றும் அடுத்தவாரத்துக்கான நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் சம்பந்தமாகவும் இதன்போது ஆராயப்படவுள்ளன. மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிப்பதற்கு 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளன.

பிரதமர் பதவி விலகிவிட்டால், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வலுவிழந்துவிடும். எனவே, ஜனாதிபதிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பது சம்பந்தமாகவும் இன்று ஆராயப்படும். அது குறித்தும் முடிவொன்று எடுக்கப்படும்.

இடைக்கால அரசில் பிரதமர் பதவியை ஏற்பதற்கு சஜித் பிரேமதாச மறுப்பு தெரிவித்துவிட்டார். பதவிகள் எதையும் ஏற்காமல், வெளியில் இருந்து ஆதரவு வழங்குவது சம்பந்தமாகவும் ஆராயப்பட்டுவருகின்றது. எனவே, தேசிய இணக்கப்பாட்டு அரசியல் பிரதமரை நியமிப்பது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன. புதிய பிரதமருக்கான பெயர் பட்டியலில் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவின் பெயரும் உள்ளது. அப்பதவிக்கு அவர் தெரிவானால், கரு நாடாளுமன்றம் வருவதற்காக அவரின் மருமகன் மயந்த திஸாநாயக்க, தனது எம்.பி. பதவியை இராஜினாமா செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

(கருஜயசூரியவின் மகளையே நவீன் திஸாநாயக்க மணம் முடித்துள்ளார். நவீனின் தம்பிதான் மயச்த திஸாநாயக்க.)

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி இருக்கும் சூழ்நிலையில், நாட்டில் ஆட்சியை பொறுப்பேற்றால், தன்னால் சுயாதீனமாக செயற்பட முடியாத நிலை ஏற்படும் என சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறு நடந்தால் குறுகிய காலப்பகுதிக்குள் ‘கோ ஹோம் சஜித்” என்ற கோஷத்துடன் மக்கள் தனக்கு எதிராகவும் வீதியில் இறங்கி போராடக்கூடும் எனவும் சஜித் அச்சம் வெளியிட்டுள்ளார்.

எனினும், தேசிய இணக்கப்பாட்டு அரசுக்கு எதிரணிகள் ஒத்துழைக்க வேண்டும் என மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர். சட்டத்தரணிகள் சங்கத்தினரும் 13 யோசனைகளின் அடிப்படையில் தீர்வு திட்டமொன்றை பயன்படுத்தியுள்ளனர். எனவே, தீர்க்கமானதொரு முடிவை எடுக்க வேண்டிய நிலை எதிரணிகளுக்கும் ஏற்பட்டுள்ளன.

இதற்கிடையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பிரான்ஸின், பாரிஸ் நகரிலும் ‘கோட்டாகோகம’ கிளை உருவாகியுள்ளது. காலி முகத்திடல் போராட்டக்களத்துக்குதான் கோட்டாகோகம என பெயரிடப்பட்டுள்ளது. நாட்டில் ஏனைய சில பகுதிகளிலும் அதன் கிளைகள் உள்ளன. எனினும், முதலாவது சர்வதேசக்கிளை நேற்று திறக்கப்பட்டுள்ளது.

ஆர்.சனத்

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: