இலங்கையை நெருக்கும் கடன் கொடுத்த வெளிநாட்டு நிறுவனங்கள்

கலாநிதி எம். கணேசமூர்த்தி
பொருளியல் துறை
கொழும்பு பல்கலைக்கழகம்

கடந்த 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இலங்கையின் கடன் மீளச் செலுத்த முடியாத வங்குரோத்து நிலை தொடர்பில் அமெரிக்காவின் நியூயோர்க் மாவட்ட நீதிமன்றத்தில் 1:22 – CV 5199 என்ற பதிவெண்ணில் சிவில் வழக்கொன்று தொடரப்பட்டுள்ளது.

ஹமில்டன் ரிசர்வ் பேங்க் லிமிடட் (Hamilton Reserve Bank Limited) என்னும் அமெரிக்க வங்கியானது பிளெச்மர் பொன்டி மற்றும் ஓல்ட் (Bleichmar Fonti and Auld) என்னும் சட்ட ஆலோசகர்களின் பரிந்துரையின் பேரில் இலங்கைக்கு எதிராக இவ்வழக்கைத் தொடுத்திருக்கிறது. இதைத் தவிர இலங்கைக்கு கடன் வழங்கியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கூட்டாக இணைந்து ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளதாகவும் அந்த அமைப்பே கடனை மீளப்பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் எனவும் தகவல்கள் வந்துள்ளன.

இலங்கை IMF உடன் தற்போது ஈடுபட்டுவரும் பேச்சுவார்த்தைகளை வரவேற்பதாகவும் கடன் மீள் கட்டமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முறையாகவும் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் நியாயமானவையாகவும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவை அறிவித்துள்ளன.

எனவே இலங்கையின் இறைமைக் கடன் மீளச்செலுத்தாமைக்கு எதிரான சட்ட ரீதியானதும் கட்டமைப்பு ரீதியானதுமான ஏற்பாடுகள் இலங்கைக்குக் கடன் கொடுத்தோரினால் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு கடன் கொடுத்தோர் கூட்டாக அமைப்புகளை ஏற்படுத்தி சட்ட மற்றும் நிதி ஆலோசகர்களை நியமித்து விவகாரங்களைக் கையாள ஆரம்பித்துள்ளனர். அதேவேளை இந்த விவகாரங்களைக் கையாள்வதற்கு இலங்கையும் ஏற்கெனவே சட்ட ஆலோசகர் நிறுவனத்தையும் நிதி ஆலோசகர் நிறுவனத்தையும் நியமித்துள்ளது.

எனவே எதிர்வரும் மாதங்களில் இந்த சட்டப்போர்கள் அக்கப்போர்களாக இலங்கைக்கு வெளியில் தொடருமென எதிர்பார்க்கலாம். இந்நிலையில் ஹமில்டன் வங்கி ஏன் முந்திரிக் கொட்டையாக முந்திக்கொண்டு வழக்குத் தாக்கல் செய்யவேண்டும் என்ற கேள்வி எழலாம்.

இலங்கையில் உள்ள ஒருசில ஊடகங்கள் அது ஒரு வங்கியே அல்ல. வரிச் சலுகைகள் மிகுந்த சட்டக் கட்டுப்பாடுகள் அற்ற ஒரு தீவுக்கூட்டத்தில் தாபிக்கப்பட்ட ஒரு சிறிய நிறுவனம் என்று வழமைபோல வசைபாட ஆரம்பித்துள்ளன. ஆனால் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது அமெரிக்காவின் மையநகரப் பகுதியாகிய மான்ஹட்டனில் உள்ள நீதிமன்றத்திலாகும். எனவே முறைப்பாட்டாளரின் தன்மை பற்றியெல்லாம் கவனத்திற் கொள்ளாமல் வழக்கை ஏற்றுக் கொண்டிருப்பார்கள் எனக் கருத முடியாது.

இந்த வழக்கில் முன்னாள் மத்தியவங்கி ஆளுநர் கப்ரால் பெயர் குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து உடனடியாகவே அவர் தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லை என முற்றாக மறுத்துள்ளார். அத்துடன் சாதாரண ஒரு நபர்தான் பெற்ற கடனை மீளச் செலுத்தாதபோது கடன் கொடுத்தவர் வழக்குகளைத் தொடுப்பது வழமைதான் என்றும் “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா” என்ற பாணியில் பதிலளித்துள்ளமையைக் காணமுடிகிறது.

இலங்கைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ள ஹமில்டன் வங்கி என்ன குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது என்று பார்ப்போமாயின், இலங்கையின் மிக உயர்பதவிகளில் உள்ள அதிகாரிகளின் விருப்பத்தின் பேரிலேயே சர்வதேச இறைமைக்கடன் பிணைமுறிகளுக்கான கொடுப்பனவுகள் காலவரையறையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அதேவேளை உள்ளூர் வங்கிகளுக்கும் அவர்தம் விருப்பத்திற்குரியவர்களுக்கும் பிணைமுறிகள் மீதான கொடுப்பனவுகள் வட்டியும் முதலுமாக முழுமையாகச் செலுத்தப்படுவதாகவும் எதிர்வரும் ஜுலை மாதம் 25 ஆந் திகதி முதிர்வடையவுள்ள சர்வதேச இறைமைக்கடன் பிணைமுறிகளில் தமது நிறுவனம் முதலீடு செய்துள்ள USD 250,190,000 டொலர்களையும் அதற்குரிய வட்டியாகிய USD 7,349,331.25 அமெரிக்க டொலர்களையும் சேர்த்து மொத்தம் USD 257,539,331.25 டொலர்களை மீளச்செலுத்துமாறு உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தமது முதலீடுகளில் அதிகமானவை ஓய்வூதியக்காரர்களின் நிதிகள் எனவும் இப்போது இலங்கை கடன் மீளச் செலுத்தமுடியாது அறிவித்துள்ளதால் ஓய்வூதியக்காரர்கள் தமது முதலீட்டில் 80 சதவீதத்தை இழக்க நேரிடும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர பதவியில் இருந்த மற்றும் இன்னும் இருக்கின்ற பல அரசியல்வாதிகளுடைய தனிப்பட்ட சொத்துகள் எங்கெங்கு உள்ளன போன்ற தகவல்களும் இவ்வழக்கில் கூறப்பட்டுள்ளன. இவ்வழக்கு விசாரணைக்கு வரும்போது இலங்கையின் அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளின் சொத்துக் குவிப்புகள் பற்றிய தகவல்களும் வெளிவரக் கூடும்.

எது எவ்வாறிருப்பினும் அந்த வழக்குக்காகவும் கடன் மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்காகவும் கடன் கொடுத்தோரும் கடன் பெற்ற இலங்கையும் மிகப் பிரபலமான சட்ட ஆலோசகர்களையும் நிதி ஆலோசகர்களையும் நியமித்துள்ளனர். அவர்களது காட்டில்தான் உண்மையான மழை பெய்யப் போகிறது. ஏனெனில் இந்த நடவடிக்கைகளுக்காக அக்குறிப்பிட்ட நிறுவனங்கள் மிகப்பெரிய கட்டணங்களை அறவிடும். அக்கட்டணங்களையும் இலங்கையில் வாழும் ஒவ்வொருவரும் செலுத்த வேண்டியிருக்கும். இத்தகைய ஒரு அந்நியச் செலாவணி நெருக்கடியும் அதன் விளைவாக எழுந்த பொருளாதார நெருக்கடியும் இயற்கையாக எழுந்த வர்த்தக சகடோட்ட பின்னடைவினால் ஏற்பட்டதல்ல மாறாக அது இலங்கை தேடிப்பெற்றுக் கொண்ட நெருக்கடியாகும்.

உண்மையில் ஜனநாயக பாரம்பரியமிக்க ஒரு நாட்டில் இதுபோன்ற மிகப்பெரும் நெருக்கடிகள் ஏற்படும்போது அதற்கு தார்மீக ரீதியில் பொறுப்பேற்று அதற்குக் காரணமானவர்கள் பதவி விலக வேண்டும். அந்நாட்டின் நிதித்துறை பக்கச் சார்பின்றிச் செயற்பட்டு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதன் மூலம் மேலும் ஒரு தடவை அத்தகைய குற்றங்கள் எற்படாதவாறு தடுக்க வேண்டும்.

உலகின் ஜனநாக பாரம்பரியங்களைப் பின்பற்றும் முன்னணி நாடுகளில் இது தான் வழக்கில் உள்ள நடைமுறையாகும். 1970களில் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன் வோட்டர் கேட் ஊழலில் சிக்கி பதவி துறக்க நேரிட்டதும் அங்குள்ள ஜனநாயக நிறுவனங்கள் சரியாகச் செயற்பட்டமையால் தான். அந்த நாடுகளில் பொறுப்புக் கூறல் இல்லாமல் அரசாங்கப் பதவிகள் இல்லை. செய்யத்தகாததைச் செய்தமைக்கு மட்டுமன்றி சரியாகச் செய்ய வேண்டியதைத் செய்யாமல் தவறவிட்டமைக்கும் சேர்த்து பொறுப்புக் கூற வேண்டும். இலங்கை போன்ற நாடுகளில் பொறுப்புக் கூறலை அவமானமாகக் கருதும் போக்கே தொடர்கிறது.

இன்று இலங்கை எதிர்நோக்கியுள்ள மிகக் கேவலமான இந்த நிலைக்கு எவராவது பொறுப்புக் கூற முன்வருவார்களா? மக்களும் இந்த நிலைக்கு காரணம் என்று ஒருசில நாட்களுக்கு முன்னர் அரசியல் வட்டாரங்களில் இருந்து குரல்கள் ஒலித்தமையையும் கேட்க முடிந்தது. பசி பட்டினி நீண்ட வரிசைகள் கையறு நிலை என்று அல்லலுறும் இலங்கை மக்களுக்கு அவர்களது துயர்கண்டு அயலில் உள்ள தமிழ் நாட்டில் ஒரு குழந்தை தனது உண்டியலை உடைத்து நிதி தந்தது. ஒரு பிச்சைக்காரர் தன்னால் முடிந்த தொகையை உதவியாக வழங்கினார்.

தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தமது சம்பளத்தில் ஒரு பகுதியை நிதியாக வழங்கினர். ஆனால் இலங்கை அரசியலில் பில்லியன் கணக்கில் காசுபார்த்த அரசியல் பிரபலங்களும் அவர்தம் தொண்டர் அடிப்பொடிகளும் ஒரு சதத்தையேனும் மக்களுக்காக கிள்ளிப் போட்டிருப்பார்களா? மாறாக இந்த நெருக்கடியிலும் எவ்வாறு காசு பார்ப்பது என்பதே அவர்களது குறிக்கோளாக உள்ளது. தங்களது வயிறு வளர்ப்பதே அவர்களது குறிக்கோளாக உள்ளதே தவிர மக்களை எவ்வாறு இந்த நெருக்கடியிலிருந்து மீட்பது என்பது பற்றி சிந்தித்துச் செயல்படுவதாகத் தெரியவில்லை. கடந்த சிலவாரங்களாக இலங்கைப்பாராளுமன்ற அமர்வுகளை அவதானித்து வருபவர்களுக்கு இதைத்தவிர வேறெந்த முடிவுக்கும் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!
%d bloggers like this: