இலங்கையில் கோட்டா கோ மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் என்ன?

இந்த கட்டுரையின் நோக்கம் பிரச்சினைகளை தெளிவுபடுத்துவதை விட தீர்வுகளை தேடுவதாகும்.

இலங்கையின் தற்போது உள்ள பொருளாதார நிலையை அவதானிக்கையில் ஓரிரு நாட்களில் சீரமைக்க கூடியவை அல்ல. தற்போது இலங்கையின் கடன்சுமை 51 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுகிறது.

நாம் இலங்கையின் பொருளாதாரத்தை சீரமைக்க முதலாவது அதன் நிர்வாக கட்டமைப்பில் ஊழல் மோசடியில் ஈடுபடாத சட்டவிரோத சொத்துக்கள் சேகரிக்காத நபர்களை ஆட்சியில் அமர்த்த வேண்டும். பொருளாதார மற்றும் ஏனைய விடயங்கள் சீரடைய முதல் முயற்சியாக அடுத்த நொடி முதல் நடக்க இருக்கும் சகல ஊழல், லஞ்சம் என்பவற்றை நிறுத்து வேண்டும். இந்த நாட்டில் உள்ள வீண் செலவினங்களை குறைக்க வேண்டும். இன மத வேறுபாடின்றி நாட்டு மக்களிடம் இலங்கையர் என்ற உணர்வில் இலங்கை நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு உதவிக் கரம் நீட்ட முன் வர வேண்டும். அத்தோடு நாட்டின் விவசாயத்துறையை முன்னேற்ற சகல வழிமுறைகளையும் மேற்கொள்ள வேண்டும். கைத்தொழில் அபிவிருத்தி திட்டத்தின் மூலம் அந்நிய செலாவணி பற்றாக்குறையை தீர்க்க வேண்டும்.

முதற்கட்டமாக நாம் நாடு என்ற ரீதியில் ஆட்சியாளர்களின் தகைமை, குணநலன், பண்பாடு உட்பட ஆட்சியின் குறிக்கோள், நாட்டின் பொருளாதார முறைமை உட்பட அனைத்து துறைகளிலும் சீர் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிலைமையில் உள்ளோம்.

இலங்கையில் தனியார் துறையிலும்தான், அரச துறையிலும்தான் சுத்திகரிப்பாளர் முதல் பணிப்பாளர்வரை தொழில்களையும் பதவிகளையும் பெறுவதாக இருந்தால் கல்வித்தகைமை, தொழில்தகைமை, குணநலம் என பல்வேறு தகைமைகளை அவதானித்துதான் தொழில்வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால் எவ்வித தகுதியும் இன்றி இலங்கையனாக இருந்தால் தற்போது இரட்டை பிராஜவுரிமை இருந்தாலும் தேர்தலில் மனுத்தாக்கல் செய்து தேர்தலில் களமிறங்கி மக்களின் வாக்குகளை மாத்திரம் கொண்டு பிரதேசசபை உறுப்பினர் முதல் அதி உயர் பதவியான ஜனாதிபதிவரை பதவிகளை பெறும் வாய்ப்புள்ளது. எனவே நாட்டின் பிரதேச சபை மற்றும் பாராளுமன்ற உட்பட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான குறைந்த பட்ச கல்வித் தகைமையாக உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்திருத்தலை உள்ளடக்க வேண்டும்.

மேலும் அமைச்சர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு, நியாயமற்ற மேலதிக கொடுப்பனவுகள், வாகன அனுமதி என்பவற்றை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அரச நிர்வாகிகளுக்கு சலுகைச் சட்டங்களை வழங்காது  நாட்டுச் சட்டத்தின் கீழ் நிர்வகிக்க வேண்டும்.

அத்துடன் பாராளுமன்றம், மாகாண சபை,  உள்ளூராட்சி சபை ஆகியவற்றின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் மேலும் அரச கட்டமைப்பில் உள்ள மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு சபையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையில் அரச வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வதில் அரசியல்வாதிகளின் தலையீடுகள் பாரிய அளவில் செல்வாக்கு செலுத்துகின்றன. மேலும் சில நியமனங்கள் தகைமைகளுக்கு பதிலாக அரசியல் செல்வாக்கிற்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு அரசியல்வாதிகள் அரச வேலைவாய்ப்பில் தலையீடு செய்வதை சட்டரீதியாக தடை செய்ய வேண்டும். தகுதிகளுடன் ஆட்சிக்கு வந்தாலும் நீதி நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் விட பிரதானமானது தான் திருட்டு ,கொள்ளை என்பவற்றில் ஈடுபடாமல் இருப்பது.

ஆளுந்தரப்பு, எதிர்தரப்பு என பாராளுமன்றம் முதல் உள்ளூராட்சி மன்றம் வரை உறுப்பினர்களாகவும் அமைச்சர்களாகவும் பதவி வகித்தவர்களில் பெரும்பாலானோர் சட்டவிரோதமான சொத்து சேகரிப்பு மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளமை தொடர்பான பல்வேறு அறிக்கைகள் பல்வேறு தரப்பினர்களினால் வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஊழல் மோசடி மற்றும் சட்டவிரோத சொத்து சேகரித்த அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டுவந்து, அவர்களின் அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சொத்துக்கள், வங்கிகளில் உள்ள வைப்புக்கள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீடுகள் அனைத்தும் அரசு பறிமுதல் செய்ய வேண்டும்.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்தையும் இலங்கையின் பொருளாதாரத்தின் வெளி நாட்டு மற்றும் உள் நாட்டு கடனை அடைக்கவும், பொருளாதார நெருக்கடியை சீரமைக்கவும் பயன்படுத்த முடியும். இலங்கையின் கடன் சுமை சுமார் 51 பில்லியன் அமெரிக்கா டொலராக உள்ளது. ஆனால் கடனில் சிறு பகுதி நாட்டின் அபிவிருத்தி திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதுடன் பெரும்பாலன பகுதி அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் சட்டவிரோத சொத்துகளாக வெளிநாடு மட்டும் உள்நாட்டில் குறிப்பிட்ட சில நபர்களின் தனிநபர் முதலீடுகளாக காணப்படுகிறது.

எனவே 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் தீவிற விசாரனைக்கு உற்படுத்தி, அவர்கள் சட்டவிரோதமாக சேகரித்த அனைத்து உடமைகளையும் அரசு பறிமுதல் செய்து, அதனை இலங்கையின் வெளிநாட்டுக் கடன்களை தீர்க்க பயன்படுத்தலாம்.

இலங்கை வெளிநாட்டுக் கடன்பொறியில் சிக்கிக் கொண்டிருப்பது மாத்திரமல்ல தன் நாட்டு விவசாயத்திற்கு பொருத்தமான நிலங்களை கூட உச்ச வினைதிறனில் பயன்படுத்த தெரியாத நிலையில் உள்ளது. அல்லது வெளிநாட்டுக் கடன்களை பெற்று அதன் மூலம் தரகு வருமானம் பெறும் நோக்கில் விவசாயம் நோக்கிய முதலீடுகளை ஊக்குவிக்காமல் சுற்றுலாத்துறை நோக்கி முதலீடுகளை பேருக்கு பின்னர் ஊக்குவித்த வண்ணமுள்ளது.

இலங்கை ஓர் இயற்கை வளமுள்ள நாடு விவசாய நாடு என நான் பாடசாலை காலத்தில் கற்றாலும் இலங்கையின் உற்பத்தியில் விவசாயம் வெறும் 7% தான் காணப்படுகிறது. மேலும் ன கைத்தொழில்  25% – 35% ஆகவும், சேவை மற்றும் சுற்றுலா  45% – 60% ஆகவும் காணப்படுகிறது. ஆனால் நாம் நமது பொருளாதார கட்டமைப்பில் விவசாயத்திற்கான பங்களிப்பை அதிகரிக்க வேண்டும்.

நாம் தற்போது பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்க அரசியல்வாதிகள் ஊழல்கள் அடிப்படைக் காரணமாக இருந்தாலும் உடனடிக் காரணியாக ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா பரவலைத்ததான் குறிப்பிட வேண்டும்.

ஈஸ்டர்தாக்குதலுக்கு முன்னர் இலங்கைக்கு மாதாந்தம் சராசரியாக  194,500 சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். அதுவே ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து சராசரி சுற்றுலா பயணிகள் வருகை 126,200 ஆக குறைவடைந்தது. மேலும் கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளின் மாதந்த வருகை 16,208 ஆக குறைவடைந்துள்ளது. இறுதியாக கோட்டா கோ ஹோம் ஆர்ப்பாட்டத்திற்கு முந்தைய மாதத்தில் 106,500 பேர் வருகை தந்து கொரோனாவிற்கு பின்னர் அதிக சுற்றுலா பயணிகள் வருகை தந்த மாதமாக 2022 மார்ச் பதிவு செய்தாலும் நாட்டின் அரசியல் ஸ்த்திரனத்தன்மை இன்மை காரணமாக ஏப்ரலில் 62,980 ஆக குறைவடைந்துள்ளது. இது 59% வீழ்ச்சியாகும்.

நாட்டில் சுற்றுலாத்துறையை மையமாகக் கொண்டு தொழில்வாய்ப்புகள் அதிகளவில் காணப்பட்டாலும் அவர்களுக்கான வருமானம் சுற்றுலா பயணிகளின் வருகையிலே தங்கியுள்ளது. ஆனால் நாட்டின் தேசிய பாதுகாப்பை அச்சுறுத்தும் விதமான சுற்றுலா பயணிகளை இலக்காக கொண்ட குண்டுத்தாக்குதல், உலகளாவிய கொரோனா பரவல், அரசியல் ஸ்தீரனத்தன்மை இன்மை என்பன நாட்டின் சுற்றுலா பயணிகள் வருகையில் வீழ்ச்சியை ஏற்படுத்தின. இவை நாட்டின்  2020 ஆம் ஆண்டு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட காரணமாக அமைந்தது.

இது நாம் நமது பிரதான வருமான மூலமாக சுற்றுலாவை மாத்திரம் மையமாகக் கொண்டு செயற்பட்டதன்  விளைவாகும். எனவே நாம் சுற்றுலா வெளி நாட்டு முதலீடுகளுடன் அவற்றுக்கு மேலதிகமாக விவசாயத்திலும்  அதே அளவு கரிசணை செலுத்த வேண்டும். ஏனெனில் இலங்கை ஒரு இயற்கை வளமுள்ள அதிலும் மரக்கறி, கிழங்கு, அரிசி போன்றவற்றை அறுவடை செய்வதற்கு தேவையான காலநிலை மற்றும் மண்வளங்களை கொண்ட நாடு. ஆனால் நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையவில்லை குறைந்தபட்சம் அரிசி உற்பத்தியிலும் தன்னிறைவு அடையவில்லை. மறுபுறம் பிரதான வருமான மூலங்களாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை எதிர்பார்த்தவர்களாகவும், உற்பத்திக்கு பதிலாக இறக்குமதியை சார்ந்தவர்களாகவும் தொழிற்படுகின்றோம்.

நாடு எதிர்காலத்தில் நிலைத்து நிற்கும் பொருளாதார அபிவிருத்தி அடைவதாக இருந்தால் ஆரம்பமாக அடிப்படைத் தேவையான உணவை உள்நாட்டில் முழுமையாக உற்பத்தி செய்து தன்னிறைவு அடைய வேண்டும். மேலும் அனைத்திற்கும் இறக்குமதியை சார்ந்திருக்காமல் உற்பத்தியை நோக்கி நகர வேண்டும். எனவே நாம் நமது பொருளாதார கட்டமைப்பில் சுற்றுலாத்துறைக்கான பங்களிப்பை போன்றே விவசாய துறைக்கான பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை வேண்டும்.

ஆனால் இலங்கையர்கள் குறிப்பாக இளைஞர்கள் விவசாயத்துறைக்கு ஆர்வம் காட்டுவதில்லை. ஏனெனில் நிலையான வருமானமின்மை மற்றும் விவசாயம் செய்து அறுவடை செய்யும் வரையான காலத்தில் நிலையான வருமானமின்மையால் விவசாய, வீட்டு செலவுகளுக்கு நுண்கடன்களை நாட வேண்டியுள்ளது. நாடாளாவிய ரீதியில் நுண் கடன் திட்டத்தில் பாதிக்கப்பட்டு 300 இற்கும் மேற்பட்ட தற்கொலைகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே அதற்கான மாற்றுத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக வயலிலும், தோட்டங்களிலும் வேலை செய்யும் விவசாயிகளுக்கு​​ அரசு மூலம் மாதச் சம்பளம் வழங்கும் விதமாகவும் விவசாயிகளின் உற்பத்தியை அரசாங்கம் எடுத்து விற்பனை செய்வது போல் கட்டமைப்பு மாற்ற வேண்டும். ஏனெனில் மாத மாதம் சம்பளம் பெறும் நிலை இருந்தால் விவசாயத்தில் ஆர்வமாக ஈடுபட விரும்புவர்.

என​வே கோட்டா கோ கம மூலம் அரச நிர்வாகம் மற்றும் பொருளாதார கட்டமைப்பில்மேற்படி மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு  மூலோபாய ரீதியில் திட்டமிட்டு ஆர்ப்பாட்டத்தை அறிவியல் ரீதியாக தொடர்வோம்.

குறிப்பு​ இங்கு முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகள் எந்தவொரு அமைப்பின் உத்தியோகபூர்வ கருத்தல்ல. எழுத்தாளர் தனக்கு அறிமுகமானவர்களிடம் பெற்றுக் கொண்ட கருத்துக்களை​ கொண்டு தொகுத்தாகும்.

இப்னு அஸாத்

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: