நிறைவேற்றதிகார ஒழிப்பை நிறைவேற்ற முடியாதிருப்பதேன்?

சுஐப் எம். காசிம்

பொருளாதார நெருக்கடியை போக்குவதற்கு உருவாக்கப்பட்டுள்ள ரணில் அரசாங்கத்தின் நகர்வுகள் அரசியல் அழுங்குப்பிடிக்குள்ளும் அமிழும் நிலைகள் தென்படத் தொடங்குகின்றன. ஏதோவொரு தயவுக்குள்தான் பிரதமர் இருக்கிறார் என்பதைக் காட்டவே இப்பிடிகள் பிடிக்கப்படுகின்றன. எவரும், எதிர்பாராமல் ஏற்பட்ட சில மாற்றங்கள்தான் இந்தப்பிடிகளை பலப்படுத்துவதுண்டு. பிரதி சபாநாயகர் தெரிவில் ஆரம்பான இந்தப்பிடிகள், உள்ளூராட்சி சபைகளைக் கலைக்கும் பிரதமரின் விருப்புக்கள் கண்டுகொள்ளப்படாதுள்ளதிலிருந்து, பொதுவெளியில் பேசப்படுமளவுக்கு பரபரப்பாகி வருகிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிடிகள்தான் இவை. இத்தனை வேகத்தில் வளர்ந்த இக்கட்சி எப்படி திடீரென ஒரு போர்வைக்குள் முடங்குவது?

உள்நாட்டு நிதி நெருக்கடிகளை சமாளித்து, சுமுக நிலையைக் கொண்டுவரும் தைரியம், திராணி மற்றும் தீர்க்கதரிசனம் பிரதமர் ரணிலுக்கு இருக்கிறதுதான். இந்த மவுசு உள்நாட்டில் அரசியல் செல்வாக்கை ஏற்படுத்தக் கூடாதே!இப்படிச் சிந்திக்கும் சில சக்திகளே இப்பிடியைப் பிடிக்கின்றன. இங்கு, இன்னொரு சக்தி ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைத்து, பாராளுமன்றத்தைப் பலப்படுத்தவும் பிரஸ்தாபிக்கிறது. இந்த இருதரப்புக்களின் எதிர்ப்பாடுகளையும் சமாளித்துத்தான் பிரதமரின் பயணம் புறப்பட்டுள்ளது. இந்தப் புறப்பாடுகளின் வெற்றி எதிர்ப்பாடுகளின் புரிதலில்தான் இருக்கிறது.

சர்வதேசத்திடம் விடுக்கப்பட்ட நிதியுதவிக் கோரிக்கைகளுக்கு திருப்தியான பதில் கிடைக்க வேண்டுமாக இருந்தால், இவ்விரு தரப்புக்களுக்குள்ளும் இப்புரிதல் ஏற்படுவது அவசியம். ஸ்திர அரசியல், உறுதியான நிதிக் கொள்கை, உள்நாட்டுக்குள் வரும் வெளிநாட்டுச் செலாவணிகளின் கணிசமான அதிகரிப்பை உறுதிப்படுத்தல் போன்ற நிபந்தனைகளிலிருந்தே இவை கிடைக்கவுள்ளன. எனவே, இந்தப்பிடிகள் நிலவும் வரைக்கும் நிதி வழங்குவதற்கான வெளிநாடுகளின் பிடிகளும் இருக்கவே செய்யும்.

எனவே, அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் இப்போது அவசியம்தானா?அவ்வாறு அவசியப்பட்டாலும் இதனால் ஏற்படும் இழுபறிகள் தேவைதானா? இத்தேவைகள்தானே தேவையில்லாமல் இப்பிடிகளைத் தோற்றுவிக்கின்றன.

பொருளாதார பிரச்சினைக்கும் அரசியலமைப்பு திருத்தத்துக்கும் உள்ள தொடர்புதானென்ன? ஒரு வேளை முறைகேடான அரசியல் நிர்வாகம் செய்தோரை தண்டிக்கவா இந்த திருத்தம்? இல்லை, இந்த அரசியல் நிர்வாகங்களாலா இவ்வாறு நிதி நெருக்கடிகள் ஏற்படுகின்றன? இந்த தெளிவுகள்தான் மக்களுக்கு தேவைப்படுகிறது.

இப்போதுதான், விடயம் வெளிச்சத்துக்கு வருகிறது. எந்த ஏழு மூளைக்காரரால் இந்த நெருக்கடிகள் வந்ததோ, அந்த மூளைதானே இந்தப் பிடிகளின் பின்னாலுமிருக்கிறது. இவ்வாறு இருந்தால் ரணிலின் விவேகம் எப்படி வெளிப்படும்?

நிறைவேற்று அதிகாரம் தனி நபரின் பிடியிலிருக்கக் கூடாது. தனி மனிதனால் எடுக்கப்படும் தீர்மானங்கள், நியமனங்கள் எல்லாம் நிர்வாகத் திறமையீனத்தை தோற்றுவிக்கும் என்ற கருத்துக்கள் எப்போதே எழுந்துவிட்டன. ஆனால், இப்போதுதான் காணக் கிடைத்திருக்கிறது.

இப்போது, 19 ஐ பலப்படுத்தும் 21 ஆவது திருத்தம் எப்படியிருக்கப் போகிறது என்பதைப் பார்ப்போம். இரட்டைப் பிரஜையுரிமை உள்ளோரின் அரசியல் பிரவேசத்தை பறித்தல், பாராளுமன்ற பேரவையை மீள உருவாக்கல், ஆளுநர்கள், தூதுவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட அரச உயர் பதவிகளை இப்பேரவையூடாக நியமித்தல், பாராளுமன்றத்துக்கு ஜனாதிபதி பொறுப்புக்கூறல் போன்ற திருத்தங்கள்தான் இந்த 21. ஆனால், இப்போதைக்கு இது நிறைவேறுமா?

அடிக்கடி எழும் அழுங்குப்பிடிகள், மூன்றிலிரண்டு பெரும்பான்மை, மேலும் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியப்படலாம் என்கிறார் சட்டமா அதிபர். ஒருவாறு, நிறைவேறிவிட்டதென்றால், நிறைவேற்றதிகாரமா இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம்? அவ்வாறானால், இந்த நிறைவேற்று அதிகாரத்தை ஒழிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற முடியாமலிருக்கிறதே! ஏன்?

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: