பயிரிடப்படாத நிலங்களை இளைஞர்களிடம் ஒப்படைக்குக – ஜனாதிபதி

வீட்டிலிருந்து கடமைகளை நிறைவேற்றுவதைப் போன்று, மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்குவது காலத்தின் தேவை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆட்களைப் பதிவு செய்தல், குடிவரவு, குடியகல்வு மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் உள்ளிட்ட பிற அரச நிறுவனங்களையும் மேலும் மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் பரவலாக்குவதன் மூலம் அந்த சேவைகளை மிகவும் திறமையாக வழங்க முடியும். இவ்வாறான முக்கிய நிறுவனங்களை ஒன்றோடொன்று இணைப்பதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி  சுட்டிக்காட்டினார்.

விவசாயம், உணவுப் பாதுகாப்பு, பொது மக்களுக்கான சேவைகளை வினைத்திறனாக்க புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்துதல், மாவட்ட மற்றும் பிரதேச மட்டங்களில் அனைத்து அரச சேவைகளையும் பரவலாக்கல் மற்றும் அரச செலவினத்தை முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் நேற்று (15) முற்பகல் கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி  இதனைத் தெரிவித்தார். 

உலகின் பல நாடுகள் உணவுப் பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றன. இந்நாட்டின் அறுவடை விநியோகத்தின்போது, சுமார் 40% சதவீதம் அழிக்கப்படுகிறது. இது தொடர்பில் கடுமையான அவதானம் செலுத்துவதன் மூலம் பாரியளவிலான உணவுப் பொருட்களை பாதுகாக்க முடியும் என ஜனாதிபதி  வலியுறுத்தினார்.

அறுவடையை விநியோகிப்பதில் இடைத்தரகர்களின் எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் விவசாயிக்கும் நுகர்வோருக்கும் நியாயமான விலையை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஜனாதிபதி  மேலும் சுட்டிக்காட்டினார்.
அரசுக்கு சொந்தமான,  பயிரிடப்படாத நிலங்களைக் கண்டறிந்து, பயிர்ச்செய்கையில் ஆர்வமுள்ள இளைஞர்களிடம் விரைவில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முப்படைகள், சிவில் பாதுகாப்புப் படை மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களமும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளில் ஈடுபடத் தயாராக உள்ளன. 

அந்த நிறுவனங்களையும் விவசாயத்தில் ஈடுபடுத்துவதன் மூலம் வெற்றிகரமான பிரதிபலன்களை அடைய முடியும்.
பயிர்ச்செய்கை புரட்சிக்கு இணையாக புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்திப் புரட்சியின் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. சூரியசக்தி மின் உற்பத்தியில் கவனம் செலுத்துவதன் மூலம் தற்போதைய மின்சார நெருக்கடியை விரைவாக நிவர்த்தி செய்வதற்கு நிறுவன ரீதியில் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர், பொது நிர்வாகம் மற்றும் விவசாய அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் என பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: